ரூ.5000 + ஸ்பெஷல் கிஃப்ட்.. அடித்து ஆடும் நெட்டிசன்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அதிமுக ஐடி விங்!
சேலம்: சமூக ஊடகங்களில் அதிமுகவிற்காக களமாடி, திமுக ஐடி விங்கிற்கு செம டஃப் கொடுக்கும் 200 பேருக்கு எடப்பாடி பழனிசாமி தன் கரங்களால் சிறப்பு தீபாவளி பரிசு வழங்கியுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில், அனைத்து கட்சிகளும், சமூக ஊடகங்களில் தீவிர பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றன. சமூக ஊடகங்களில் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு வருபவர்களை கட்சித் தலைமையும் ஊக்குவித்து வருகிறது. அண்மையில், சமூக வலைதள தன்னார்வலர்களை நேரில் சந்தித்து வாழ்த்தினார் திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின். திமுக ஐடி விங் சார்பாக, தடபுடல் விருந்துடன் அண்மையில் கூட்டம் நடைபெற்றது.

இந்நிலையில், சமூக வலைதளங்களில் அதிமுகவுக்கு ஆதரவாகச் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 200 பேரை நேரில் அழைத்து தீபாவளி பரிசு வழங்கியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது வீட்டுக்கு அழைப்பு விடுத்து அவர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கியுள்ளார்.
அதிமுக ஐடி விங் செயலாளர் ராஜ் சத்யன் குழுவினர், சமூக வலைதளங்களில் சிறப்பாகச் செயல்படும் அதிமுகவினரின் லிஸ்ட்டை தயார் செய்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் சேலத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு, இன்று தீபாவளி பரிசை தனது கரங்களால் வழங்கியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. 200 பேருக்கு ரூ.5000 மதிப்புள்ள கிஃப்ட் கார்டு, கள செயல்வீரர்களை அங்கீகரிக்கும் வகையில் ஸ்டார் பெர்ஃபாமர்ஸ் பேட்ச், ஸ்வீட் பாக்ஸ், பட்டாசு பாக்ஸ் வழங்கி பாராட்டியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.
இதுதொடர்பாக அதிமுக ஐடி விங் செயலாளர் ராஜ் சத்யன் வெளியிட்டுள்ள பதிவில், "இளைஞர்களின் எழுச்சி நாயகர், "புரட்சித் தமிழர்", அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க, அஇஅதிமுக- வின் முன்கள வீரர்களாக சமூக வலைதளங்களில் கார்ப்பரேட் அரசியல் கம்பெனிகளையும், எதிர்மறை சித்தாந்தங்களுடன் செயல்பட்டவர்களையும் புறமுதுகிட்டு ஓடச் செய்து, எந்தக் களமானாலும் அங்கு வெற்றி அண்ணா திமுகவிற்கு மட்டும் தான் என்பதை நிரூபித்து, ஓய்வறியா தங்கள் உன்னத உழைப்பால் சமூக வலைத்தளங்களில் சிறப்பான பணியாற்றி கொண்டிருக்கும், அஇஅதிமுக எனும் பெருங்குடும்பத்தின் 2023-ஆம் ஆண்டிற்கான 200 சிறந்த களவீரர்களை அங்கீகரிக்கும் விதமாக அவர்கள் அனைவருக்கும்,

கழக இல்லங்களின் மூத்தவராக, கழக பொதுச் செயலாளர் அண்ணன் "எடப்பாடியார்" அவர்கள் தங்கள் பொற்கரங்களால் திபாவளி பரிசாக ரூ.5000-க்கான VISA gift card, அவர்களின் சமுக வலைதள கழக பணியை அங்கீகரிக்கும் STAR PERFORMERS பேட்ஜ், இனிப்புகள் மற்றும் பட்டாசுகள் வழங்கி வாழ்த்துகிறார். களமும் நமதே!! வெற்றியும் நமதே!!" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications