வங்கிக் கணக்கில் ரூ.500.. சம்மனில் சாதி.. சாஸ்திரி பவனுக்கு அலறியோடிய சேலம் விவசாயிகள்: பாஜக புள்ளி?
சேலம்: 2 விவசாயிகளை சட்டவிரோத பணப்பரிவர்த்தனைக்காக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி விசாரணை நடத்தியுள்ள சம்பவத்திற்கு. அரசியல் கட்சியினர் கடுமையான எதிர்ப்புகளையும், கண்டனங்களையும் தெரிவித்து வருகிறார்கள்.. என்ன நடந்தது சேலத்தில்?
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ளது அப்பம்மா சமுத்திரம் என்ற ஊராட்சி.. இங்கு அண்ணன் - தம்பி 2 பேர் வசித்து வருகிறார்கள்.. இவர்கள் 2 பேருமே விவசாயிகள். கண்ணையன் + கிருஷ்ணன் என்பது இந்த சகோதரர்களின் பெயர். இவர்கள் பட்டியலின விவசாயிகளாவர்.. இவர்களுக்கு சொந்தமாக 6.5 ஏக்கர் விவசாய நிலம் இருக்கிறது.

பாஜக : இந்த நிலத்தை பாஜகவின் சேலம் கிழக்கு மாவட்ட இலக்கிய அணி செயலாளர் குணசேகரன் என்பவர் அபகரிக்க முயன்றதாக சொல்கிறார்கள்.. இதற்காக, 2 விவசாயிகளுக்கும் தொடர்ந்து டார்ச்சர் தந்து கொண்டே வந்ததாகவும், கொலை மிரட்டல் விடுத்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. அதனால், இதுதொடர்பாக போலீசிலும் புகார் தரப்பட்டு, கோர்ட்டிலும் இது தொடர்பான கேஸ் நடந்து வருகிறது.
இந்நிலையில், கடந்த ஜூலை 5ம் தேதி சகோதரர்கள் இருவருமே, சென்னைக்கு வரவேண்டும் என்று அவர்களது சாதிப் பெயரை குறிப்பிட்டு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.. அந்த சம்மனில், வீட்டு நம்பரும் இல்லையாம், வேறு எந்த விவரங்களும் இல்லையாம். வெறும் சாதி பெயரை மட்டுமே குறிப்பிட்டு சம்மன் வந்திருக்கிறது.

இதனால், பதற்றமடைந்த சகோதரர்கள் 2 பேரும், தங்களது ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகங்களை எடுத்துக்கொண்டு, சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு நேரில் சென்று ஆஜராகியிருக்கிறார்கள்.. ஜூலையில் சம்மன் அனுப்பிய விவகாரம் இப்போதுதான், வெளியே தெரியவந்துள்ளது.. தங்களது 6.5 ஏக்கர் நிலத்தை அபகரிக்க பாஜக நிர்வாகி முயற்சி செய்வதாகவும் 2 பேருமே குற்றஞ்சாட்டியிருக்கிறார்கள்.
வங்கி கணக்கு: சாப்பாட்டுக்கே கஷ்டப்படுவதாகவும், தங்களது வங்கி கணக்கில் வெறும் 500 ரூபாய் மட்டுமே இருப்பதாகவும், தங்கள் மீது சட்டவிரோத பணப்பரிவர்த்தனை செய்ததாக குற்றம்சாட்டி சம்மன் வந்துள்ளதாகவும் விவசாயிகள் குமுறுகிறார்கள்..
அதுமட்டுமல்ல, பாஜக பிரமுகருக்கு நிலத்தை தராததால்தான், இப்படி சம்மன் அனுப்பியிருப்பதாகவும், அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரான தங்களை அதிகாரிகள் மிரட்டியதாகவும் விவசாயிகள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு காவல்துறை இயக்குனரிடம், 2 விவசாயிகளும் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின்பேரில் விசாரணையும் நடக்கிறது.
சாதிப்பெயர்: இதனிடையே, சாதிப்பெயரை குறிப்பிட்டு எதற்காக சம்மன் அனுப்ப வேண்டும்? வங்கி கணக்கில் வெறும் 500 ரூபாய் மட்டுமே வைத்திருக்கும் விவசாய சகோதரர்களை சட்டவிரோத பணப்பரிவர்த்தனை செய்தது குறித்த விசாரணைக்காக ஏன் ஆஜர் செய்ய வேண்டும்? என்ற எதிர்ப்புகள் சோஷியல் மீடியாவில் கிளம்பி உள்ளன..
அதாவது, விவசாயிகளின் 6.5 ஏக்கர் நிலத்தை, பாஜக நிர்வாகி குணசேகரன் வாங்க முயற்சித்ததாக தெரிகிறது.. ஆனால், நிலம் தங்களுடைய அப்பா சின்னையா வாங்கியது என்பதால், அவரது ஞாபகமாக யாருக்கும் விற்பனை செய்ய மாட்டோம் என்று சகோதரர்கள் சொல்லிவிட்டார்களாம்.
அதிர்ச்சி: இருந்தாலும், படிப்பறிவு இல்லாத ஏழைகளான கண்ணையன் மற்றும் கிருஷ்ணன் ஆகியோர் நிலத்தை விற்பனை செய்ய முன்பணமாக ரூ.1 லட்சம் பெற்றதாக போலியாக ஒரு பத்திரம் தயாரித்து, அதன் மூலம் அவர்களின் 6.5 ஏக்கர் நிலத்தை அபகரிக்க முயற்சி செய்ததாக சொல்கிறார்கள். இதற்கு பிறகுதான், அதிர்ச்சியடைந்த சகோதரர்கள் போலீசில் புகார் தந்துள்ளனர்.
தங்களுக்கு அனுப்பப்பட்டிருந்த சம்மன் குறித்த விவரம் எதுவுமே தெரியாமல், அந்த சம்மனை எடுத்துக் கொண்டு, தங்களுக்கு தெரிந்த பெண் வழக்கறிஞர் பிரவினாவிடம் விவசாயிகள் அணுகியிருக்கிறார்கள்.. அந்த பெண் வழக்கறிஞர், அதை படித்து பார்த்தபோதுதான், அதில் சாதி பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது தெரியவந்திருக்கிறது.
அமலாக்கத்துறை: படிக்க தெரியாத விவசாயிகளின் வழக்கறிஞராகவே தான் உடன் வந்ததாகவும், விசாரணைக்கு தன்னையும் அனுமதிக்க கோரி பெண் வழக்கறிஞர் பிரவினா, அமலாக்கத்துறை அலுவலகத்தில் பல முறை வாதாடியும்கூட அதிகாரிகள் ஏற்கவில்லையாம்..
சம்பந்தப்பட்ட விவசாயிகள், மத்திய அரசு தரும் 6 ஆயிரம் நிதி உதவியை பெற்று வருகிறார்களாம்..ரேஷனில்தான் அரிசி வாங்கி சமைத்து சாப்பிட்டு வருகிறார்களாம். அப்படியிருக்கும்போது, எந்த அடிப்படையில் ஏழை விவசாயிகளுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியது? என்றும் கேட்டு துளைத்தெடுத்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications