தனியார் பள்ளி பேருந்தில் சீட் பிடிப்பதில் தகராறு! 9ஆம் வகுப்பு மாணவனின் நெஞ்சில் குத்தியதால் பலி
சேலம்: சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டியில் தனியார் பள்ளி வாகனத்தில் இருக்கை பிடிப்பதில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் 9ஆம் வகுப்பு மாணவர் பலியாகிவிட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம், எடப்பாடியை அடுத்து பூலாம்பட்டி ரோடு பகுதியில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்கு பேருந்துகளும் உள்ளன. இந்த பேருந்தில் பல மாணவர்கள் பயணம் செய்து வருகிறார்கள்.

அந்த வகையில் நேற்று பள்ளி முடிந்து மாலை வீடு திரும்புவதற்காக பள்ளி பேருந்துகள் தயார் நிலையில் இருந்தன. அப்போது அங்கு 9ஆம் வகுப்பு மாணவர்கள் பேருந்தில் ஏற வந்தனர். அவர்களுக்குள் இருக்கை பிடிப்பதில் தகராறு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
அப்போது கந்தகுரு என்ற மாணவனின் நெஞ்சில் மற்றொரு மாணவர் ஓங்கி அடித்ததாக சொல்லப்படுகிறது. இதில் கந்தகுரு மயங்கி விழுந்துள்ளார். உடனே அவர் எடப்பாடியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.
ஆயினும் அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை இறந்துவிட்டார். இதையடுத்து மாணவரின் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு வாக்குவாதம் நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து போலீஸாரும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கந்தகுருவை தாக்கிய மாணவர் யாரென தெரியவில்லை. அவர் மீது எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து இனிதான் தெரியவரும். மேலும் இந்த சம்பவம் குறித்து தனியார் பள்ளி வாகனத்தில் இருந்த பொறுப்பாளர்கள், டிரைவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பொதுவாக பள்ளி வாகனங்களில் வரிசையாக நிற்க வைத்து ஏற வைப்பது வழக்கம். இது கூட்ட நெரிசலை தடுக்கும் என்பதால் இப்படி ஒரு ஏற்பாடு! மேலும் இது வரிசையில் நின்று எதையும் பெற வேண்டும் என்ற ஒரு பழக்கத்தையும் கற்றுக் கொடுக்கும்.
அப்படியிருக்கும் போது இந்த பள்ளி வாகனத்தில் கும்பலாக ஏற யார் அனுமதித்தார்கள். பள்ளி பேருந்துகளுக்கென இருந்த பொறுப்பாளர், இவர்கள் சண்டையிடும் வரை என்ன செய்துக் கொண்டிருந்தார் போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications