வீரபாண்டி ஆறுமுகத்தின் குடும்ப உறவுகளுக்குள் அரசியல் பனிப்போர்... பைசல் செய்யும் கே.என்.நேரு..!
சேலம்: மறைந்த வீரபாண்டி ஆறுமுகத்தின் குடும்ப உறவுகளுக்குள் நிகழும் அரசியல் கலாட்டாவை பைசல் செய்து வருகிறார் திமுக முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேரு.
பனைமரத்துப்பட்டி ஒன்றிய 9-வது வார்டு இடைத்தேர்தலை மையமாக வைத்து தொடங்கிய பஞ்சாயத்து மறைந்த வீரபாண்டி ஆ.ராஜாவின் இடத்திற்கு அடுத்து யார் என்பது வரை நீள்கிறது.
மறைந்த வீரபாண்டி ஆறுமுகம் மீது கே.என்.நேரு தனிபெரும் மரியாதை வைத்திருப்பதால், அவரே இந்த விவகாரங்களில் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

சேலத்துச் சிங்கம்
கருணாநிதியால் சேலத்துச் சிங்கம் என வர்ணிக்கப்பட்டவர் வீரபாண்டி ஆறுமுகம். மனதில் தோன்றிய கருத்தை கருணாநிதியிடமே நேருக்கு நேர் தெரிவித்து உரிமையுடன் விவாதம் செய்யும் இடத்தில் இருந்தவர். கருணாநிதியின் பயணங்களில் அவருக்கு பேச்சுத்துணையாக தமிழகமெங்கும் பயணித்தவர். கே.என்.நேரு உள்ளிட்ட இன்னும் சிலரை 1989-பேட்ச் அமைச்சரவையில் கருணாநிதியிடம் பேசி இணைத்தவர்.

அதிகாரமிக்க
இப்படி திமுகவில் அதிகாரமிக்கவராய் வலம் வந்தவர் வீரபாண்டி ஆறுமுகம். இவரது மறைவுக்கு பிறகு ஒருங்கிணைந்த சேலம் மாவட்டம் கட்சியின் நிர்வாக வசதிக்காக மூன்றாக பிரிக்கப்பட்டு சிவலிங்கம், வீரபாண்டி ஆ.ராஜா, பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன் என மூன்று பேர் மாவட்டச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டனர். தந்தையை போல் மகன் வீரபாண்டி ஆ.ராஜாவும் மாவட்டத்தில் தில்லாக அரசியல் செய்ததோடு, தலைமையிடம் தைரியமாக வாதிட்டு வந்தார்.

நிழலாக வலம்
இந்நிலையில் கடந்த 2019 ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கு பிறகு வீரபாண்டி ஆ.ராஜா தேர்தல் பணிக்குழு செயலாளராக நியமிக்கப்பட்டு மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டார். இவருக்கும் ஸ்டாலினுக்கும் உறவுப்பாலமாக இருந்தவர் கே.என்.நேரு. இந்நிலையில், வீரபாண்டி ஆ.ராஜாவுடன் நிழலாக வலம் வந்தவர் பாரப்பட்டி சுரேஷ்குமார். வீரபாண்டி ஆறுமுகத்தின் உறவினரான இவருக்கும் அவரது இளைய மகன் பிரபுவுக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம் தான்.

இடைத்தேர்தல்
இதனிடையே பனைமரத்துப்பட்டி ஒன்றியம் 9-வது வார்டு இடைத்தேர்தலில் பாரப்பட்டி சுரேஷ்குமார் போட்டியிடும் நிலையில் அவரை எதிர்த்து சுயேச்சையாக அவரது சொந்த அண்ணியான ஸ்ரீதேவி போட்டியிடுகிறார். ஸ்ரீ தேவியின் பின்னணியில் பிரபு இருப்பதாக பாரப்பட்டி சுரேஷ்குமார் குற்றஞ்சாட்டும் நிலையில் அதனை பிரபு தரப்பு அடியோடு மறுத்து வருகிறது. இந்த விவகாரம் கே.என்.நேரு வரை சென்றதை அடுத்து ஒரு வழியாக சுரேஷ்குமாரை கட்சியினர் ஆதரிக்குமாறு பைசல் செய்து வைத்தார்.

பஞ்சாயத்து
இப்போது அதற்குள் அடுத்த பிரச்சனை ஒன்று உருவாகவுள்ளது. வீரபாண்டி ஆ.ராஜா மறைந்துவிட்டதால் அவரது இடத்திற்கு அதாவது வீரபாண்டி ஆறுமுகத்தின் குடும்ப பிரதிநிதி என்கிற வகையில் பிரபுவுக்கு தலைமை கவுரமான பதவி வழங்கும் என அவரது ஆதரவாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இது போன்று நடந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக உள்ள பாரப்பட்டி சுரேஷ்குமார் தரப்பு மீண்டும் பஞ்சாயத்தை கே.என்.நேரு வசம் கொண்டு செல்லவுள்ளது.












Click it and Unblock the Notifications