சேலத்தில் அதிக நேரம் உடற்பயிற்சி செய்த ஜிம் உரிமையாளர்.. குளியலறையில் பிணமாக மீட்பு
சேலம்: சேலத்தில் அதிக நேரம் உடற்பயிற்சி செய்த ஜிம் உரிமையாளர் மகாதிர் மகமுத் பரிதாபமாக உயிரிழந்தார்.. அவர்து உடல் குளியல் அறையில் கிடந்தது. சேலத்தில் 31-வது வார்டு தி.மு.க. முன்னாள் செயலாளரான மகாதிர் மகமுத் தினமும் உடற்பயிற்சி நிலையத்திற்கு சென்று வந்துள்ளார். சம்பவம் நடந்த அன்று தலை மற்றும் காதில் ரத்தம் வழிந்த நிலையில் இறந்து கிடந்துள்ளார். இதுபற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
சேலம் கோட்டை பகுதியை சேர்ந்த 35 வயதாகும் சேட்டு என்ற மகாதிர் மகமுத் 31-வது வார்டு தி.மு.க. முன்னாள் செயலாளர் ஆவார். இவர் சேலம் குகை ஆற்றோர வடக்கு தெருவில் சொந்தமாக உடற்பயிற்சி நிலையம் நடத்தி வருகிறார். இவர் திருமணமாகி அவருடைய மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.

தினமும் தன்னுடைய ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்வதை சேட்டு வழக்கமாக வைத்துள்ளார். அப்படித்தான் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் சேட்டு என்ற மகாதிர் மகமுத் ஜிம்மில் உடற்பயிற்சியில் ஈடுபட்டார். இரவு 8 மணி அளவில் ஜிம்முக்கு வந்த அனைவரும் உடற்பயிற்சியை முடித்துக்கொண்டு சென்று விட்டனர். ஆனால் சேட்டு மட்டும் தொடர்ந்து உடற்பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார்.
பின்னர் ஜிம்மில் உள்ள குளியல் அறையில் சேட்டு குளித்தார். வெகுநேரம் ஆகியும் குளியல் அறையில் இருந்து அவர் வெளியே வரவில்லை. இதனால் அவருடைய கார் டிரைவர் முஸ்தபா ஜிம்முக்கு சென்று சேட்டுக்கு என்னாச்சு என்று பார்த்துள்ளார். அங்கு அவர் இல்லை. சந்தேகம் அடைந்த அவர் குளியல் அறையை பார்த்தபோது அது உள்புறமாக பூட்டப்பட்டு இருப்பதை கண்டனர். குளித்துக்கொண்டிருப்பார் என்று சிறிது நேரம் காத்திருந்தார். ஆனால் அவர் குளிப்பதற்கான எந்தவித சத்தமும் கேட்கவே இல்லை..
இதனால் சந்தேகம் அடைந்த முஸ்தபா குளியல் அறை கதவை தட்டினார். பதில் இல்லை. இதையடுத்து அவர் சத்தம் போட்டார். அருகில் இருந்தவர்கள் சத்தம் கேட்டு ஜிம்மிற்கு ஓடி வந்தனர். அவர்கள் அனைவரும் குளியல் அறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது தலை மற்றும் காதில் ரத்தம் வழிந்த நிலையில் சேட்டு மூச்சுபேச்சு இல்லாமல் அசைவின்றி தரையில் கிடந்திருக்கிறார் உடனே டிரைவர் முஸ்தபா மற்றும் அங்கிருந்தவர்கள் பதறி அடித்துக்கொண்டு அவரை தூக்கிக்கொண்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவரை டாக்டர்கள் பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த சேலம் போலீசார் ஜிம்மிற்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்கள் இதுகுறித்து போலீசார் கூறும்போது, அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சியில் ஈடுபட்ட அவர் நீராவியில் குளித்து உள்ளார். இதனால் மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்து அவர் இறந்திருக்கலாம் என்று தெரிவித்தனர். இதுகுறித்து அவருடைய நண்பர்கள் கூறும்போது, தினமும் கடினமாக உடற்பயிற்சியில் ஈடுபட்டு உடலை ஆணழகன் போல் கட்டுக்கோப்பாக வைத்திருந்தார். அதிகப்பட்சமாக 150 முதல் 200 கிலோ வரை எடை தூக்குவார் என்று தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து சேலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications