தேவரின் வாரிசா? ‘இவங்களை’ வச்சு எப்படி கட்சி நடத்துறது! உளறல் ’மாஜி’க்களால் கடுப்பான எடப்பாடி!
சேலம் : அதிமுகவில் தங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் சில சம்பவங்கள் அடுத்தடுத்து நடைபெற்று வரும் நிலையில் சில 'மாஜி' அமைச்சர்களின் உளறல் பேச்சுகளால் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பூட்டு போட முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில் திடீரென ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு சில சாதகமான நிகழ்வுகள் நடைபெற்று வருவதாக தேனி தரப்பு தொடர்ந்து தங்களது ஆதரவாளர்கள் மூலம் அரசியல் களத்திலும் சமூக வலைதளங்களிலும் செய்திகளை பரப்பி வருகின்றனர்.
குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக பல்வேறு தகவல்கள் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகிறது. அதிமுக கொங்கு மண்டல கட்சியாக மாறி வருவதாகவும் தென் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை எடப்பாடி பழனிச்சாமி தரப்பு ஒதுக்கி வருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

அதிமுக உட்கட்சி மோதல்
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற விசாரணையில் இருக்கும் நிலையில் அந்தத் தீர்ப்பு ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி தரப்பின் அரசியல் எதிர்காலத்தை முடிவு செய்யும் என கூறப்படுகிறது. நிகழ்வுகள் இப்படி இருக்க தங்கள் தரப்பு நிர்வாகிகளை தக்கவைத்துக் கொள்ள எடப்பாடி பழனிச்சாமி தரப்பும், எடப்பாடி தரப்பில் இருக்கும் நிர்வாகிகளை இழுக்க ஓபிஎஸ் தரப்பும் தீவிரமாக முயன்று வருகிறது. இந்த நிலையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி அதிமுகவை பொருத்தவரை பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

தேவர் ஜெயந்தி
தேவர் ஜெயந்தி நிகழ்ச்சியில் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் பங்கேற்ற நிலையில் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்ளாதது தென்மாவட்ட நிர்வாகிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. இதன் வெளிப்பாடு தான் ஆர்பி உதயகுமாருக்கு அங்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது என்கின்றனர் தென் மாவட்ட நிர்வாகிகள். அதே நேரத்தில் இந்த நிகழ்வை கனகச்சிதமாக தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் ஓ பன்னீர்செல்வம். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தின் போது நூற்றுக்கணக்கான கார்களில் 500க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களோடு நேரில் வந்து மரியாதை செலுத்திய ஓ.பன்னீர்செல்வம் வெள்ளிக் கவசத்தை வழங்கி இருக்கிறார்.

எடப்பாடி தரப்பு
இது எடப்பாடி தரப்பு நிர்வாகிகளையே ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது. இதுகுறித்த தகவல்கள் எதுவும் வெளிவராத வகையில் பார்த்துக்கொண்டார் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனான ஜெயப்பிரதீப். வெள்ளிக்கவசம் தயாரிக்கும் பொறுப்பை தானே கவனித்துக் கொண்டதோடு ஓபிஎஸ் அறிவிக்கும் வரை யாருக்கும் தெரியாமல் ரகசியம் காத்தார். இந்த நிலையில் ஓபிஎஸ் வெள்ளிக்கவசம் அளித்ததால் முக்குலத்தோர் சமுதாயத்திடையே செல்வாக்கு அதிகரித்துள்ளதால் எடப்பாடி தரப்பு அதிருப்தியில் இருக்கிறது. சில முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடி தரப்புக்கு ஆதரவு திரட்டுவது போல பன்னீர்செல்வம் தரப்பை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

உளறல் பேச்சு
ஏற்கனவே தேவர் நினைவிடத்தில் இருந்து ஆர்பி உதயகுமார் விரட்டப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் திண்டுக்கல்லை சேர்ந்த மூத்த அமைச்சர் ஒருவர் பொதுக்கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பை மிகக் கடுமையாக ஒருமையில் விமர்சித்தார். கொள்ளையடித்த பணத்தில் வைர கவசமே வழங்கலாமே எனக் கூறியதோடு வெள்ளிக்கவசம் வழங்குவதற்கு ஓ.பன்னீர்செல்வம் என்ன தேவரின் வாரிசா? எனவும் கூறினார் இது மேடையில் இருந்த முக்குலத்து நிர்வாகிகளை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியது. இது ஒருபுறம் இருக்க ஓ.பன்னீர்செல்வத்தை தேவரின் வாரிசு என கேள்வி எழுப்ப வேண்டிய அவசியம் என்ன என அந்த 'மாஜி' அமைச்சருக்கு பல்வேறு சமுதாய அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

மீண்டும் வாய்ப் பூட்டு
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தின் போது மதுரையைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும் திண்டுக்கல்லை சேர்ந்த முன்னாள் அமைச்சரும் உளறல் பேச்சுகளுக்கு பெயர் போனவர்கள். அவர்களை வைத்து சமூக வலைதளவாசிகளுக்கு பல கண்டண்டுகள் கிடைத்தது. தேர்தலின் போதும் அவர்களது அட்ராசிட்டிகளுக்கு அளவில்லாமல் போன நிலையில் ஆட்சியை இழந்த பிறகு அமைதி காத்து வந்தனர். இந்த நிலையில் தற்போது எடப்பாடி தரப்பை மகிழ்ச்சியில் ஆழ்த்த வேண்டும் என வாய்க்கு வந்ததை உளறி வரும் நிலையில் அது பல தரப்பினரை எரிச்சலுக்கு உள்ளாக்கி வருவதை உணர்ந்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. குறிப்பாக திண்டுக்கல் மாஜி அமைச்சரின் பேச்சு பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் கடந்த ஆண்டு போல தற்போதும் அவர்களுக்கு வாய்ப் பூட்டு போட முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications