காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை.. ஒகேனக்கலில் நீர் வரத்து ஒரே நாளில் இருமடங்காக அதிகரிப்பு.. விவசாயிகள் நிம்மதி
கிருஷ்ணகிரி: தமிழக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து இன்று வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. கனமழை பெய்து வந்தால் நீர் வரத்து தொடர்ந்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தண்ணீர் மேட்டூர் அணைக்கு நாளை காலை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காவிரி நீர்பிபிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக போதிய மழை பெய்யாததால், ஒகேனக்கலில் நீர் வரத்து குறைந்தது. ஏற்கனவே மேட்டூர் அணையில் 45 நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் திறந்துவிடப்படும் என்ற அறிவிப்பால் கவலையில் உள்ள விவசாயிகளுக்கு நீர் வரத்து குறைவால் மேட்டூர் அணை நீர் மட்டம் சரியத்தொடங்கியது மேலும் கவலையை அளித்தது.

நீர் வரத்து இரு மடங்கு அதிகரிப்பு
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தமிழக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான பிலிகுண்டுலு, ராசிமணல், அஞ்செட்டி, கேரட்டி ஆகிய பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இதனால், நேற்று வரை ஒகேனக்கலுக்கு வினாடிக்கு 7 ஆயிரம் கன அடி வந்து கொண்டிருந்த தண்ணீர் அப்படியே இரு மடங்கு ஆனது. இன்று காலை 6 மணி நிலவரப்படி ஒகேனக்கலுக்கு நீர்வரத்து வினாடிக்கு 7ஆயிரம் கன அடியாக இருந்த நிலையில், படிப்படியாக அதிகரித்தது. மாலை 4 மணி நிலவரப்படி 14 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது
ஆர்ப்பரித்துக் கொட்டியது
இதன் காரணமாக ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செந்நிறத்தில் கொட்டியது. காவிரி ஆற்றில் நீர்வரத்து தமிழக கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் உள்ள மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக உள்ளதால் கடந்த 12ஆம் தேதி முதல் பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடையானது தொடர்ந்து 6-வது நாளாக நீடிக்கிறது.
இதனால் ஒகேனக்கல் வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். மேட்டூர் அணையில் இருந்து தற்போது பாசனத்திற்கு வினாடிக்க்கு 12 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது என்பது கவனிக்கத்தக்கது.


Click it and Unblock the Notifications
