ஒரேடியாக மாறிய ஒகேனக்கல்.. காவிரி ஆற்றில் அசுர வேகத்தில் பாயும் ஒரு லட்சத்து 95 ஆயிரம் கன அடி நீர்
சேலம்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து ஒரு லட்சத்து 92 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளதால், காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும், குளிக்கவும் விதிக்கப்பட்ட தடை 16வது நாளாக நீடிக்கிறது. பல ஆயிரம் கனஅடி நீர் அசுர வேகத்தில் செல்வதால் மேட்டூர் அணைக்கு வரும் நீர் அப்படியே காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. எனவே மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம் ஆகும்.
கேரளாவில் வயநாடு மாவட்டம் மற்றும் கர்நாடாகவின் குடகு மலைப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து வரலாறு காணாத அளவிற்கு அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் உள்ள அணைகள் எல்லாம் நிறைந்துவிட்டது. இதனால் அணைகளுக்கு வரும் நீர் அப்படியே திறந்துவிடப்படுகிறது.

இதன்படி நேற்று நிலவரப்படி கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 1 லட்சத்து 72 ஆயிரத்து 161 கனஅடியும், கபினி அணையில் இருந்து வினாடிக்கு 70 ஆயிரத்து 750 கனஅடியும் என 2 அணைகளில் இருந்தும் மொத்தம் வினாடிக்கு 2 லட்சத்து 42 ஆயிரத்து 750 கனஅடி தண்ணீரும் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டிருக்கிறது.
இதனால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து கிடுகிடுவென அதிகரித்தது. நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 75 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. அதன்படி நேற்று மதியம் 2 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சத்து 28 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது.இரவு 8 மணிக்கு வினாடிக்கு 1 லட்சத்து 41 ஆயிரம் கனஅடியாகவும் அதிகரித்துது இருந்தது. இன்று காலை நீர்வரத்து ஒரு லட்சத்து 75 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. அதன்பின்னர் 1.82 லட்சம் கனஅடியாகவும் நீர் வரத்து அதிகரித்தது. தற்போது 1.92 லட்சம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. விரைவில் 2 லட்சத்தை தாண்டும் என தெரிகிறது.
இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவிகளை மூழ்கடித்தபடி தண்ணீர் பெருக்கெடுத்ததால் ஒகேனக்கல் கடும் வெள்ளக்காடா மாறி உள்ளது. காவிரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோரம் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடை 16-வது நாளாக இன்றும் தடை தொடர்ந்து நீடிக்கிறது. காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
இதனிடையே மேட்டூர் அணை நிரம்பிய நிலையில் நேற்று வரத்து நீரான வினாடிக்கு 1 லட்சத்து 75 ஆயிரம் கனஅடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டது. இதனால் காவிரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. இதனால் டெல்டா முதல் கடைமடை பகுதிகளுக்கு எப்போது வேண்டுமானாலும் தண்ணீர் ஆர்ப்பரித்து வரும் என்றால் சேலம் முதல் மயிலாடுதுறை வரை 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications