சிறு வியாபாரிகளுக்கு உயர்நீதிமன்றம் குட்நியூஸ்.. கோயில்கள் டெண்டர் முறை அடியோடு மாறுகிறது
சென்னை: கோவில்களை வருவாய் ஆதாரமாக பார்க்காமல், கோவில் திருவிழாக்களில் பொருட்களை விற்பனை செய்ய சிறு வியாபாரிகளை அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு காரணமாக இனி சிறு வியாபாரிகள் எளிதாக கடைகளை வைக்க முடியும். என்னென்ன நன்மைகள் என்று பார்ப்போம்.
கோவில்களில் திருவிழா நடைபெற போகிறது என்றால், தமிழக அரசும், இந்து அறநிலையத்துறையும், சிறு கடைகள் வைப்பதற்கான அனுமதி தொடர்பாக டெண்டர் விடுகிறது. அதேபோல் ராட்டினம் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் வைக்கவும் டெண்டர் விடுகிறது. இதேபோல் தற்காலிகமாக பூக்கடைகள் வைக்க, பழக்கடைகள் வைக்க, பொறிகடை விற்பவர் முதல் தள்ளுவண்டி கடை வைத்து ஏதாவது சிறு வியாபாரம் செய்பவர்கள் வரை அனைவருமே கோயில் கடை டெண்டர் எடுப்பவருக்கு கப்பம் கட்ட வேண்டும்.

டெண்டர் வெளியீடு
ஆனால் கோயில் திருவிழாவில் எதாவது சம்பாதித்து பொருளாதார நிலைமையை உயர்த்த விரும்பும் சாமானியர்கள் பயனடைவதற்கு பதிலாக, டெண்டர் எடுப்பவர்கள், அந்த டெண்டரை எடுக்கும் அரசியல் கட்சிக்கு நெருக்கமானவர்கள் பயன்பெறும் வகையில் உள்ளதாக குற்றச்சாட்டுகள் உள்ளது.
கோயில் திருவிழா
கோயிலில் சிறு கடைகள் டெண்டர் மூலம் வரும் பணத்தை கோயில் நிர்வாகம் திருவிழாவிற்கு பயன்படுத்துகிறது. இந்நிலையில் கோவில்களை வருவாய் ஆதாரமாக பார்க்காமல், கோவில் திருவிழாக்களில் பொருட்களை விற்பனை செய்ய சிறு வியாபாரிகளை அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் வழக்கில் இந்த உத்தரவினை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
வருகிற மார்ச் 11-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் மாசி திருவிழா நடைபெற இருக்கிறது. இந்த திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு முறையான குடிநீர், கழிப்பிட வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவும், தற்காலிக கடைகளை முறைப்படுத்தவும் உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில், திருத்தொண்டர் அறக்கட்டளைத் தலைவர் ராதாகிருஷ்ணன் வழக்கு தொடர்ந்தார்.
சேலம் கோட்டை மாரியம்மன் கோவில்
இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி டி.பரதசக்ரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் மாசி திருவிழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது என்றும், திடக் கழிவு மேலாண்மை செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் விளக்கம் அளித்தார்.
புது டெண்டர் அறிவிப்பு
மேலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால், போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என்றும், திருவிழாவின்போது தற்காலிக கடைகள் அமைக்க டெண்டர் கோரப்பட்டது என்றும், ஒருவர் மட்டுமே பங்கேற்றதால், அதை ரத்து செய்து மீண்டும் புது டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டது.
நீதிபதி உத்தரவு
இதைப் பதிவு செய்து கொண்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி டி.பரதசக்ரவர்த்தி பிறப்பித்த உத்தரவில் கூறுகையில், "சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் மாசி திருவிழாவில் குடிநீர் மற்றும் போதுமான கழிப்பிட வசதிகளை உறுதி செய்ய வேண்டும். கோவில் திருவிழா என்பது சடங்கு மட்டுமல்ல, அது ஒரு கலாச்சார நிகழ்வு ஆகும். இந்த மாதிரியான திருவிழாக்களின் போது சிறிய வியாபாரிகள் நம் நாட்டின் பொருட்களை விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும்.
அதிக விலைக்கு டெண்டர்
அதைச் செய்யாமல், வெளிப்படைத் தன்மை என்ற பெயரில் அதிக விலைக்கு டெண்டர் கேட்டால், அதனால் கடைகளை நம்பி உள்ள சிறு வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள். எனவே, அதிக விலைக்கு டெண்டர் குறிப்பிடாமல் திருவிழாவை நம்பியுள்ள சிறு வியாபாரிகள் பங்கேற்கும் வகையில் டெண்டர் கோர வேண்டும். இல்லாவிட்டால் கோவில் தனது கலாச்சார மதிப்பை இழந்து விடும்.
சிறு வியாபாரிகள்
மேலும் கோவில் திருவிழாக்கள் வருவாய் ஆதாரமாக மட்டும் பார்க்காமல், கோவில் திருவிழாக்களில் உள்நாட்டு பொருட்களை விற்பனை செய்ய சிறு வியாபாரிகள், பெண்கள், பழங்குடியினர்களை அறநிலையத்துறை ஊக்குவிக்க வேண்டும். கோட்டை மாரியம்மன் கோவில் சொத்துக்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதா? இல்லையா என கண்டறிந்து ஆக்கிரமிப்பில் இருந்தால் அவற்றை அகற்றி கோவில் நிலங்களை அறநிலையத்துறை மீட்க வேண்டும். இந்த வழக்கை முடித்து வைக்கிறேன்" இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications