மருந்துக்கடையில் ஊசி போட்டுக்கொண்ட சிறுவனுக்கு நேர்ந்த கதி! பிரேத பரிசோதனையில் ஷாக்! உரிமையாளர் கைது
சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே, மருந்துக்கடையில் ஊசி போட்டுக்கொண்ட மாணவன் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மருந்தக உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் முல்லைவாடி பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீஷ். இவரது மகன் கீர்த்திவாசன். கீர்த்தி வாசன் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில், கடந்த மார்ச் 21 ஆம் தேதி சிறுவனுக்கு உடல்நிலை சரியில்லாததால் சிறுவனின் பெற்றோர் அதே பகுதியில் உள்ள நடுவலூரைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் செந்தில்குமார் (40) என்பவருக்கு சொந்தமான தனியார் மருந்துக்கடையில் ஊசி போட்டுள்ளனர்.

இதையடுத்து, திடீரென சிறுவனுக்கு வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படவே, அவரது பெற்றோர் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மார்ச் 25 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தார்.
இதுகுறித்து ஆத்தூர் நகர காவல் நிலையத்தில் சிறுவனின் பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் சிறுவனின் பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருந்த நிலையில் சிறுவனின் உடற்கூறாய்வில் தவறான ஊசியால் சிறுவன் உயிரிழந்தது தெரியவந்தது. தவறான ஊசி செலுத்தப்பட்டதே சிறுவன் உயிரிழப்புக்கு காரணமாக அமைந்ததாக உடற்கூராய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் தனியார் மருந்தக உரிமையாளர் செந்தில்குமாரை ஆத்தூர் நகர காவல் துறையினர் நேற்று மாலை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தவறான ஊசி மருந்தால் சிறுவன் உயிரிழந்த நிலையில், 2 மாதங்களுக்குப் பிறகு மருந்தக உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications