மேட்டூர் அணையில் கொட்டும் தண்ணீர்! அணை நிரம்பப்போகுது! விவசாயிகளுக்கு செம அப்டேட் கொடுத்த வெதர்மேன்!
சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மேட்டூர் அணையின் நீர்வரத்து நாளை 35,000 - 40,000 கன அடியாக உயரும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. தொடர் கனமழை காரணமாக கர்நாடகாவில் உள்ள அணைகள் நிரம்பி உள்ளன. எனினும், கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறக்கப்படாமல் இருந்ததால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்து காணப்பட்டது.

நீர்வரத்து உயர்வு: இந்த நிலையில் தொடர் மழை காரணமாக மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 4,047 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 5,054 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 20,910 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 46.80 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 15.85 டி.எம்.சி ஆகவும் உள்ளது.
குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து கடந்த ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 17 லட்சம் ஏக்கர் விவசாயம் கடந்த ஆண்டு நடைபெற்றது.
20,910 கன அடி நீர்வரத்து: ஆனால் இந்த ஆண்டு மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாத காரணத்தால் ஜூன் மாதம் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் குருவை, சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், வினாடிக்கு 1,000 கன அடியாக குறைக்கப்பட்டது. கர்நாடகாவில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிந்து வந்தது.

இந்நிலையில் கர்நாடக அணைகளில் நீர் திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 16,577 கன அடியில் இருந்து 20,910 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக அணை மின் நிலையம் வழியாக வினாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கர்நாடக அணைகளில் இருந்து: கர்நாடக அணைகளை பொறுத்தவரை நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 92.97 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 17.78 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 167 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 4338 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 50.38 அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 11.38 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 151 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 2150 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
வெதர்மேன் தகவல்: கர்நாடகாவில் கபினி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால், அணை நிரம்பியுள்ளது. மேலும் சில நாட்களுக்கு மழை தொடரும் என்பதால், விரைவில் கபினி அணையில் இருந்து காவிரியில் அதிக தண்ணீர் திறக்கப்படும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
மாண்டியா மாவட்டத்தில் தலைக்காவிரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை தொடர்வதால், கே.ஆர்.எஸ். அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரிக்கும் என்றும், மேலும் சில பகுதிகளில் தொடரும் மழையால் இன்னும் ஒரு வாரத்திற்குள் கே.ஆர்.எஸ். அணை முழு கொள்ளளவை எட்டிவிடும் என்றும் வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
"ஆரஞ்ச் அலர்ட்”.. தமிழ்நாட்டில் இன்று மிக கனமழை பெய்யும்.. வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை!
நாளை 40 ஆயிரம் கன அடி வரை அதிகரிக்கும்: குடகு மாவட்டத்திலும் மழை பெய்வதால், எதிர்பார்த்ததை விட விரைவாக கே.ஆர்.எஸ். அணை நிரம்ப வாய்ப்புள்ளது. மேலும், கேரள மாநிலம் வயநாடு பகுதியிலும் கனமழை பெய்து வருவதால், அங்குள்ள அணை நிரம்பி, உபரி நீர் கபினி அணைக்குதான் திறக்கப்படும். அப்படி திறக்கப்படும் நீரால் கபினி அணை நிரம்பிவிட்டால், அங்கிருந்து உபரி நீர் மேட்டூர் அணைக்குதான் திறக்கப்படும். அப்படி திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 40 ஆயிரம் கன அடி வரை இருக்கும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் பவானி சாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் என்றும், ஆகஸ்ட் மாதத்திற்குள் முழு கொள்ளளவை எட்டும் என்றும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.















Click it and Unblock the Notifications