எடப்பாடி அருகே பகீர்.. இரட்டை குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை
சேலம் : எடப்பாடி அடுத்த கொங்கணாபுரம் அருகே, குறை பிரசவத்தில் பிறந்த இரு பச்சிளம் குழந்தைகளுடன் கிணற்றில் குதித்த தாய் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், குழந்தைகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகே உள்ள பாலபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சபரி என்பவர், பஞ்சு மில்லில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சரளா. இந்த தம்பதிகளுக்கு சர்வேஷ் 7 என்ற ஆண் குழந்தை உள்ளது.

குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகள்
இந்நிலையில், கர்ப்பிணியாக இருந்த சரளா, கடந்த மாதம் பேறுகாலத்திற்காக தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார். சரளாவிற்கு கடந்த 30 நாட்களுக்கு முன்பு பேறு காலத்திற்கு முன்னதாகவே இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. குறை பிரசவத்தில் பிறந்த இரு குழந்தைகளும் குறைவான எடையுடன் ஆரோக்கியம் இல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

மனமுடைந்த தாய்க்கு ஆறுதல்
இதனால் மனமுடைந்த சரளா, தனது குடும்ப உறவினர்களிடம் குழந்தைகளின் நிலையை பார்க்கும்போது இறந்து விடலாம் போல் உள்ளதாக வேதனையுடன் கூறி வந்துள்ளார். இதனை அடுத்து சரளாவின் கணவர் சபரி, நேற்று இரவு தனது மாமனார் வீட்டுக்கு வந்து சரளாவுக்கு ஆறுதல் கூறியுள்ளார்.

குழந்தைகளுடன் தாய் தற்கொலை
கணவர் சபரி அங்கிருந்து சென்ற பின்னர், அதிகாலை நேரத்தில் சரளாவும், குழந்தைகளும் படுக்கையில் இல்லாததை அறிந்த அவரது பெற்றோர், அக்கம் பக்கத்தில் தேடி உள்ளனர். அப்போது, அருகில் உள்ள வெங்கடேஷ் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் சரளா மிதந்து கொண்டிருப்பதை கண்டு பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவரை மீட்டு, உடனடியாக எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

பச்சிளம் குழந்தைகளை தேடும் பணி
இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ பகுதிக்கு வந்த தீயணைப்புத்துறையினர், சரளா தற்கொலை செய்து கொண்ட கிணற்றுப் பகுதியில் பஞ்சிளம் குழந்தைகளை தேடி வருகின்றனர். மேலம், இந்த சம்பவம் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த கொங்கணாபுரம் போலீஸார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறை பிரசவத்தில் பிறந்த இரு பச்சிளம் குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications