எந்த கழகத்தில் இணைகிறார் காளியம்மாள்? எனக்கு தெரியும்.. தங்கச்சிய வாழ்த்திட்டேன்! சமாளித்த சீமான்.!
சேலம்: நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியேறிய காளியம்மாள் நாளை விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இது தொடர்பாக பேசியுள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான், இது குறித்து தனக்கு முன்னரே தெரியும் எனவும், அவருக்கு வாழ்த்து கூறிவிட்டதாக பேட்டி அளித்துள்ளார்.
நாதக இளம்பெண்கள் பாசறை காளியம்மாள் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலக இருப்பதாக கடந்த சில நாட்களாகவே யூகங்கள் வெளியாகி வந்தது. அதுவரை அமைதி காத்த காளியம்மாள் நேற்று திடீரென கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார்.

நாம் தமிழர் கட்சி எப்போது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டாலும் அல்லது எந்த ஒரு நிகழ்வு குறித்து வெளியிட்டாலும் அது நிச்சயம் காளியம்மானின் பெயர் இருக்கும். ஆனால், சீமான் பேசியதாக ஆடியோ ஒன்று வெளியான நிலையில் காளியம்மாள் கட்சியில் இருந்து விலகுவதாக கூறப்பட்டது.
ஆனால் காளியம்மாளோ அதற்கு பெரிதாக ரியாக்ட் செய்யவில்லை. இந்த நிலையில் சஸ்பென்சுக்கு முற்றுப்புள்ளி வைப்பது போல் நேற்று கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இந்த நிலையில் காளியம்மாள் விலகல் யாரையும் ஆச்சரிய படுத்தவில்லை. காரணம் கட்சியில் தனக்கு முக்கியத்துவம் இல்லை என பல நாட்களாகவே அதிருப்தியில் இருந்த அவர் எப்போது அந்த அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று தான் எதிர்பார்ப்பு நிலவியது. எதிர்பார்த்தது போலவே அவர் கட்சியில் இருந்தும் விலகி விட்டார்.
இந்த நிலையில் எந்த கட்சியில் அவர் சேரப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் தமிழக அரசியலில் நிலவி வருகிறது. காளியம்மாள் ராஜீவ்காந்தி மூலமாக அமைச்சர் அன்பில் மகேஷ் முன்னிலையில் திமுகவில் இணைய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், எம்பி சீட் கேட்பதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. மேலும் ஆதவ் அர்ஜுனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய இருக்கிறார் என்ற தகவலும் உலாவி வருகிறது.
தற்போது கிடைத்துள்ள தகவல் படி காளியம்மாள் தமிழக வெற்றிக் கழகத்தில் நாளை விஜய் முன்னிலையில் இணைவதற்கான பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ளது. இதற்காக பீஹாரிலிருந்து பிரசாந்த் கிஷோர் சென்னை வந்திருக்கிறார். நள்ளிரவில் விஜயின் வீட்டில் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது. இதில் விஜய், பிரசாந்த் கிஷோர், ஜான் ஆரோக்கியசாமி, புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் கலந்து கொண்டார்களாம்.
இடையில் தொலைபேசி மூலம் காளியம்மாளும் மருது அழகுராஜூம் விஜய் உடன் பேசியதாகவும் கூறப்படுகிறது. நாளை இவர்களின் இணைப்பு நிச்சயம் இருக்கும் என்கின்றனர் தமிழக வெற்றிக் கழகத்தினர்.
இந்த நிலையில் காளியம்மாள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய போவது தனக்கு ஏற்கனவே தெரியும் எனக் கூறியிருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் தமிழக வெற்றிக் கழகத்தில் காளியம்மாள் இணையப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர் "அது எனக்கு முன்னாடியே தெரியும். நான் தங்கச்சியை வாழ்த்தி விட்டேன். அவர் எங்கிருந்தாலும் நன்றாக இருப்பார்" என சிரித்தபடியே கூறிவிட்டு சென்றார். இதன் மூலம் காளியம்மாள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவது உறுதி தான் என நாம் தமிழர் தம்பிகளும் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications