கடல் போல் காட்சியளித்த மேட்டூர் அணையா இது? வறண்டு நந்தி சிலையே வெளியே தெரிகிறதே? அப்போ குறுவை?
சேலம்: மேட்டூர் அணை வறண்டதால் அணையின் உள்ளே இருக்கும் ஜலகண்டேஸ்வரர் கோயிலும் நந்தி சிலையும் வெளியே தெரிகிறது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை நன்கு பெய்தது. இதனால் தமிழகத்தில் பெரும்பாலான நீர் நிலைகள் நிரம்பின. இதைத் தொடர்ந்து கோடை வெயில் மார்ச் மாதம் முதலே கொதிக்க தொடங்கியது.

தமிழகத்தில் பெரும்பாலான நகரங்களில் 104 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி சென்றதால் நீர் நிலைகளில் தண்ணீர் வறண்டது. இதனால் தண்ணீர் தட்டுப்பாடு சென்னையின் புறநகர் பகுதிகளில் ஏற்படத் தொடங்கியது.
இப்படியே வெயில் காய்ந்தால் தமிழகம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடும் என அஞ்சப்பட்டது. ஆனால் திடீரென கோடை மழை கொட்டியது. தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் வடகிழக்கு பருவமழையை போல் மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் நிரம்பியுள்ளன.
மேலும் நீர் நிலைகளில் மக்கள் யாரும் குளிக்க வேண்டாம் என அந்தந்த மாவட்ட நிர்வாகத்தினர் வலியுறுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் மேட்டூர் அணையின் நீர் மட்டம் குறைந்து வருவதால் நீர் பிடிப்பு பகுதியான பண்ணவாடி பகுதியில் உள்ள பழங்கால நந்தி சிலை வெளியே தெரிகிறது. சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே பண்ணவாடி கிராமம் உள்ளது.
இங்குள்ள மக்களால் ஜலகண்டேஸ்வரர் ஆலயம் வழிப்பாட்டில் இருந்தது. காவிரி டெல்டா பகுதிகளின் உயிர் நாடியாக மேட்டூர் அணை திகழ்ந்து வருகிறது. மேட்டூர் அணையின் நீர் மூலம்தான் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி, சம்பா, தாளடி என முப்போகம் விளைவிக்கப்படுகிறது.
மேட்டூர் அணையின் மொத்த நீர் தேக்க உயரம் 120 அடி, நீர் பரப்பு 152 சதுர கி.மீ. ஆகும். மேட்டூர் அணையின் நீர் மட்டம் 70 அடிக்கு கீழ் குறையும் போது பண்ணவாடி நீர்த்தேக்க பகுதியில் மூழ்கி இருக்கும் நந்தி சிலையின் தலைப்பகுதி மட்டும் வெளியே தெரியும். இந்த நிலையில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் குறைய தொடங்கியுள்ளது.
இதனால் அணையில் உள்ள புராதன சின்னங்கள் வெளியே தெரிகின்றன. கடந்த பிப்ரவரி 4 ஆம் தேதி 70 அடியாக இருந்த அணையின் நீர் மட்டம் , பிப்ரவரி 5ஆம் தேதி 69 அடியாக குறைந்த போது நந்தியின் தலை பகுதி வெளியே தெரியத் தொடங்கியது. குடிநீர் தேவைக்காக திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருந்ததால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் 49 அடியாக குறைந்தது. இதனால் நந்தி சிலை தெரிய தொடங்கியுள்ளது. இந்த சிலை 20 அடி உயரம் கொண்டது. ஜலகண்டேஸ்வரர் ஆலயம் 10 அடி உயரம் கொண்டதாகும்.
இப்படியாக மேட்டூர் அணையில் நீர் வரத்து குறைந்துள்ளதால் குறுவை சாகுபடிக்கு தண்ணீருக்கு என்ன செய்வது என விவசாயிகள் கவலையில் உள்ளனர். குறுவைக்காக ஜூன் 12 ஆம் தேதி மேட்டூரில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது சந்தேகம்தான் என்கிறார்கள். தென் மேற்கு பருவமழை நேற்று முன் தினம்தான் தொடங்கியுள்ளது.
இதனால் மேட்டூர் அணைக்கு நீரானது ஜூலை மாதம் அல்லது ஆகஸ்ட் மாதத்தில் தான் வரும் என தெரிகிறது. அதுவரை விவசாய சாகுபடி செய்வதற்கு மாற்ற திட்டத்தை தமிழக அரசு செய்ய வேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications