தமிழகத்தை உலுக்கிய கருமுட்டை விற்பனை.. மாசுவின் ஆர்டர் - சேலம் மருத்துவமனைக்கு விரைவில் சீல்
சேலம்: சட்டவிரோதமாக கருமுட்டை விற்பனை செய்த வழக்கில் சேலம் தனியார் மருத்துவமனைக்கும் சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
Recommended Video
ஈரோட்டில் கருமுட்டை விற்பனை வழக்கு விசாரணை தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில் வழக்கு தொடர்பாக சேலம் தனியார் மருத்துவமனைக்கு சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மாற்று மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.

மருத்துவக்குழு ஆய்வு
ஈரோட்டில் கருமுட்டை விற்பனை செய்தது தொடர்பாக கடந்த ஜூன் மாதம் 6ம் தேதி சுகாதாரத் துறை இணை இயக்குனர் விஸ்வநாதன் தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழு ஈரோடு மற்றும் சேலம், ஓசூர் ஆகிய ஊரில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் அதிரடி சோதனை நடத்தினர். அதேபோல் சேலம் புதிய பேருந்து நிலையம் பிருந்தாவன் சாலையில் உள்ள சுதா மருத்துவமனையிலும் சுகாதாரத்துறை இணை இயக்குனர் விஸ்வநாதன் தலைமையில் அதிகாரிகள் குழு விசாரணை மேற்கொண்டது.

3 மாவட்டங்களில் விசாரணை
சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த சோதனைக்கு பின்னர், சுகாதாரத்துறை இணை இயக்குனர் விஸ்வநாதன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் ஈரோடு, சேலம், ஓசூர் ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சோதனை நடத்தி விசாரணை செய்து இறுதி அறிக்கையை சுகாதாரத்துறை அமைச்சரிடம் வழங்குவோம் என தெரிவித்திருந்தார். அதன் பேரில் ஈரோடு, சேலம், ஓசூர் ஆகிய மாவட்டங்களில் விசாரணை நடத்தப்பட்டது.

அமைச்சர் மா.சு உறுதி
அதன் இறுதி விசாரணை அறிக்கையை சுகாதாரத் துறை அதிகாரிகள் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் வழங்கினர். இந்த நிலையில் இன்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் மருத்துவமனைகளுக்கு சீல் வைக்கவும் உத்தரவிடப்பட்டு இருக்கிறது." என்றார்.

சீல் வைக்க நடவடிக்கை
இதனை தொடர்ந்து சேலத்தில் உள்ள சுதா தனியார் மருத்துவமனைக்கும் விரைவில் சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சீல் வைக்கப்பட இருக்கும் மருத்துவமனையில் பலர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்கள் அனைவரும் மாற்று மருத்துவமனைகளுக்கு செல்ல அறிவுறுத்தியுள்ள சுகாதாரத்துறையினர், இதற்காக 15 நாட்கள் கால அவகாசம் வழங்கியுள்ளனர். அனைத்து நோயாளிகளும் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டவுடன் சீல் வைக்கப்படும் என சேலம் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications