4 தலைமுறை தொழில்! 50 ஆண்டுகால அனுபவம்! யார் இந்த பந்தல் சிவா? திமுக இளைஞரணி மாநாடு ருசிகரம்!
சேலம்: திமுக இளைஞரணி மாநாட்டு பந்தல் அமைப்பு மூலம் பலரது கவனத்தையும் ஈர்த்திருப்பவர் பந்தல் சிவா. 100 ஏக்கர் நிலத்தில் இயக்குநர் ராஜமவுலியையே மிஞ்சும் வகையில் மிக பிரம்மாண்டமாக ஒரு மினி கிராமத்தையே 3 மாதங்களில் உருவாக்கியிருக்கிறார்.
திருவாரூர் மாவட்டம் வடுவூரை சேர்ந்தவர் பந்தல் சிவா. இன்று நேற்றல்ல தலைமுறை தலைமுறையாக பந்தல் மற்றும் மேடை அமைக்கும் தொழிலை இவரது குடும்பத்தினர் செய்து வருகின்றனர். மாட்டுவண்டியில் ஆரம்பித்த பயணம் இன்று எவ்வளவோ வளர்ச்சி அடைந்து ஹைடெக்காக மாநாட்டை நடத்தும் அளவுக்கு பரிணாம மாற்றம் அடைந்திருக்கிறது. 4 தலைமுறைகளாக இந்த தொழிலில் ஈடுபட்டு வரும் பந்தல் சிவாவுக்கு 50 ஆண்டுகால அனுபவம் உண்டு.

திமுக இளைஞரணியின் முதல் மாநில மாநாடு நெல்லையில் நடைபெற்ற போதும் பந்தல் சிவா தான் மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகளில் ஈடுபட்டார். அதேபோல் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டு பந்தல் மற்றும் மேடையையும் பந்தல் சிவா தான் அமைத்துக் கொடுத்தார். இவரிடம் நூற்றுக்கணக்கான கலை இயக்குநர்கள் பணியாற்றி வருகின்றனர். இயக்குநர்கள் ராஜமவுலி, சங்கர் ஆகியோர் காட்டும் பிரம்மாண்டங்களை விட பன்மடங்கு பிரம்மாண்டங்களை காட்டி ஸ்டாலின் மனதில் நீங்கா இடம் பிடித்திருபவர் பந்தல் சிவா.
திமுகவுக்கு மட்டுமல்ல மதிமுகவுக்கும் இவர் தான் மாநாட்டு பந்தல் அமைக்கும் பணிகளை கவனித்துக்கொள்கிறார். சேலத்தில் நடைபெற்ற திமுக இளைஞரணி மாநாடுக்காக 3 மாத காலம் சேலத்திலேயே தங்கி பந்தல் அமைக்கும் பணிகளையும், உள் அலங்கார வேலைகளையும் கவனித்துக்கொண்டார். ஒன்றரை லட்சம் நாற்காலிகள் போட்டதில் தொடங்கி, மாநாட்டு திடலில் தரையில் விரிப்பதற்கான கார்பெட்டை சூரத்திலிருந்து இறக்குமதி செய்தது வரை ஒவ்வொரு நிகழ்விலும் திமுக தலைமையை வியக்க வைத்துவிட்டார்.
அதேபோல் மேடையில் ஒளி, ஒலி அமைப்பை ஜெர்மன் தொழில்நுட்பத்தில் களமிறக்கி இந்தியாவில் இதுவரை இப்படியொரு ஹைடெக்கான மாநாடு நடைபெற்றதில்லை என்கிற பெயரை ஈட்டியிருக்கிறார். சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர் திருச்சியில் நடைபெற்ற திமுக மாநாடு கூட திறந்தவெளி மைதானத்தில் தான் நடைபெற்றது. அதுவும் அந்த மாநாட்டை ஐ பேக் டீமே முன்னின்று நடத்தியது. அதைக்காட்டிலும் பன்மடங்கு பிரம்மாண்டத்தை காட்டி திமுகவினரை ஆச்சரியத்தில் மூழ்க வைத்திருக்கிறார் பந்தல் சிவா.
சாதாரண பந்தல் போடும் தொழில் தானே என்று எண்ணாமல் அதில் முழு அர்ப்பணிப்பு உணர்வுடன், காலத்திற்கேற்ப புதுமைகளை கையாண்டு 4வது தலைமுறையாக இந்த தொழிலை நடத்தி வருகிறார் பந்தல் சிவா.












Click it and Unblock the Notifications