கவுரவத்துக்காக பெரிய மருத்துவமனைகளுக்கு போகாதீங்க! பில்லை தீட்டி விடுவார்கள்! பாமக MLA அருள் அட்வைஸ்
சேலம்: கவுரவத்துக்காக பெரிய மருத்துவமனைகளுக்கு போக வேண்டாம் என்றும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து மருத்துவமனையை தேர்வு செய்ய வேண்டும் எனவும் பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் சமூக வலைதளப் பக்கம் மூலம் அறிவுரை வழங்கியுள்ளார்.
முன்னதாக சேலத்தில் விபத்தில் சிக்கி இறந்த இளைஞர் உடலை தர வேண்டும் என்றால் ரூ.2 லட்சம் கட்டணம் கட்ட வேண்டும் என தனியார் மருத்துவமனை பில் போட்டது பற்றியும் தாமே கட்டணத்தை கட்டி உடலை மீட்டது குறித்தும் தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார் அருள் எம்.எல்.ஏ. அதில் அவர் கூறியிருப்பதாவது;

ரூ.2 லட்சம் பில்: ''தர்மபுரி MLA வெங்கடேஸ்வரன் அவர்கள் என்னை தொடர்பு கொண்டு எனது தர்மபுரியை சேர்ந்த கேசவன் என்ற 27 வயதுடைய பாமக இளைஞர் சங்க நிர்வாகி விபத்து ஏற்பட்டு சேலம் மணிபால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்றும் திடீரென கேசவன் இறந்ததனால் 2 லட்சத்திற்கு மேல் பில் போட்டுவிட்டு பணம் கொடுத்தால் மட்டுமே உடலை கொடுக்க முடியும் என மருத்துவமனை நிர்வாகம் கூறி உடலை மருத்துவமனை பிண அறையில் வைத்து பூட்டி விட்டனர் எனவும் கூறினார்.''
கட்டணத்தை கட்டிய பாமக MLA: ''இதனை அடுத்து மணிப்பால் மருத்துவமனைக்கு நேரில் சென்று கேசவனின் குடும்பம் மிகவும் எழ்மையானது என்றும் தொகையை கொஞ்சம் குறைத்து கொள்ளுங்கள் எனக் கேட்டேன். ஆனால் நிர்வாகம் மறுத்துவிட்டது. இறந்த உடலை கொடுக்காவிட்டால் உங்கள் மருத்துவமனையால் பாதிக்கப்பட்டவர்களுடன் சேர்ந்து நானும் தர்மபுரி சட்டமன்ற உறுப்பினரும் பெரும் மறியல் போராட்டம் நடத்துவோம் எனக் கூறினேன். இதனிடையே ஒரு தொகையை கட்டணமாக செலுத்தி உடலை மீட்டு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி விட்டு குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி தர்மபுரிக்கு அனுப்பி வைத்தேன்.''

கவுரவம் பார்க்காதீர்: ''திடீர் விபத்தாக இருந்தாலும் சரி, உடல்நலக் குறைவாக இருந்தாலும் சரி தயவு செய்து ஒரு முறைக்கு பல முறை யோசித்து உங்களது பொருளாதார நிலை, மருத்துவமனையின் தரம் ஆகியவற்றை சிந்தித்து பார்த்து மருத்துவமனையில் சேர்த்து விடுங்கள். கவுரவம் பார்த்து மட்டும் பெரிய மருத்துவமனையை தேர்ந்தெடுக்காதீர். இன்று அரசு மருத்துவமனைகளில் மிகச்சிறந்த மருத்துவம் கிடைக்கிறது. கொடுமை என்னவென்றால் தலைகவசம் இருந்திருந்தால் இந்த தம்பி இறந்திருக்க மாட்டான்.'' இவ்வாறு சேலம் மேற்கு தொகுதி பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் தனது முகநூலில் பதிவு வெளியிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications