பிரேம் குமாருக்கு நேர்ந்தது அநீதி! விளாசிய ராமதாஸ்.. கொதிப்பு.. பெரியார் பல்கலையில் என்ன நடக்குது?
சேலம்: பெரியார் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர் பிரேம் குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதற்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பெரியார் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர் பிரேம் குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட சம்பவமும், அதை தொடர்ந்து அவர் மீது வைக்கப்பட்டு இருக்கும் பாலியல் குற்றச்சாட்டுகளும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. மாணவி ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆசிரியர் பிரேம் குமார் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம், பாலியல் தொல்லை உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டு உள்ளது.
அதே சமயம் பெரியார் பல்கலைக்கழக வரலாற்று துறையை சேர்ந்த மாணவ, மாணவிகள் அந்த ஆசிரியருக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர். சேலம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து, அந்த ஆசிரியர் நல்லவர், அவர் மீது பல்கலைக்கழக நிர்வாகம் பழி வாங்கும் நடவடிக்கை எடுப்பதாக, மாணவ மாணவியர் புகார் மனுவை அளித்தனர்.

பெரியார் பல்கலை
பெரியார் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியராக பணியாற்றி வரும் பிரேம்குமார், பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். ஆசிரியர் சங்க நிர்வாகி என்ற முறையில், அந்தப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் விதிமீறல்கள் மற்றும் முறைகேடுகளுக்கு எதிராக அவர் போராடி வருவதாக கூறப்படுகிறது. அதை சகித்துக் கொள்ள முடியாத பல்கலைக்கழக நிர்வாகம், அவர் பல்கலைக்கழகத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபடுவதாகக் கூறி, அதற்கு 24 மணி நேரத்திற்குள் விளக்கம் கேட்டு குறிப்பாணை அனுப்பியது.

விளக்கம் அளித்தார்
அதற்கு பிரேம்குமார் உடனடியாக விளக்கம் அளித்த நிலையில், அதை முறையாகக் கூட ஆய்வு செய்யாமல் அடுத்த ஒரு மணி நேரத்தில் அவரை பணியிடை நீக்கம் செய்து பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளர் ஆணையிட்டார். பணியிடை நீக்கத்தை எதிர்த்து பிரேம்குமார் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் விரைவில் ஆணை பிறப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தி புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பிரேம்குமார்
கல்வி நிறுவனங்களில் பாலியல் சீண்டல்களும், அத்துமீறல்களும் ஒழிக்கப்பட வேண்டும் என்று தீவிரமாக போராடி வரும் கட்சி பாட்டாளி மக்கள் கட்சி ஆகும். அதே நேரத்தில் பிடிக்காதவர்களையும், உரிமைகளுக்காக போராடுபவர்களையும் பழிவாங்குவதற்கான அருவருக்கத்தக்க ஆயுதமாக பாலியல் புகார்கள் பயன்படுத்தப்படக்கூடாது. பிரேம்குமார் ஒரு மாதத்திற்கு முன்பாகவே இடைநீக்கம் செய்யப்பட்டு விட்டார். பல்கலைக்கழக வளாகத்திற்குள் அவர் நுழைந்து ஒரு மாதத்திற்கு மேலாகும் நிலையில், அவர் மீது சுமத்தப்படும் பாலியல் குற்றத்தை அவர் எப்படி செய்திருக்க முடியும்?
பணியிடை நீக்கம்
பணியிடை நீக்கம் ரத்து செய்யப்பட்டாலும் கூட அவர் மீண்டும் பணியில் சேர்ந்து விடக்கூடாது என்று பல்கலைக்கழகம் நினைப்பது தான் இந்த அநீதியான நடவடிக்கையின் பின்னணி காரணமாகும். பழிவாங்கப்படும் உதவிப் பேராசியருக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ள தமிழ்நாட்டின் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம், பல்கலைக்கழக துணைவேந்தரையும், பொறுப்புப் பதிவாளரையும் இடை நீக்கம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. அதேபோல், பல்கலைக்கழக்கழக மாணவ, மாணவியரும் பாதிக்கப்பட்ட ஆசிரியருக்கு ஆதரவாக போராடி வருகின்றனர். ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டை சுமத்தியோர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

பழிவாங்கும் நோக்கம்
அடுத்தக்கட்டமாக மாணவர்களை பழிவாங்கும் நோக்கத்துடன், பல்கலைக்கழக சிக்கல்கள் குறித்து மாணவர்கள் எந்த ஊடகங்களிடமும் தெரிவிக்கக்கூடாது என்று பல்கலைக்கழக சாசன விதிகளில் இல்லாத ஒரு பிரிவின்படி பல்கலைக்கழக நிர்வாகம் தடை விதித்துள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கையில் மாணவர்களிடம் கையெழுத்து பெறும்படி ஆசிரியர்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். உறைவிடப் பள்ளிகளில் கூட இல்லாத அடக்குமுறைகள் பெரியார் பல்கலைக்கழகத்தில் கட்டவிழ்க்கப்படுகின்றன.

எது சரி, எது தவறு?
பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் தான் மாற்றத்தின் விளைநிலங்கள். எது சரி, எது தவறு? என்று பகுத்துப் பார்க்கும் திறன் மாணவர்களுக்கு உண்டு. உரிமைகளுக்காக போராடும் உரிமையும், சக்தியும் மாணவர்களுக்கு உண்டு. அதன்படி தமிழ்நாட்டில் மாணவர்களால் தொடங்கப்பட்ட உரிமைப் போராட்டங்கள் தான் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. இத்தகைய வரலாறு கொண்ட தமிழகத்தில் அநீதிக்கு எதிரான மாணவர்கள் போராட்டத்தை முடக்க பெரியார் பல்கலைக்கழகம் துடிப்பது கண்டிக்கத்தக்கது. உலகின் கொடிய சர்வாதிகார நாடுகளில் கூட மாணவர்களின் போராடும் உரிமை மறுக்கப்பட்டதில்லை; போராடும் மாணவர்கள் மீது அடக்குமுறை ஏவி விடப்பட்டது கிடையாது.

சேலம் பெரியார் பல்கலைக்கழகம்
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் அவசரமாக செய்யப்பட வேண்டிய பணிகள் ஏராளமாக உள்ளன. பதிவாளர், தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர், தொலைதூரக் கல்வி இயக்குனர், நூலகர், மக்கள் தொடர்பு அலுவலர் உள்ளிட்ட பணிகளுக்கு தகுதி அடிப்படையில் முழுநேர அதிகாரிகளை நியமிக்காமல் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பொறுப்பு அதிகாரிகள் தான் தொடர்கின்றனர்; பல்கலைக்கழகத்தில் அடுத்த சில மாதங்களுக்குப் பிறகு ஊதியம் தருவதற்கு நிதி இல்லை; வேலைவாய்ப்புக்கு வழிவகுக்கும் புதியப் பாடப்பிரிவுகள் தொடங்கப்படவில்லை; சொல்லிக்கொள்ளும்படியாக எந்த ஆராய்ச்சியும் இல்லை; குறைந்த எண்ணிக்கையிலான காப்புரிமைகள் கூட பெறப்படவில்லை. இத்தகைய விவகாரங்களில் கவனம் செலுத்தி பல்கலைக்கழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல வேண்டிய நிர்வாகம், உரிமைக்காக போராடுபவர்களை பழிவாங்குவதில் நேரத்தையும், திறனையும் வீணடிக்க வேண்டாம்.

நிரந்தர பணிநீக்கம்
பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த 4 பணியாளர்கள் கடந்த மாதம் நிரந்தர பணிநீக்கம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் பல்கலைக்கழக நிர்வாகத்தை உயர்நீதிமன்றம் கடிந்து கொண்டிருக்கிறது. இத்தகைய நிலையில், பல்கலைக்கழக நிர்வாகம் பழிவாங்குவதை விடுத்து ஆக்கப்பூர்வ பணிகளில் கவனம் செலுத்த வேண்டும். பெரியார் பல்கலைக்கழகத்தில் நடப்பவற்றை தமிழக அரசு வேடிக்கை பார்க்கக்கூடாது. பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் விதிமீறல்கள் மற்றும் அடக்குமுறைகள் குறித்து விசாரணை நடத்தி, அதற்கு காரணமானவர்களை தண்டிக்க வேண்டும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications