சேலம் 500 கோடி மோசடி.. வேலூர் விஜயாபானுவின் டிரைவரின் அக்கவுண்டில் இவ்வளவு பணமா.. மலைத்த போலீஸ்
சேலம்: சேலத்தில் பண இரட்டிப்பு மோசடியில் கைதான புனித அன்னை தெரசா மனித நேய அறக்கட்டளை நிர்வாகியான வேலூர் விஜயாபானுவின் டிரைவரான சையத் முகமதுவின் வங்கி கணக்கில் ரூ.84 லட்சம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.இதையடுத்து அந்த வங்கி கணக்கு முடக்கம் செய்யப்பட்டது. சுமார் 500 கோடி மோசடி தொடர்பான இந்த வழக்கில் அடுத்தடுத்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகிறது.
சேலம் அம்மாப்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் புனித அன்னை தெரசா மனித நேய அறக்கட்டளை என்ற பெயரில் ஒரு அறக்கட்டளையை வேலூரை சேர்ந்த விஜயாபானு, ஜெயபிரதா உள்ளிட்ட சிலர் நடத்தி வந்தனர். இவர்கள் தங்கள் அறக்கட்டளை மூலம் மலிவு விலையில் உணவு, இலவச கம்ப்யூட்டர் பயிற்சி, பல்வேறு தொழில்கள் குறித்த பயிற்சி அளித்துள்ளனர்.

அப்படி வந்தவர்களிடம் நட்புடன் பழகியதுடன், அறக்கட்டளையில் பணத்தை முதலீடு செய்தால் அதிக வட்டி தருவோம் மற்றும் இரட்டிப்பு தொகை தருவதாக அறிவித்தனர். இதனை நம்பி பொதுமக்கள் பலர் அவர்களிடம் பணம் முதலீடு செய்தனர். அவர்களுக்கு ஆரம்பத்தில் அதற்காக நிறைய பணம் தரப்பட்டுள்ளது. இதை நம்பி மேலும் பலர் பணத்தை முதலீடு செய்தனர்.
இதனிடையே சேலம் அம்மாப்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அண்மையில் கூட்டம் அலைமோதியது. இதையடுத்து
சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அந்த திருமண மண்டபத்துக்கு சென்று தீவிரமாக சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்து ரூ.12 கோடியே 65 லட்சம், 2½ கிலோ தங்கம், 13 கிலோ வெள்ளி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் இந்த பண இரட்டிப்பு மோசடி தொடர்பாக அறக்கட்டளை நிர்வாகி விஜயாபானு, ஜெயபிரதா, பாஸ்கர், சையத் முகமது உள்பட 7 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் புனித அன்னை தெரசா மனித நேய அறக்கட்டளையைச் சேர்ந்த நிர்வாகிகள் ஆயிரக்கணக்கானோரிடம் ரூ.500 கோடி வரை மோசடி செய்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பிட்ட மோசடி பணத்தில் சேலம் மற்றும் பிற மாவட்டங்களில் சொத்துகள் வாங்கி குவிக்கப்பட்டிருப்பதாக தகவல் வந்தது.
இதையடுத்து சேலம் பொருளதார குற்றப்பிரிவு டிஎஸ்பி வெங்கடேசன் தலைமையிலான போலீசார் இதுபற்றி தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். இந்த மோசடி தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் இதுவரை 119 பேர் புகார் மனு அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. புகார் கொடுத்தவர்களில் ஆந்திரா, வேலூர் பகுதிகளை சேர்ந்தவர்களும் அதிகமாக உள்ளார்கள்.
இந்த மோசடி வழக்கில் கைதான விஜயாபானு மற்றும் ஜெயபிரதாவின் 6 வங்கி கணக்குகள் ஏற்கனவே முடக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இந்தநிலையில் அழகாபுரம் பகுதியில் தனியார் வங்கி ஒன்றில் விஜயாபானுவின் கார் டிரைவரான சையத் முகமது என்பவர் கணக்கு இருக்கிறதாம். அந்த வங்கி கணக்கில் ரூ.84 லட்சம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதையடுத்து அந்த வங்கி கணக்கை முடக்கி போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதைத்தொடர்ந்து கைதான மேலும் சிலருடைய வங்கி கணக்குகளை முடக்குவதற்கான நடவடிக்கைகளை போலீசார் எடுத்துள்ளனர்.
இதனிடையே கைதான அறக்கட்டளை நிர்வாகி வேலூர் விஜயாபானு, ஜெயபிரதா, பாஸ்கர், சையத் முகமது ஆகியோர் ஜாமீன் கேட்டு கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் (டான்பிட்) மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. அதேநேரம் நிர்வாகிகள் அனைவரையும் காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் திட்டமிட்டு வருகிறார்கள். காவலில் எடுத்து விசாரித்த பின்னரே பல உண்மைகள் தெரியவரும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications