விபத்தை ஏற்படுத்திவிட்டு எஸ்கேப்.. துரத்தி படித்த சேலம் கலெக்டர் கார்மேகம்.. சினிமாவை மிஞ்சிய சேஸிங்
சேலம்: சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதியில் நடந்து வரும் அரசு திட்டப்பணிகளை ஆய்வு செய்துவிட்டு மாவட்ட ஆட்சியர் கார்மேகம் சேலம் திரும்பிய போது, லாரி ஒன்று மினிவேன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. விபத்து ஏற்படுத்திய லாரியை துரத்தி பிடித்த மாவட்ட ஆட்சியர் கார்மேகம், அவரை பிடித்து போலீசிடம் ஒப்படைத்தார்.
அதேநேரம் கலெக்டர் கார்மேகம் விபத்தில் சிக்கிய டிரைவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அத்துடன் அவரை மருத்துவமனையில் போய் பார்த்து, அவருக்கு உயர் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டார்.

சேலம் மாவட்டம் சங்ககிரியில் அரசு திட்டப்பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் புதன்கிழமை அன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து தன்னுடைய காரில் சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தார். சங்ககிரி அருகே மோடிக்காடு என்ற இடத்தில் கலெக்டர் வந்து கொண்டிருந்த போது, எதிரே அளவுக்கு அதிகமாக வைக்கோல் பாரம் ஏற்றிக்கொண்டு லாரி சென்றது.
இந்நிலையில் வைக்கோலை ஏற்றிச் சென்ற லாரி, திடீரென செம்மறி ஆடுகளை ஏற்றி வந்த மினி வேன் மீது உரசியபடி சென்று விபத்தை ஏற்படுத்தியது. மினி வேனை ஓட்டி சென்ற டிரைவர் பழனி (வயது 47) என்பவருக்கு இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
உடனடியாக பழனி மினிவேனை நிறுத்தினார். ஆனால் வைக்கோல் ஏற்றிச் சென்ற லாரி ஓட்டுநர் நிற்காமல் சென்றுவிட்டார். இதைக்கண்ட சேலம் மாவட்ட ஆட்சியர் டிரைவரை உடனே காரை நிறுத்தும்படி கூறினார். காரில் இருந்து இறங்கி காயம் அடைந்த பழனியை சிகிச்சைக்கு அழைத்து செல்லுமாறு அங்கிருந்தவர்களிடம் கூறினார்.
பின்னர் விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வைக்கோல் லாரியை துரித்தி சென்று பிடிக்க மாவட்ட ஆட்சியர் கார்மேகம் முடிவு செய்தார். டிரைவரிடம் காரை வேகமாக ஓட்டக்கூறினார். மாவட்ட ஆட்சியரின் கார் பின்னால் வேகமாக வந்ததை பார்த்தும் , வைக்கோல் ஏற்றிச் சென்ற லாரி டிரைவர் பயந்து போனார். உடனே அவரும் வேகமாக ஓட்டினார். சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று வைக்கோல் லாரியை மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மடக்கினார்.
கீழே இறங்கி லாரி ஓட்டுநரிடம் கலெக்டர் கார்மேகம் விசாரித்தார். விபத்தை ஏற்படுத்திய லாரியின் டிரைவர் பெயர் மணிகண்டன் என்பதும், கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் இருந்து நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டுக்கு லாரியை ஓட்டி சென்றதாகவும் கூறியிருக்கிறார். மேலும் விபத்தை ஏற்படுத்தியதுடன், நிற்காமல் சென்றது ஏன் என்று கேட்டு எச்சரித்த கலெக்டர், இப்படி செய்வது தவறு என்று லாரி டிரைவரை கடுமையாக எச்சரித்தார்.
பின்னர் வைக்கோல் லாரியை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மூலம் பறிமுதல் செய்து சங்ககிரி போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அதிவேகமாக வாகனத்தை ஓட்டியது, விபத்தை ஏற்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மணிகண்டன் மீது சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
இதனிடையே படுகாயம் அடைந்த டிரைவர் பழனியை சங்ககிரி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று பார்த்தார். அங்கிருந்த டாக்டர்களிடம் அவருக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு கேட்டுக்கொண்டார். அப்போது, அந்த டிரைவருக்கு ஏற்கனவே ஒரு கை இல்லாததும், செயற்கையான கை பொருத்தி வாகனத்தை ஓட்டி சென்றதும் தெரியவந்தது. இதனை கண்டு கலெக்டர் மிகுந்த வேதனை அடைந்தார்.
இதனிடையே சேலம் கலெக்டர் கார்மேகம் கூறுகையில், வாகன ஓட்டிகள் ஒவ்வொருவரும் சாலை விதிகளை கண்டிப்பாக பின்பற்றினால் மட்டுமே, விபத்தில்லாத பயணம் சாத்தியம். சாலை விதிகளை பின்பற்றாமல் விபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை இயக்கும் டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications