செகண்ட் ஹேண்ட் இன்னோவா காரை ரூ.10 லட்சம் தந்து வாங்கிய சேலம் நபர்.. உடனே ட்விஸ்ட்.. அரக்கோணத்திலும்?
சேலம்: தற்போதைய காலத்தில் பெரும்பாலானோர் சொந்தமாகவே கார் வைத்திருக்கிறார்கள்.. லட்சக்கணக்கான ரூபாய் செலவழித்து கார் வாங்கினாலும், அந்த காரை ஒரே நாளில் இழந்து விடும் நிலைமை இன்று ஏற்பட்டுள்ளது.. நேற்று ஒரேநாளில் 2 வகையான கார் திருட்டு நடந்து தமிழக மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது.. சேலம், சென்னையில் நடந்த இந்த மோசடி சம்பவங்கள் குறித்து போலீசார் விசாரணையை துரிதமாக மேற்கொண்டு வருகிறார்கள்.
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை, நடுவனேரியை சேர்ந்த பாஸ்கரன் என்பவருக்கு 60 வயதாகிறது.. இவர் தறி நெய்யும் தொழிலாளி ஆவார்..

இவருக்கு சொந்த தேவைக்காக கார் ஒன்று தேவைப்பட்டுள்ளது.. ஆனால், புதிதாக கார் வாங்க முடியாததால், செகண்ட் ஹேண்ட் காரை தேடி வந்துள்ளார்.. அப்போதுதான், சேலம் சோளம்பள்ளத்தை சேர்ந்த விக்னேஷ் என்ற 33 வயது நபரின் அறிமுகம் கிடைத்துள்ளது.. அவரிடமிருந்து பழைய இன்னோவா கார் ஒன்றை பேரம் பேசி, இறுதியில் 10 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கி உபயோகித்து வந்துள்ளார் பாஸ்கரன்..
சம்பவத்தன்று தன்னுடைய வீட்டின் முன்பு இந்த காரை நிறுத்தி வைத்திருக்கிறார் பாஸ்கரன்.. ஆனால், மறுநாள் காலையில், அந்த கார் மாயமாகியிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பாஸ்கரன், உடனடியாக இதுகுறித்து, சேலம் எஸ்பி ஆபீசில் புகார் செய்தார்..
செகண்ட் ஹேண்ட் இன்னோவா கார்
இதையடுத்து, மகுடஞ்சாவடி போலீசாரும், இந்த புகார் மனு குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்து, மாயமான காரை தேடி வந்தனர்.. அப்போதுதான், சேலம் சோளம்பள்ளம் பகுதியில் அந்த செகண்ட் ஹேண்ட் இன்னோவா கார் நின்று கொண்டிருப்பதை கண்டுபிடித்தனர்.
உடனே காரை சுற்றி வளைத்து விசாரணையை தீவிரப்படுத்தினார்கள் போலீசார்.. அப்போதுதான், காரை விற்ற ஓனர் விக்னேஷ்தான், அந்த காரை திருடியது அம்பலமானது..
கடந்த 31ம் தேதி, தன்னுடைய நண்பர்கள் முரளிகண்ணன், சுப்பிரமணி ஆகியோருடன் சேர்ந்து, பாஸ்கரன் வீட்டு முன்பு நிறுத்தி வைத்திருந்த காரை திருடிச்சென்றதும், அப்போது முதல் அந்த காரை இவர்களே பயன்படுத்தி வந்ததும் உறுதியானது.
காரின் பழைய ஓனர்
இதையடுத்து, காரின் பழைய ஓனர் விக்னேஷ் உட்பட நண்பர்களையும் சேர்த்து போலீசார் கைது செய்தனர்.. செகண்ட் ஹேண்ட் காரையும் பறிமுதல் செய்து, பாஸ்கரனிடம் ஒப்படைத்தனர்.. ஆனால், எதற்காக காரை விற்பதுபோல விற்றுவிட்டு, அதை திருடினார்கள் என்பது தெரியவில்லை.. அதுகுறித்த விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது.
இந்த சம்பவம் நடந்த அதே நாளில் சென்னையிலும் ஒரு நூதன கார் மோடி சம்பவம் நடந்துள்ளது.. சென்னையில் கால்நடை துறையில் ஆய்வாளராக இருக்கும் சரவணன் என்பவர், தான் புதிதாக வாங்கிய காருக்கு எக்ஸ்ட்ரா பிட்டிங் போட வேண்டி முன்னணி நிறுவனத்தின் வெப்சைட்டை பார்த்துள்ளார்.
அப்போது 50 சதவீதம் தள்ளுபடி, ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் போன்ற கவர்ச்சி சலுகையுடன் விளம்பரம் வந்துள்ளது. உடனே சரவணன் அந்த நிறுவனத்தை போனில் தொடர்பு கொண்டு விசாரித்துள்ளார்..
50 சதவீத தள்ளுபடியுடன் கார் சர்வீஸ்
அப்போது போனில் பேசிய மணிகண்டன் என்பவர், 50% தள்ளுபடியுடன் கூலிங் ஸ்டிக்கர், கார் மேட், சீட் கவர் போன்றவற்றை வீட்டுக்கே வந்து செய்து தருகிறோம் என்று கூறியிருக்கிறார்..
சிறிது நேரத்தில் சரவணனின் வீட்டிற்கு வந்த மணிகண்டன், காரை ஷெட்டிற்கு எடுத்து சென்றால் குறைந்த செலவில் சரி செய்து தருவதாக சொல்லி உள்ளார். உடனே சரவணனும் ஒரிஜினல் ஆதார் கார்டை மட்டும் பெற்றுக்கொண்டு காரை எடுத்துச் செல்ல அனுமதித்துள்ளார். காரை எடுத்து சென்ற மணிகண்டன், 2 நாள் ஆகியும் காரில் எந்த ரிப்பேரையும் செய்யவில்லை.
ஆதார் கார்டு - வாடகை கார்
இதனால் சரவணன், 'பரவாயில்லை, காரை கொண்டு வந்து தந்துவிடுங்கள்' என்று சொல்லியும் மணிகண்டன் கேட்கவில்லை.. ''காருக்கு வாடகை அதிகமாக தருகிறேன்'' என்று ஆசை காட்டி, தன்னுடைய செல்போனையும் ஸ்விட்ச் ஆப் செய்து விட்டு தலைமறைவாகி விட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சரவணன், ஆதார் கார்டில் உள்ள பெரம்பூர் முகவரிக்கு சென்று பார்த்தால், ஆதார் கார்டும் போலி என்பதும் தெரிய வந்தது.
இதற்கு பிறகே, ஆவடி போலீஸில் சரவணன் புகார் அளிக்கவும், இது தொடர்பாக விசாரணை நடந்தது. அப்போதுதான், சரவணனின் IMI நம்பரை வைத்து ட்ராக் செய்தபோது, சரவணனை போலவே, அண்ணா நகரில் ஒருவரிடம் காரை நூதன முறையில் திருட திட்டமிட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனே போலீசார் அந்த அண்ணாநகர் நபரை தொடர்பு கொண்டு, கார் திருடன் உங்களை ஏமாற்ற போவதால், காவல் துறைக்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
அரக்கோணம் பிரதீப்
எதிர்பார்த்தபடியே அண்ணாநகர் நபரிடம் காரை அபகரிக்க வந்த திருடனை, போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். இந்த நபர், அரக்கோணத்தை சேர்ந்த 32 வயது பிரதீப் என்பதும், தன்னுடைய நண்பன் சூர்யாவுடன் சேர்ந்து கார் மோசடியில் ஈடுபட்டு வந்ததும் அம்பலமானது.
அதாவது இவர்கள் இருவரும் சேர்ந்து வெப்சைட்டில் கார் பழுது, கார் விற்பனை, கார் அக்சஸ்சரிஸ் என்று பல வகை விளம்பரங்களை செய்து, அதில் சிக்கும் கஸ்டமர்களிடம் காரை அபேஸ் செய்து வந்ததும் வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து, ஆவடி சரவணனின் காரை திருச்சியில் 90 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற நிலையில், அந்த காரை போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான இருவரிடமும் விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications