சேலத்தில் ஓடும் பஸ்ஸில் வந்த ஆசை.. ஒரே அசிங்கமா போச்சு குமாரு.. கையும் களவுமாக சிக்கிய பெண்
சேலம்: சேலத்தில் ஓடும் பேருந்தில் நகைப்பறிப்பில் ஈடுபட முயன்ற பெண், தப்பி ஓட முயன்ற போது, கையும் களவுமாக பொதுமக்கள் பிடித்தனர். அப்போது பொதுமக்களிடம் அந்த பெண் சிக்கியதும் மயக்கம் வருவதாக கூறி சாலையில் அமர்ந்தார். அந்த பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணைக்காக அழைத்து சென்றனர். ஓடும் பேருந்துகளில், கூட்டமான இடங்களில் அப்பாவி போல் முகம் வைத்துக்கொண்டு திருடுபவர்களிடம் உஷாராக இருக்க வேண்டிது அவசியம் ஆகும்.
மக்கள் அதிகம் செல்லும் ஓடும் பேருந்துகளில், பேருந்து நிலையங்களில், ஊர் திருவிழாக்களில், கோயில் திருவிழாக்களில் சிலர் பணம் பறிப்பது, நகை பறிப்பில் ஈடுபடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்கள். இப்படிப்பட்டவர்களை போலீசார் கைது செய்தாலும், பின்னர் ஜாமினில் வந்து எஸ்கேப் ஆகும் அவர்கள், போலீசிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்து கொண்டே நகைப்பறிப்பில் ஈடுபடுவார்கள். அதேநேரம் நகை பறிப்பில் ஈடுபடுவோர், முதல் முறை சிக்கினால் தான் இவர்கள் திருடர்கள் என்பதே போலீசுக்கு தெரியும். அதுவரையில் இவர்களை பற்றிய விவரங்கள் போலீசுக்கு கிடைக்காது.

எனினும், அண்மைக்காலங்களில் பல இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளதால், திருடிவிட்டு தப்பியோடியவர்கள் யார், எப்படி கடைசியாக தப்பி சென்றார்கள் என்ற விவரங்களை போலீசாரால் சேகரிக்க முடிகிறது. அதை வைத்து திருடர்களை எளிதாக அடையாளம் காணும் போலீசார், அவர்களை கைது செய்கிறார்கள். அப்படிப்பட்ட திருடர்களின் புகைப்படங்களை ஒவ்வொரு பேருந்து நிலையத்தின் வாயிலிலும் போலீசார் போஸ்டராக ஒட்டி இருப்பார்கள். மேலும் கடை வீதிகளிலும், பஜார்களிலும் குற்றவாளிகளின் படங்களை ஒட்டியிருப்பார்கள். இதேபோல் காவல் நிலையங்களிலும் குற்றவாளிகளின் புகைப்படங்களை ஒட்டியிருப்பார்கள். இதை வைத்து மக்கள் குற்றவாளிகளை அடையாளம் கண்டு கவனமாக இருக்க முடிகிறது.
எனினும் சிசிடிவி கேமராக்கள் இல்லாத இடங்கள், ஓடும் பேருந்துகள், மிகவும் கூட்ட நெரிசல் உள்ள இடங்களில் திருடுவதை சில திருடர்கள் வாடிக்கையாக வைத்துள்ளார்கள். இவர்கள் திருடும் போது, கையும் களவுமாக பொதுமக்களிடம் சிக்கினால் மட்டுமே எளிதாக அடையாளம் காண முடியும் என்கிற நிலை இருக்கிறது. அப்படித்தான், சேலத்தில் ஓடும் பேருந்தில் நகைப்பறிப்பில் ஈடுபட முயன்ற பெண், தப்பி ஓட முயன்ற போது, கையும் களவுமாக பொதுமக்கள் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர்.
சேலத்தை சேர்ந்த பவித்ரா என்பவர் தனியார் நிறுவத்தில் வேலை செய்கிறார்.. இவர் நேற்று இரவு வேலை முடித்துவிட்டு, சேலம் பழைய பேருந்து நிலையம் சென்று கொண்டிருந்தார். அப்போது பேருந்தில் பவித்ராவின் பின்னால் அப்பாவி போல் நின்று கொண்டிருந்த பெண் ஒருவர், பவித்ராவின் கழுத்தில் இருந்த தங்க நகையை திடீரென திருட முயன்றதாக கூறப்படுகிறது. இதை பார்த்த பவித்ரா திருடுறாங்க என்று சத்தம் போட்டுள்ளார். இதனால் உடனடியாக பேருந்து நிறுத்தப்பட்ட போது, அந்த பெண் பேருந்தின் நடுவில் இருந்து வேகமாக வந்து இறங்கி தப்பி ஓடமுயன்றார். மின்னல் வேகத்தில் ஓட முயன்ற அந்த பெண்ணை சாலையில் நின்றிருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் பிடித்தனர். பின்னர் அந்த பெண்ணை அவர்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.












Click it and Unblock the Notifications