சிவகார்த்தி, அஜித் குடும்பம் பத்தி தவெகவினர் இழிவா பேசினப்ப எங்கிருந்தீங்க - விஜய்யை விளாசிய சீமான்
கள்ளக்குறிச்சி: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக -பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். தவெக, நாம் தமிழர் கட்சியும் களத்தில் சுழன்று கொண்டிருக்கிறார்கள். பெண்களை இழிவாக பேசியதாக கூறி அரசியல் விமர்சகர் பொன்ராஜ் மீது தவெக தலைவர் விஜய் டிஜிபியிடம் புகார் அளித்தார். இந்நிலையில் தன்னை பற்றியும், நடிகர்கள் சிவகார்த்திகேயன், அஜித் குடும்பத்தை பற்றியும் தவெகவினர் இழிவாக பேசியதற்காக விஜய் மீது நான் புகார் கொடுக்கலாமா என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
கள்ளக்குறிச்சியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "தவெக கட்சியில் உள்ளவர்கள் என்னை, என் குடும்பத்தை இழிவாக பேசியுள்ளனர். தம்பி சிவகார்த்திகேயன் குடும்பத்தை, அருமை சகோதரர் அஜித் குடும்பத்தை பற்றி எல்லாம் இழிவாக பேசி பதிவிட்டுள்ளனர். அவற்றை எல்லாம் ஒரு புத்தகமாகவே போடலாம். அவ்வளவு இழிவாக பேசியுள்ளனர். என் தங்கை சங்கீதாவையும், ஐயா ஸ்டாலினையும் கட்டிப்பிடிப்பது போல சித்தரித்து ரசிகர்கள் பதிவிட்டுள்ளனர்.

விஜய் சொல்லியிருக்க வேண்டும்
எனக்கே அந்தப் பதிவு வரும்போது, அவருக்கோ அவரின் கட்சியில் முதன்மையான பதவியில் உள்ள இரண்டாம் கட்ட தலைவர்கள் கவனத்திற்கோ வந்திருக்கும். இதையெல்லாம் கண்டித்து, கண்ணியமற்ற பதிவுகளை தவிர்க்க வேண்டும் என்று விஜய் அறிக்கை விட்டிருக்க வேண்டும். அப்போதுதான் அது கண்ணியமற்றது என்பதை உணர்வார்கள். உங்களை பெற்றவர்கள், உடன் பிறந்தவர்கள், ஆசிரியர்கள், நம் கட்சியில் உள்ள பெண்கள் கூட அறுவறுப்பார்கள் என்று சொல்லியிருக்க வேண்டும்.
அப்படி செய்ய வேண்டாம் என்று நேர்மையாக அறிக்கை விட்டிருந்தால், இப்போது பொன்ராஜ் மீது கமிஷனரிடம் மனு கொடுப்பதற்கான தகுதி இருந்திருக்கும். என்னை, என் மனைவியை, சிவ கார்த்திகேயன் மகளை, அஜித் குடும்பம் பிள்ளைகளை பேசும்போது விஜய் எங்கிருந்தார். மற்ற கட்சிகளில் உள்ள பெண்களை தவெகவினர் அவ்வளவு கேவலமாக எழுதுகிறார்கள். இதையெல்லாம் சேர்த்து நான் இதே கமிஷனர் அலுவலகத்தில் உங்கள் மீது புகார் கொடுக்கவா. தவெகவினரை அவர் கண்டிக்காததால் அத்துமீறுகிறார்கள்.
உயிர் எடுக்க வருகிறார்
அவர் மீது வழக்கு போடுங்கள் என்று நான் புகார் கொடுக்கட்டுமா. இதையெல்லாம் நான் புத்தகம் போட்டு சமூகத்திற்கு காட்டவா. பொன்ராஜிக்கு கட்சி இல்லை, வாக்கு இல்லை. அவர் ஏதோ சமூக அக்கறையில் பேசியுள்ளார். இவர்கள் இப்படியெல்லாம் இருக்கிறார்களே, இதை சரி செய்ய முடியாது என்கிற ஆதங்கம் தான். விஜய் இன்னும் நடித்துக் கொண்டு தான் இருக்கிறார். அவர் நடிப்பை நிறுத்தவில்லை. திரையில் விட இப்போது தரையில் அதிகம் நடிக்கிறார்.
நியாயமானவராக இருந்தால் அவர்கள் கட்சியினர் ஆபாசமாக பேசும்போது அதை கண்டித்திருக்க வேண்டும். அப்படி எதுவும் சொல்லவில்லையே. பெண்களுக்கு எதிராக இப்படி கோடி பிரச்சனை நடந்துள்ளது. எப்போது அவர் வெளியில் வந்துள்ளார். உங்களுக்காக செத்தவரை கூட அவர் பார்க்கவில்லை. உங்கள் விஜய் உங்கள் விஜய் உயிரென வரவில்லை. உங்கள் விஜய் உங்கள் விஜய் உயிரெடுக்க தான் வருகிறார் என்பதுதான் சரியான பாட்டு. அவர் போன இடமெல்லாம் செத்துருக்கிறார்கள்" என்றார்.












Click it and Unblock the Notifications