Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரசு ஊழியர்களை தந்திரமாக ஏமாற்றிய ஸ்டாலின்.. ஓய்வு ஊதிய அறிவிப்பை சாடிய எடப்பாடி பழனிச்சாமி

Subscribe to Oneindia Tamil

சேலம்: ‛‛திமுக ஆட்சியில் ஒரு குடும்பம் நன்மை பெறவே ஆட்சி நடக்கிறது. ஒரு குடும்பம் வாழ 8 கோடி மக்களை சுரண்டுவது நியாயமா? இதற்கு 2026 தேர்தல் ஒரு முடிவுகட்டும். ஸ்டாலின் ஆட்சியை மீண்டும் தொடர முயற்சிக்கிறார். அந்த முயற்சி எந்த வகையிலும் வெற்றி பெறாது. உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் என்ற பெயரில் அரசு ஊழியர்களை தந்திரமாக ஏமாற்றி உள்ளார் ஸ்டாலின்'' என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக விமர்சனம் செய்தார்.

‛மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' எழுச்சிப்பயணம் மேற்கொள்ளும் அதிமுக பொதுச்செயலாளரும், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று சேலம் மாவட்டம் வீரபாண்டி சட்டசபை தொகுதிக்குட்பட்ட திருச்சி பிரதான சாலை, கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் நடைபெற்றபொதுக்கூட்டத்தில் பேசினார்.

stalin-cleverly-deceived-government-employees-edappadi-palaniswami-criticized-taps-pension-scheme

அப்போது அவர் முதல்வர் ஸ்டாலினை கடுமையாக விமர்சனம் செய்தார். ‛‛எந்த திசையை நோக்கினாலும் மக்கள் வெள்ளம். 2 கி.மீட்டர் தூரம் மக்கள் வெள்ளத்தில் நீந்தியே இங்கு வந்திருக்கிறேன். அடுத்தாண்டு நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் வீரபாண்டி தொகுதி வெற்றிக்கு இந்த மக்கள் கூட்டமே சாட்சி.

சேலம் மாவட்டம் அதிமுக கோட்டை. சேலம் மாவட்ட தொகுதிகள் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்பதற்கு இந்த மக்களே சாட்சி. அதிமுக கூட்டணி வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது.
2011 சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவால் நிறுத்தப்பட்ட வேட்பாளர்கள் 11 தொகுதியிலும் வென்றோம். அதிமுகவின் கோட்டையாக்கினோம்.

2016ல் 10 இடங்களில் வென்றோம். அப்போது டபுள் டிஜிட்டில் வென்ற ஒரே மாவட்டம். அம்மா மறைவுக்குப் பின்னர் 2021ல் 10 இடங்களில் வென்று அதிமுக கோட்டை என்பதை மீண்டும் நிரூபித்தோம். ஸ்டாலின் தமிழகத்துக்கு முதல்வராக இருக்கலாம். ஆனால், சேலம் மாவட்டம் அதிமுகவுடையது. தப்பித்தவறி ஒரு இடத்தில் வென்றுவிட்டீர்கள். இந்தமுறை அதுவும் உங்களுக்குக் கிடைக்காது.

சேலத்திலுள்ள 11 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெல்லும். அந்த அளவுக்கு அதிமுக ஆட்சிகளில் மக்களுக்குத் தேவையான திட்டங்களைக் கொண்டுவந்தோம். திமுக ஆட்சிக்கு வந்து சேலத்துக்கு ஒரு திட்டமாவது கொண்டுவந்தார்களா? நாம் கொண்டுவந்த திட்டங்களை நிறுத்தியதுதான் திமுகவின் சாதனை. எவ்வளவு சிரமப்பட்டு திட்டங்களைக் கொண்டு வந்தோம்.

நூறு ஏரி திட்டத்தினால் 4 தொகுதிகளுக்கு நன்மை கிடைக்கும். விவசாயிகள் பொதுமக்கள் பயன்பெறும் திட்டம். அந்த திட்டம் துவக்கினோம், முதல் கட்டப்பணிகள் முடிந்து 6 ஏரிகளைத் திறந்துவைத்தோம், அதன்பிறகு இன்று வரை அந்த திட்டம் முழுமை பெறவில்லை. இப்படிப்பட்ட அவல ஆட்சி தொடர வேண்டுமா? திமுக ஆட்சியில் ஒரு குடும்பம் நன்மை பெறவே ஆட்சி நடக்கிறது.

ஒரு குடும்பம் வாழ 8 கோடி மக்களை சுரண்டுவது நியாயமா? இதற்கு 2026 தேர்தல் ஒரு முடிவுகட்டும். ஸ்டாலின் ஆட்சியை மீண்டும் தொடர முயற்சிக்கிறார். அந்த முயற்சி எந்த வகையிலும் வெற்றி பெறாது. நான்கே முக்கால் ஆண்டு தூங்கிவிட்டு இப்போதுதான் அவருக்கு ஞானோதயம் பிறந்திருக்கிறது. அதனால் புதிய திட்டங்களை அறிவித்து மக்கள் செல்வாக்கைப் பெறலாம் என்று நினைக்கிறார்.

தமிழகம் முழுவதும் போராட்டக்களமாகிவிட்டது. விவசாயிகள், வியாபாரிகள், செவிலியர்கள், அரசு ஊழியர்கள் எல்லோரும் போராடுகிறார்கள். ஆட்சியில் நல்லது செய்திருந்தால் எப்படி போரட்டம் நடைபெறும்..? திமுக சிறந்த ஆட்சி என்கிறார், எதில் தெரியுமா லஞ்சம் வாங்குவதில், ஊழல் செய்வதில் சிறந்த ஆட்சி, மக்களை சுரண்டுவதில் சிறந்த ஆட்சி. அதிமுகவைப் பொறுத்தவரை மக்களுக்குத் திட்டம் போடுவதில் சிறந்த ஆட்சி.

அதிமுக, திமுக ஆட்சிகளை ஒப்பிட்டு பாருங்கள். தமிழகத்தில் 6999 போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 104 கோடி ரூபாய் நிவாரணம் கொடுத்ததாக தூத்துக்குடியில் சமுகந்லத்துறை அமைச்சர் பேசுகிறார். 6999 சிறுமிகள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றால் எந்த அளவுக்கு கொடுமையான ஆட்சி இது. சிறுமி முதல் பாட்டி வரை பாதுகாப்பில்லை, நாட்டு மக்களுக்கே பாதுகாப்பில்லை.

நாடு சிறப்பாக இருக்கவேண்டும் என்றால் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்க வேண்டும். ஆனால் இங்கு அப்படியல்ல, சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. மக்கள் ஒவ்வொரு நாளும் அஞ்சி வாழும் நிலை உருவாகியிருக்கிறது.

இதைப்பற்றியெல்லாம் ஸ்டாலினுக்குக் கவலையில்லை. நான்கு நாட்கள் முன்பு வடமாநிலத் தொழிலாளர் ஒருவரை நான்கு சிறுவர்கள் போதையில் தாக்குகிறார்கள். எவ்வளவு கொடுமையான நிகழ்வு, இப்படிப்பட்ட ஆட்சி தொடர வேண்டுமா? கஞ்சா போதை தாண்டவம் ஆடுகிறது. சட்டமன்றத்தில் முதல்வர் கவனத்துக்கு கொண்டுசென்றும் முதல்வர் கவனம் எடுத்துக்கொள்ளவில்லை.

இதனால் மாணவர்கள், இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி சீரழிகிறார்கள். ந்மக்கு செல்வம் நம் குழந்தைகள் தான். அந்த குழந்தைகள் நம் கண் எதிரே போதைக்கு சீரழிகிறார்கள். சட்டம் ஒழுங்கு காக்கும் டிஜிபி இதுவரை நியமிக்கப்படவில்லை. நாட்டு மக்களைப் பற்றி கவலைப்பட்டிருந்தால், சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட எண்ணியிருந்தால் நிரந்தர டிஜிபி நியமித்திருக்கலாம்.

இதற்கு என்ன காரணம்? திமுக அரசு அனுப்பிய பட்டியலில் இருந்துதான் யுபிஎஸ்சி லிஸ்ட் அனுப்பியது. அந்த மூவரில் ஒருவர் கூட திமுகவுக்கு சாதகமாக இல்லை. நேர்மையாக இருப்பவர்கள், சுயமாக சிந்திப்பார்கள் என்பதால் ஆட்சிக்கு ஆபத்து ஏற்படும் என்பதால்தான் நியமிக்கவில்லை.

நீதிமன்றங்களும் கண்டனம் தெரிவித்துவிட்டது. ஆனால் முதல்வர் இன்னும் நியமிக்கவில்லை. உடனடியாக நியமிக்க வேண்டும் என்று இக்கூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கிறேன். நாட்டு மக்களுக்கு நன்மை செய்யும் எண்ணம் இருந்தால் அந்த மூவரில் ஒருவரை நியமிக்க வேண்டும்.
திமுக என்றால் கார்ப்பரேட் கம்பெனி. கட்சி என்றால் அதிமுக தான் கட்சி. மேடையில் இருப்பவர்கள், முன்னே அமர்ந்திருப்பவர்கள் யார் கட்சிப் பணியாற்றினாலும், அங்கேயிருந்து இங்கே வந்து அமரலாம்.திமுகவில் முடியுமா?.

நான் நம் மண்ணின் மைந்தன். உங்களால் எனக்கு முதல்வர் வாய்ப்பு கிடைத்தது, பொதுச்செயலாளர் பதவி கிடைத்தது. வரலாற்றுச் சிறப்புமிக்க இயக்கத்துக்கு பொதுச்செயலாளர் என்ற அடையாளத்தை தொண்டர்கள், நிர்வாகிகள் தந்தார்கள். திமுகவில் கருணாநிதி, ஸ்டாலினுக்குப் பிறகு உதயநிதி வரத் துடிக்கிறார், அதன்பிறகு இன்பநிதி காத்திருக்கிறார். குடும்ப ஆட்சி தொடர வேண்டுமா?
திமுகவில் உதயநிதியை விட்டால் ஆளே இல்லையா? கருணநிதி குடும்பத்தில் பிறந்த ஒரே காரணம் தான். எத்தனை முறை ஜெயிலுக்குப் போனார்? திமுகவில் அதிக நாட்கள் எம்.எல்.ஏவாக இருந்தவர் அண்ணன் துரைமுருகன். கருணாநிதி குடும்பத்தில் பிறக்காததால் அவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை.

மிசா சட்டத்தில் துரைமுருகனும் பாதிக்கப்பட்டார், ஆனாலும், அவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. நான் கிளைச் செயலாளராக பணியைத் துவக்கி படிப்படியாக பொதுச்செயலாளராகி இருக்கிறேன், சட்டமன்ற உறுப்பினர், எம்.பி அப்புறம் முதல்வர். திமுகவில் இப்படி வரமுடியுமா? ஸ்டாலின் தலைவர், உதயநிதி இளைஞரணி தலைவர், கனிமொழி மகளிரணி தலைவர். டெல்லியில் கூட அந்த குடும்பம் தான் பொறுப்புக்கு வரும்.இந்த நிலையை வரும் தேர்தலில் மாற்ற வேண்டும்.

ஸ்டாலின் எப்போதும் நிதி இல்லை என்கிறார், எப்படி நிதி இருக்கும்? திட்டம் நடத்த நிதி இல்லை, கார் பந்தயம் நடத்த நிதி இருக்கிறது. கார் பந்தயம் முக்கியமா? எழுதாத பேனாவை நடுக்கடலில் வைக்க அரசு பணம் 82 கோடி ஒதுக்கீடு செய்கிறார். எழுதும் பேனாவை மாணவர்களுக்கு கொடுத்தால் பாராட்டுவார்கள். அரசு பணத்தை ஊதாரித்தனமாக செலவு செய்கிறார். மக்கள் வரிப்பணத்தை செலவு செய்கிறார்கள்.

அண்மையில் எனக்குக் கிடைத்த தகவல் படி, சுய உதவி குழுக்கள் எப்படி செயல்படுகிறது என்பதை ஆராய்வதற்கு 44 கோடி ரூபாய் ஒதுக்கியிருக்கிறார்கள், இன்னும் 2 மாதங்களில் கொள்ளையடிக்க ஒதுக்கியுள்ளனர். ஆய்வு முன்னரே செய்திருந்தால் பரவாயில்லை. இப்போது நிதியை சுருட்டுவதற்காகத்தான் ஆய்வு என்ற போர்வையில் ஒதுக்கியுள்ளனர். இதெல்லாம் அதிமுக ஆட்சியில் தோண்டியெடுத்து சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும்.

அதிமுகவுக்கு கூட்டணி அமையவில்லை என்று ஸ்டாலின் பேசுகிறார். ஸ்டாலின் அவர்களே பொருத்திருங்கள், கூட்டணி அமையும். எடப்பாடி கிராமத்தில் இருந்து வந்தவர் என்று சாதாரணமாக நினைத்துக்கொண்டு இருக்கிறார். அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமையும், பெரும்பான்மை இடங்களில் வென்று ஆட்சி அமைக்கும். திமுக கடந்த தேர்தலில் 525 அறிவிப்புகள் வெளியிட்டது. இன்று 80% நிறைவேற்றப்பட்டதாக பச்சைப் பொய்யை ஸ்டாலின் சொல்லி இருக்கிறார்.

கல்விக் கடன் ரத்து என்றார், ரத்து செய்தாரா? கேஸ் மானியம் 100 ரூபாய் கொடுத்தாரா? ரேஷன் கடையில் மாதந்தோறும் கூடுதல் சர்க்கரை கொடுத்தார்களா? 100 நாள் வேலைத் திட்டத்தை 150 நாளாக உயர்த்துவேன் என்றார்கள், செய்தார்களா? சம்பளம் கூட கொடுக்கவில்லை. அதிமுக ஆட்சியில் இல்லாவிட்டாலும் மக்கள் பிரச்னைக்கு குரல் கொடுக்கும் கட்சி.

அதனாலே 150 நாளாக உயர்த்துவதற்கு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தோம், அதன்படி 125 நாட்களாக உயர்த்தி இருக்கிறார்கள். பணி செய்து 15 நாட்களில் சம்பளம் முறையாக கொடுக்க வேண்டும் என்ற பணிப்பாதுகாப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் திமுக கூட்டணியினர் அண்மையில் போராட்டம் நடத்தினார்கள், ரத்து செய்யப்படும் என்று பொய்யான செய்தி வெளியிட்டு குழப்பத்தை ஏற்படுத்தினர்.

இதில் அரசியல் ஆதாயம் தேட முயற்சித்தனர், முடியவில்லை. எத்தனை பொய்யை கக்கினாலும் மக்களிடம் எடுபடாது, உண்மை ஒருபோதும் உறங்காது, உண்மைதான் வெல்லும். 100 நாள் வேலைத்திட்டம் 125 நாளாக உயர்த்தினார்கள், ஆனால் ரத்தாகும் என்று மக்களை குழப்புகிறார்கள். அதிமுக ஆட்சி அமைந்தவுடன் 125 நாட்கள் என்பது 150 நாட்களாக உயர்த்தப்படும்.
எப்போது பார்த்தாலும் ஸ்டாலின் மகளிருக்கு 1000 ரூபாய் உரிமைத் தொகை கொடுத்தேன் என்கிறார்.

உங்கள் வீட்டுப் பணத்தையா கொடுத்தீர்கள்? அதுவும் அதிமுக சார்பில் நானும் சட்டமன்ற உறுப்பினர்களும் சட்டமன்றத்திலும், பொதுக்கூட்டங்களிலும் பேசி அழுத்தம் கொடுத்த காரணத்தால் வேறு வழியின்றி, 28 மாதம் கழித்து தான் உரிமைத் தொகை கொடுத்தார். இப்போது மக்கள் செல்வாக்கை இழந்துவிட்டதால் தோல்வி பயத்தில், மேலும் 17 லட்சம் பேருக்கு விதிகளைத் தளர்த்தி உரிமைத் தொகை கொடுப்பதாக அறிவித்துள்ளார்.

ஏன் அப்போதே மக்கள் பிரச்னை கண்ணுக்கு தெரியாதா? அதுவும் பெண்களின் கஷ்டங்களைப் பார்த்து கொடுக்கவில்லை, அடுத்தாண்டு தேர்தல் வருவதால் ஓட்டுக்காகத்தான் கொடுக்கிறார். இதை முன்பே கொடுத்திருந்தால் என்ன? கிராமம் முதல் நகரம் வரை மாணவர்கள் பட்டப்படிப்பு படிக்கும் சூழ்நிலை உருவாக்கினோம்.

ஒரேயாண்டில் 11 அரசு மருத்துவக் கல்லூரியை சேர்த்து, அதிமுகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் 17 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவக் கல்லூரி கொண்டுவந்து இந்திய வரலாற்றில் சாதனை படைத்தோம். வீரபாண்டி தொகுதியில் சங்ககிரியில் சட்டக்கல்லூரியை கட்டினோம், இவர் ரிப்பன் வெட்டி திறந்துவிட்டார்.

68 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 21 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், 4 அரசு பொறியியல் கல்லூரிகள், 7 அரசு சட்டக்கல்லூரிகள், 4 அரசு வேளாண்மைக் கல்லூரிகள், 5 அரசு கால்நடை மருத்துவக் கல்வி ஆராய்ச்சி நிலையங்கள் என பல கல்லூரிகளைத் திறந்தோம். இப்படிப்பட்ட எங்களைப் பார்த்து சேலஞ்ச் செய்கிறார்.

அதிமுக ஆட்சியில் 5% பணிகள் தான் நிறைவேற்றப்பட்டதாகச் சொல்கிறார். இதெல்லாம் அவர் கண்ணுக்குத் தெரியவில்லையா? புள்ளிவிவரம் தெரியாமல் பேசுகிறார். இந்தியாவிலேயே உயர்கல்வியில் முதன்மை மாநிலம் என்று 2030ம் ஆண்டில் அடைய வேண்டிய இலக்கை 2019ம் ஆண்டிலேயே அடைந்துவிட்டது தமிழ்நாடு. அதிமுக ஆட்சியில் எல்லா துறைகளுமே சிறப்பாக செயல்பட்டது, அதன்மூலம் நூற்றுக்கணக்கான தேசிய விருதுகளைப் பெறப்பட்டிருக்கிறது.

உள்ளாட்சித்துறையில் மட்டும் 140 தேசிய விருதுகளும், போக்குவரத்து துறை, மின்சாரத்துறை, சமூகநலத்துறை, உயர்கல்வித்துறை என இப்படி பல துறைகளிலும் விருதுகளை அள்ளியிருக்கிறது அதிமுக அரசு. அதுமட்டுமல்ல, இந்தியாவிலேயே தொடர்ந்து 5 முறை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தேசிய விருது பெற்றது அதிமுக ஆட்சியின்போதுதான்.

மேலும், தமிழகத்தில் அதிக உணவு தானிய உற்பத்தியைப் பெருக்கி, தேசிய அளவில் ஐந்தாண்டுகள் கிருஷ்கர்மா என்ற உயர்ந்த விருதினைப் பெற்றது அதிமுக அரசு. இது அதிமுக சாதனை. நாங்க சேலஞ்ச் பன்றோம் இப்படி தேசிய விருதுகள் பெற்ற வரலாறு உண்டா திமுகவுக்கு? உங்க ஆட்சியில் என்ன செய்தீர்கள்?.

சேலம் மாவட்டத்தில் எத்தனை பாலங்கள், கூட்டுக் குடிநீர் திட்டம் வீரபாண்டி தொகுதியில் பாதுகாக்கப்பட்ட காவிரி தண்ணீர் கொடுத்தோம், மலைப்பகுதிக்கு சாலை வசதி கொடுத்தோம், தமிழ்நாடு முழுவதும் சிறப்பான சாலை அமைத்தோம். மத்திய தரைவழிசாலை போக்குவரத்து துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் பேசும்போது இந்தியாவிலேயே அதிக நீளமான தார்சாலை அமைக்கப்பட்ட மாநிலம் தமிழ்நாடு என்று பேசினார்.

இது அதிமுக வரலாறு, வரலாறு தெரியாமல் ஸ்டாலின் பேசுகிறார்.
ஆட்சி இருப்பதால் போகும் பக்கமெல்லாம் மக்களை அழைத்து பேசிக்கொண்டிருக்கிறார். அடுத்து எதிர்க்கட்சி என்று வரும்போது திமுக என்ற கட்சி அடையாளம் தெரியாமல் போய்விடும். அந்தளவுக்கு ஊழல் மலிந்துவிட்டது.

நகராட்சி நிர்வாகத்துறையில் 800 கோடிக்கு மேல் ஊழல், அமலாக்கத்துறை அதை கண்டுபிடித்து எப்ஃ.ஐ.ஆர் போடச்சொல்லி கடிதம் எழுதியது. இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை, அதிமுக ஆட்சியில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ்நாடு முழுவதும் 6 ஆயிரம் மதுக்கடை இருக்கிறது, டாஸ்மாக்கில் ஒரு நாளைக்கு ஒன்றரை கோடி பாட்டில் விற்கிறது, ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக பெறுவதால் நாளொன்றுக்கு 15 கோடி ரூபாயும், மாதத்துக்கு 450 கோடி ரூபாயும், வருடத்துக்கு 5400 கோடியுமாக இந்த நான்காண்டுகளில் 22 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளை அடித்திருக்கிறார்கள். இந்த அரசு தொடர வேண்டுமா?

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் உதயநிதியும் சபரீசனும் 30 ஆயிரம் கோடி கையில் வைத்துக்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கிறார்கள் என்று சொன்னார், இதுவரை ஸ்டாலின் இதற்கு பதில் அளிக்கவில்லை. இப்படிப்பட்ட ஊழல் ஆட்சி தேவையா?
அதிமுகவின் நிறைய திட்டங்களை நிறுத்திவிட்டனர். பொருளாதாரச் சூழலால் ஏழைப் பெண்களின் திருமணம் தடைபடக் கூடாது என்பதற்காக திருமண உதவித் திட்டம் என்ற அற்புதமான திட்டத்தை அமல்படுத்தினார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா. அதன்மூலம், 25 ஆயிரம் ரூபாய் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் மணப்பெண்ணுக்கு வழங்கப்பட்டது. மேலும், தாலிக்குத் தங்கம் திட்டம் மூலம் திருமணத்துக்காக ஒரு பவுன் தங்கம் கொடுக்கப்பட்டது.
2011 முதல் 2021 வரையிலான அதிமுகவின் தொடர்ச்சியான 10 ஆண்டுகளில் 12 லட்சம் மகளிர் இத்திட்டம் மூலம் பயனடைந்தனர். மீண்டும் இத்திட்டம் அதிமுக ஆட்சியில் தொடரும், மணப்பெண்ணுக்கு பட்டுச்சேலை, மணமகனுக்கு பட்டுவேஷ்டி வழங்கப்படும். ஒவ்வொரு தீபாவளிக்கும் பெண்களுக்கு சேலை வழங்கப்படும்.

ஏழை, விவசாயத் தொழிலாளி, அருந்ததியர் மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், மலைவாழ், மீனவ மக்களுக்கு மனை இருந்தால் அதில் அரசு சார்பில் கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும். மனை இல்லாதவர்களுக்கு அரசே மனையை வாங்கி, கான்கிரீட் வீடுகளைக் கட்டிக்கொடுக்கும். திருமணமாகி தனிக்குடித்தனம் போனாலும் அவர்களுக்கும் வீடு கட்டித் தரப்படும்.
நெசவாளர்கள் தொழில் சரிவடைந்துள்ளது, தொழில் சிறப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

அதிமுக ஆட்சி விவசாயிகளுக்கு பொற்காலம். விவசாயிகளுக்காக அதிமுக ஆட்சியில் குடிமராமத்து திட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்மூலம் ஏரிகள், குளங்கள், கண்மாய்கள் தூர்வாரப்பட்டு நீர் தேக்கப்பட்டன.
தூர் வாரப்பட்டதிலிருந்து கிடைத்த வண்டல் மண் விவசாயத்துக்குப் பயன்பட்டது. ஒருபக்கம் ஏரிகள் ஆழமாகின, இன்னொருபக்கம் விவசாயிகளுக்கு நல்ல விளைச்சல் கிடைத்தது. பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் 14 ஆயிரம் ஏரிகள் உள்ளன, அவற்றில் 8 ஆயிரம் ஏரிகள் 1240 கோடி செலவில் தூர்வாரப்பட்டது. உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் 26 ஆயிரம் கண்மாய்களும் தூர்வாரப்பட்டன. இதையும் நிறுத்திவிட்டனர்.

மீண்டும் அதிமுக ஆட்சியில் இத்திட்டம் நிறைவேற்றப்படும். விவசாயிகள் இலவசமாக வண்டல் மண்ணை அள்ளிச் செல்லலாம் என்றோம். தடுப்பணைகள் அமைத்து, தண்ணீரை தேக்கினோம். இப்படி சாதனை மேல் சாதனை படைத்தது அதிமுக அரசு.
விவசாயிகள் பயன் பெற தலைவாசல் அருகே பிரமாண்ட கால்நடை பூங்கா 1050 ஏக்கரில் 1000 கோடியில் கட்டினோம். நான் முதல்வராக இருந்தபோது முதல் கட்ட கால்நடை ஆராய்ச்சி நிலையம் திறந்தோம், அதன்பின்னர் அந்த ஆராய்ச்சி நிலையம் பணி நிறைவு பெறாமல் அப்படியே கிடந்தது. நான் தொடர்ந்து பேசியதால் கடந்த ஆண்டு திறந்தார்கள், இப்போது மீண்டும் கிடப்பில் போட்டுவிட்டனர்.

மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தபிறகு கால்நடை பூங்கா சிறப்பாக செயல்படும்.
விவசாயிகள் வளர்க்கும் பசு ஒரு நாளைக்கு15 லிட்டர் தான் பால் கொடுக்கும். நான் அமெரிக்கா பஃபல்லோ பால் பண்ணைக்கு சென்றபோது ஒரு பசு 65 லிட்டர் பால் கொடுப்பதைக் கண்டேன். வெளிநாட்டில் இருக்கும் கலப்பின பசு, நம் கலப்பின பசு இரண்டையும் இணைத்து ஆராய்ச்சி மூலமாக நம் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப பசுக்களை உருவாக்கி விவசாயிகளுக்கு கொடுக்க இருந்தோம். இதன் மூலம் ஒரு பசு ஒரு நாளைக்கு 40 லிட்டர் பால் கறக்கும், அதையும் தடுத்து நிறுத்தியது திமுக அர்ச. செயல் இழந்த அரசு.

எப்போது பார்த்தாலும் ஒரு செங்கல்லை தூக்கிக்கொண்டு எய்ம்ஸ் மருத்துவமனை எங்கே என்று கேட்கிறீர்களே..? பல லட்சம் செங்கல்லை கொண்டு கட்டப்பட கால்நடை பூங்காவை ஏன் முடக்கி வைத்திருக்கிறீர்கள்? என்ன கன்று வேண்டுமோ, அதை கொடுக்கும் ஆராய்ச்சியையும் மூடிவிட்டனர். இது விவசாயிகள் விரோத அரசு.
மகளிர் குறிப்பிட்ட நேரத்திற்கு வேலைக்குச் சென்றுவர ஏதுவாக அதிமுக ஆட்சியில் அம்மா இரு சக்கர வாகனத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது, பாரதப் பிரதமர் மோடி அவர்கள் சென்னைக்கு வந்து இந்தத் திட்டத்தைத் தொடக்கிவைத்தார். இத்திட்டத்தின் படி சுமார் 3 லட்சம் மகளிர் இரு சக்கர வாகனம் வாங்க, 25 ஆயிரம் ரூபாய் மானியம் கொடுக்கப்பட்டது. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் இத்திட்டம் தொடரும், 5 லட்சம் மகளிருக்கு கொடுக்கப்படும்.
சட்டமன்றத்தில் விதி எண் 110ன் கீழ் 5 லட்சம் முதியோருக்கு முதியோர் உதவித் தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பைக் கொடுத்து, 90% பேருக்கு, அதாவது 4 லட்சத்து 85 ஆயிரம் முதியோர்களுக்கு ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டது. இதையும் கைவிட்டார்கள்.

மீண்டும் அதிமுக ஆட்சியில் இத்திட்டம் தொடரும்.
சட்டமன்றம் ஒவ்வொரு ஆண்டும் 100 நாட்கள் நடைபெறும் என்றார், ஆனால் நடைபெறவில்லை. இப்படி அறிவிப்பது ஒன்று, நிறைவேற்றுவது ஒன்று, இரட்டை வேடம் போடும் கட்சி திமுக.

சேலம் மாவட்டத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க ஸ்டீல் பிளான்ட் இடத்தில் 1500 ஏக்கர் கையகப்படுத்த மத்திய அரசுக்கு திட்டம் கொடுத்தோம், மத்திய அரசும் இசைவு கொடுத்தது. ஆனால் திமுக அரசு எடுக்கவில்லை. அப்போது ஒரு கோரிக்கை வைத்தோம், பிரதமர் அதை ஏற்றுக்கொண்டார்.

அதன்படி ஸ்டீல் பிளான்டில் கையகப்படுத்தும் இடத்தில் ராணுவத் தளவாட உதிரிப் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்படும் என்றார்.
39 எம்பிக்கள் வென்றும் நாடாளுமன்றத்தில் போராடி அந்த திட்டத்தைக் கொண்டுவரவில்லை. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும், வீரபாண்டி தொகுதிக்குட்பட்ட பகுதியில் தான் ஸ்டீல் பிளான்ட் இருக்கின்றது, இதில் தொழிற்சாலை அமையும்போது சேலம் மாவட்டத்தில் பல்வேறு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தரப்படும்.

இதே அதிமுகவில் 39 எம்பிக்கள் இருந்திருந்தால் இந்நேரம் ராணுவத் தளவாட தொழிற்சாலை இயங்கிக்கொண்டிருக்கும்.
மகக்ள் செல்வாக்கு இழந்து பயத்தில் அஞ்சி புதிய திட்டம் அறிவிக்கிறார். தேர்தல் அறிக்கையில் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்துவோம் என்றார். ஆனால், இப்போது ஒரு புதிய திட்டம் கொண்டுவந்திருக்கிறார். அரசு ஊழியர் கேட்பது பழைய ஓய்வூதிய திட்டம். ஆனால் ஸ்டாலின் குறிப்பிடுவது உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம். பெயரை மாற்றி இன்று அவர்களை ஏமாற்றுகிறார். வேலை நிறுத்தத்தை நிறுத்த தந்திரமாக உத்தரவு வெளியிட்டுள்ளனர்.

ஸ்டாலின் அவர்களே நீங்கள் அரசாணை வெளியிடுகிறபோதுதான், அரசு ஊழியர்கள் இந்த அரசைப் பற்றி தெரிந்துகொள்வார்கள்.
திமுக கூட்டணி தடுமாறுகிறது. காங்கிரஸ் இருக்குமா என்றே தெரியவில்லை. தேர்தல் வருகின்ற வரை உங்கள் கூட்டணி நிலைக்குமா என்ற சந்தேகம் மக்களிடம் வந்துவிட்டது. திமுக ஆட்சியில் மின்கட்டணம் 67%, வரிகள் 100% முதல் 150% உயர்வு. பீக் ஹவர் கட்டணம், குப்பைக்கும் வரி. வரி மேல் வரி போட்டு மக்களுக்கு சுமை கொடுத்திருக்கிறது அரசு.
ஜல்லி விலை, எம்சாண்ட் விலை உயர்வு. கிரஷர் உரிமையாளர்களை மிரட்டி ஒரு கிரஷருக்கு 30 லட்ச ரூபாய் லஞ்சம் கேட்கிறார்கள்.

தமிழகத்தில் 3000 ஜல்லி கிரஷர் இருக்கிறது. ஒரு கிரஷருக்கு 30 லட்சம் என்றால் 900 கோடி ரூபாய் வசூல் செய்கிறார்கள். முதல் கட்டமாக கோவை மாவட்டத்தில் நான்கரை கோடி ரூபாய் கொடுத்துவிட்டனர்,
சேலம் மாவட்டத்தில் பர்மிட் கொடுக்க வேண்டும் என்றால் பணத்தை கொடுத்தால் தான் கொடுப்போம் என்கிறார். மாவட்ட ஆட்சியருக்கு எச்சரிக்கை விடுக்கிறேன், ஏற்கனவே கட்டுமான தொழில் சரிந்துவிட்டது, இந்த சூழலில் லஞ்சம் கேட்டால் ஜல்லி, எம்சாண்ட் விலையை உயர்த்துவார்கள் அதனால் மக்கள் பாதிப்படைவார்கள். அதனால் மாவட்ட ஆட்சியர்கள் முறையாக நடந்துகொள்ள வேண்டும். பர்மிட் கேட்பவர்களுக்கு கொடுங்கள்.

திமுக அரசுக்கும் எச்சரிக்கை விடுக்கிறேன், அடுத்து அதிமுக ஆட்சி அமைவது 100% உறுதி. அப்போது சம்பந்தபட்ட அதிகாரிகள் பதில் சொல்லியே ஆக வேண்டும். சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்.
மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணத்தில் சேலம் மாவட்டம் அதிமுக கோட்டை என்பதை நிரூபிக்கும் வகையில் மக்கள் வெள்ளம் குழுமி இருக்கிறது. இதுவரை 181 தொகுதியில் பயணம் முடித்துவிட்டேன். சேலத்தில் முதல் தொகுதி இது.

இதற்குக் காரணமான அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
2026 தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வையுங்கள். ஸ்டாலின் மாடல் அரசு ஃபெயிலியர் மாடல் அரசு, பைபை ஸ்டாலின்...'' என்று முடித்தார்.
இன்றைய கூட்டத்தில் திமுக., காங்கிரஸ், விசிக உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளில் இருந்து 2 ஆயிரம் பேர் பொதுச்செயலாளர் முன்னிலையில் அதிமுக மேடையில் இணைந்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+