சாதாரண கே.பழனிசாமி.. எடப்பாடி பழனிசாமி ஆனது எப்படி? சொந்த ஊர் பாசம் கொடுத்த மாஸ் அடையாளம்!
சேலம்: தமிழக அரசியலில் இப்போது 'எடப்பாடி' என்பது வெறுமன ஊர்ப் பெயராக.. ஊரின் அடையாளமாக மட்டுமல்லாமல், ஒரு அதிகார மையத்தின் பெயராகவே மாறிவிட்டது. எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் முதலமைச்சராக உயர்ந்த பிறகு, அந்த ஊரின் பெயர் மாநிலம் முழுக்க பிரபலம் அடைந்தது. அதிமுகவில் சாதாரண கே பழனிசாமியாக இருந்த ஈபிஎஸ், எடப்பாடி பழனிசாமியாக மாறியது எப்படி என்பது குறித்துப் பார்க்கலாம்!
தமிழக அரசியலின் விஐபி தொகுதிகள் என வரிசைப்படுத்தினால் அதில் இப்போது சந்தேகமே இல்லாமல் இருப்பது எடப்பாடி தொகுதி தான். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அந்த தொகுதியின் முகமாகவே இருக்கிறார். அதிமுக பொதுச் செயலாளராகவும் எதிர்க்கட்சி தலைவராகவும் உள்ள எடப்பாடி பழனிசாமி என்டிஏ கூட்டணிக்காக மாநிலம் தழுவிய அளவில் பிரச்சாரம் செய்து வருகிறார்.

எடப்பாடி பழனிசாமி
அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியின் பெயருக்கு முன்னால் இருக்கும் 'எடப்பாடி' என்பது அவரது குடும்பப் பெயர் இல்லை.. அது அவரது ஊரின் பெயர். இது பெரும்பாலானோருக்குத் தெரிந்து இருக்கும். ஆனால், அவர் ஏன் இந்த பெயரைப் பெற்றார்.. இது அவருக்கு எப்படி உதவியது என்பது குறித்து நாம் பார்க்கலாம்!
சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே உள்ள சிலுவம்பாளையம் கிராமத்தில் பிறந்தவர் ஈபிஎஸ். தமிழக அரசியலில் பல தலைவர்கள் தங்கள் பெயருக்கு முன்னால் தாங்கள் பிறந்த ஊரின் பெயரைச் சேர்த்துக் கொண்டு இருக்கிறார்கள். திருச்சி சிவா உள்ளிட்டோரை உதாரணமாகச் சொல்லலாம்.
ஈபிஎஸ்
ஈபிஎஸ்ஸை பொறுத்தவரை அவர் 1980களில் அரசியலில் நுழைந்தார். அப்போது 1989ம் ஆண்டில் அவருக்கு முதல்முறையாக சீட் தரப்பட்டது. அப்போது அதிமுக ஜெ அணி, ஜானகி அணி என இரண்டாகப் பிரிந்து இருந்த சூழலில், ஜெயலலிதா அணியில் சேவல் சின்னத்தில் எடப்பாடி போட்டியிட்டார். தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய அவர், சட்டசபை உறுப்பினராக முதலில் வெற்றி பெற்றது எடப்பாடி தொகுதியில் தான். தன்னை முதல்முறையாகச் சட்டசபைக்குத் தேர்வு செய்த தொகுதி மற்றும் சொந்த ஊர் என்பதாலேயே அவர் தனது பெயருடன் எடப்பாடி என்பதைச் சேர்த்துக் கொண்டார்.
எடப்பாடியார்
பழனிசாமி என்பது மிகவும் பொதுவான பெயர் என்பதால், மற்றவர்களிடமிருந்து தன்னைத் தனித்துவமாகக் காட்டிக் கொள்ளவும் இந்த ஊர்ப் பெயர் அவருக்குப் பெரிதும் உதவியது. இன்று அவர் அதிமுகவின் பொதுச் செயலாளராக உள்ள நிலையில், 'எடப்பாடியார்' என்றே அவரது கட்சியினர் அழைக்கிறார்கள். அந்தளவுக்கு எடப்பாடி பெயர் அவரது அடையாளமாக மாறிவிட்டது.
இடையர்கள்
அது சரி, எடப்பாடி தொகுதிக்கு எப்படி அந்த பெயர் வந்தது தெரியுமா.. 'எடையார்' (ஆயர்கள் அல்லது இடையர்கள்) சமூகத்தினர் இந்தப் பகுதியில் அதிகம் வாழ்ந்ததாகக் கருதப்படுகிறது. அவர்கள் தங்கியிருந்த குடியிருப்பு பகுதி 'பாடி' என அழைக்கப்பட்டது. இதனால் 'எடையார் பாடி' என்ற ஊர்.. மெல்ல மாறி 'எடப்பாடி' ஆனதாகவும் சொல்லப்படுகிறது. இதற்கு உறுதியான ஆதாரங்கள் இல்லை என்ற போதிலும் இதையே தான் சொல்கிறார்கள்.
தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வரும் 23ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தொடர்ந்து மேற்கு வங்கம், கேரளா மாநிலங்கள் உடன் மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.












Click it and Unblock the Notifications