புற்றுநோய் பாதித்த 15 வயது சிறுவன்.. நரக வேதனை.. தந்தையே விஷ ஊசி போட்டு கொன்றார்?.. அதிர்ச்சி தகவல்!
சேலம்: புற்றுநோய் பாதித்த சிறுவனை அவனது தந்தையே விஷ ஊசி போட்டு கருணை கொலை செய்து விட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகே கொடைக்காரன் வளவு பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. லாரி டிரைவர். இவருடைய மகன் வண்ணத்தமிழ்(15.)
சிறுவனுக்கு கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு ஒரு விபத்தில் காலில் காயம் ஏற்பட்டது. இதனால் சிறுவன் சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

புற்றுநோய்
நாளடைவில் அவரை பரிசோதித்த மருத்துவர் சிறுவனுக்கு புற்றுநோய்(கேன்சர்) உள்ளதாக கூறியுள்ளார். டாக்டரின் இந்த வார்த்தை லாரி டிரைவர் பெரியசாமியை தூக்கி வாரிப் போட்டது. ''மகனுக்கு இப்படி ஆகி விட்டதே'' என்று அவர் சோகத்தில் இருந்து வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து மகனை கோவையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று ஒன்றரை வருடமாக சிகிச்சை அளித்து வந்துள்ளார்.

உடல்நிலை மோசமானது
ஆனாலும் சிறுவன் வண்ணத்தமிழின் உடல்நலம் முன்னேற்றம் அடையாமல் தொடர்ந்து மோசமான நிலையில் இருந்து வந்தது. இதனால் அவரை வீட்டுக்கே கொண்டுவந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. வீட்டுக்கு வந்த பிறகு சிறுவனின் உடல்நிலை மிகவும் மோசமானது. அதாவது சிறுவன் எழுந்து நடக்க கூட முடியாமல் படுத்த படுக்கையாகி விட்டதாக கூறப்படுகிறது.

கருணை கொலை
சிறுவனின் உடல் முழுவதும் புற்றுநோய் பரவி புண் ஏற்பட்டதாக தெரிகிறது. தனது கண்முன்னே மகன் படும் நரக வேதனையை கண்டு பெரியசாமி மனம் துடித்துள்ளார். இப்படி மகன் கொடூர வேதனையை அனுபவிப்பதை விட அவன் மரணமடைவது மேல் என்று பெரியசாமி முடிவெடுத்துள்ளார். இதனால் மகனை கருணை கொலை செய்ய முடிவெடுத்ததாக கூறப்படுகிறது.

விஷ ஊசி செலுத்தி
இது தொடர்பாக அவர் அவரது உறவினரும், தனியார் ஆய்வகத்தில் வேலைசெய்பவருமான பிரபு என்பவரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து பிரபுவை வீட்டுக்கு அழைத்து வந்த பெரியசாமி, அவர் மூலம் விஷ ஊசி செலுத்தி மகன் வண்ணத்தமிழை கொன்றதாக ஊர் முழுக்க தகவல் பரவியது.

போலீசார் விசாரணை
இது குறித்து போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சிறுவனின் தந்தை பெரியசாமி, விஷ ஊசி போட்டதாக கூறப்படும் பிரபு ஆகியோரிடம் போலீசார் விசாரித்து வருவதாகவும், முதல்கட்டமாகச் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் தகவல்கள் கூறுகின்றன.
புற்றுநோய் பாதித்த சிறுவனை தந்தையே கருணை கொலை செய்து விட்டதாக கூறப்படும் தகவல் கொடைக்காரன் வளவு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications