சேலத்தில் சூரஜ் இறப்பால் பரிதவிக்கும் மனைவி, குழந்தைகள்! மருத்துவமனை பக்கம் எட்டி கூட பார்க்காத தவெக
சேலம்: சேலத்தில் தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் மயங்கி விழுந்து இறந்த வடமாநில இளைஞரின் உடல் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பரிதவித்து வரும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்கக் கூட தவெகவினர் யாரும் வராதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் சீலநாயக்கன்பட்டியில் தவெக நிர்வாகிகள் கூட்டம் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்க 5000 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் விஜய் வருவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பே நிர்வாகிகள் அனுமதிக்கப்பட்டனர்.

ஆனால் இந்த கூட்டத்தில் 8 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். இந்த விஜய் பகல் 1 மணிக்கு வந்தார். விஜய் பேசிக் கொண்டிருந்தார். அவர் பேச பேச நிர்வாகிகள் கை தட்டி ஆரவாரம் செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில் நாற்காலிகள் எதுவும் போடப்படவில்லை. வெயிலும் கொளுத்தி எடுத்தது. ஏற்கெனவே 3 மணி நேரத்திற்கு மேல் ஏராளமானோர் காத்துக் கொண்டிருந்தனர்.
இந்த வெயிலால், விஜய் பேசிக் கொண்டிருந்த போது திடீரென சிலர் மயங்கி விழுந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த முகாம்களில் மருத்துவ சிகிச்சை அளித்ததும் அவர்கள் சுயநினைவை அடைந்தனர்.
ஆனால் சூரஜ் என்ற வடமாநில இளைஞரின் உடல் நிலை முதலுதவிக்கு பிறகும் மோசமான நிலையில் இருந்ததால் அவரை ஆம்புலன்ஸில் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் சூரஜ் இறந்துவிட்டார்.
சூரஜ், மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர். இவருக்கு வயது 37. இவரது மனைவி பிரியங்கா (32). இவர்களுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். கடந்த 20 ஆண்டுகளாக சேலத்தில் வெள்ளி பட்டறையில் வேலை செய்து வந்தார்.
இவர் ஒருவரே வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றி வந்த நிலையில் தற்போது அவர் இறந்ததை அறிந்து பதறி அடித்துக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடிய மனைவி பிரியங்கா, கணவரின் உடலை பார்த்து கதறி அழுதது காண்போரை கலங்கச் செய்தது.
சூரஜ் இறந்த செய்தி கேட்டு அவரது உறவினர்கள், நண்பர்கள் எல்லாம் மருத்துவமனைக்கு வந்துவிட்டனர். ஆனால் தவெக நிர்வாகிகள் ஒருவர் கூட மருத்துவமனைக்கு செல்லவில்லை. கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான நேரத்தில் கூட விஜய்யும் அவரது நிர்வாகிகளும் அந்த இடத்தை விட்டு வெளியேறிவிட்டனர்.
அந்த 41 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனை முடிந்து உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கும் வரை அதிமுக, திமுக, தேமுதிக, பாஜக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சியினர் மருத்துவமனையில் இருந்தனர். ஆனால் தவெகவை சேர்ந்த கடைநிலை நிர்வாகி கூட மருத்துவமனை பக்கம் எட்டி பார்க்கவில்லை. இது பெரும் விமர்சனங்களுக்குள்ளானது.












Click it and Unblock the Notifications