விஜய்யின் அடுத்த பொதுக்கூட்டம் எங்கே? பொங்கலுக்கு பிறகு பிரமாண்டம்.. மாவட்ட செயலாளர் சொன்ன தகவல்!
சேலம்: பொங்கல் முடிந்தவுடன் சேலத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு கூட்டம் மிக பிரமாண்டமாக நடைபெறும் என்று தவெக சேலம் மத்திய மாவட்ட செயலாளர் பார்த்திபன் தெரிவித்துள்ளார். கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு ஆஜராகி வரும் சூழலில், அடுத்தகட்ட பிரச்சாரத்திற்கும் விஜய் திட்டமிட்டு வருகிறாராம்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி தவெக பரப்புரையின் போது நிகழ்ந்த துயர சம்பவத்தைத் தொடர்ந்து விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்தன. இதற்கிடையே அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார்.

செங்கோட்டையனின் வருகை கட்சிக்கு மிகப்பெரிய பலத்தை சேர்த்திருப்பதாக கூறிய விஜய், கொங்கு மண்டலத்தில் தமிழக வெற்றிக் கழகத்தை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். அந்தவகையில் கடந்த டிசம்பர் 18 ஆம் தேதி ஈரோட்டில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் விஜய் பரப்புரை மேற்கொண்டார். அப்போது ஆளுங்கட்சியான திமுகவை தீயசக்தி என்று குறிப்பிட்டுப் பேசினார்.
அடுத்ததாக சேலத்தில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரோட்டுக்கு முன்பே சேலத்தில் விஜய் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டு, சேலம் மாவட்ட தவெக நிர்வாகிகள், மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தனர். ஆனால் கார்த்திகை தீபம்,பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம் காரணமாக போதிய பாதுகாப்பு அளிக்க முடியாது என கூறி விஜய் பரப்புரைக் கூட்டத்திற்கு சேலம் மாநகர போலீசார் அனுமதி மறுத்தனர். இதையடுத்தே ஈரோட்டில் தவெக கூட்டம் நடத்தப்பட்டது.
அடுத்த கட்டமாக கொங்கு மண்டலத்தின் மற்றொரு மாவட்டமான சேலத்தில் பொதுக்கூட்டம் நடத்த தவெக தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளதாக வெளியாகியுள்ளது. ஓமலூர், இரும்பாலை ரோடு, சேலம் சீலநாயக்கன்பட்டி புறவழிச்சாலை ஆகிய 3 இடங்களில் ஏதாவது ஒன்றில் விஜய் மக்கள் சந்திப்பு கூட்டம் நடத்துவதற்கான பணிகளை தவெக நிர்வாகிகள் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
நடந்து வருவதாகவும், அதற்கான தேதி விரைவில் கட்சி தலைமையின் மூலம் அறிவிக்கப்பட உள்ளதாகவும் தவெக நிர்வாகிகள் கூறினர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சேலம் தைலானூர் பகுதியில் சமத்துவ பொங்கல் விழா இன்று நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்ட பானைகளில் பெண்கள் பொங்கலிட்டு கொண்டாடினர். இந்த விழாவை தவெக சேலம் மத்திய மாவட்ட செயலாளர் பார்த்திபன் கலந்து கொண்டு சிறப்பித்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய பார்த்திபன், "கடமைக்கு பொங்கல் வைக்கும் நிகழ்வை எங்களது கட்சி நடத்தாது. உண்மையான சமத்துவ பொங்கல் நடத்துவது நாங்கள் தான். அனைத்து மக்களும் மொழிகளை கடந்து, மதத்தை கடந்து இந்த பொங்கல் விழாவில் பங்கேற்று உள்ளனர்" என்றார்.
மேலும் பேசிய அவர், "தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்களை அறிவிக்கும் உரிமை கட்சி தலைவர் விஜய்க்கு மட்டுமே உள்ளது. எனது தொகுதியில் யாரை அவர் அறிவிக்கிறாரோ அவர் தான் வேட்பாளர். தலைவர் விஜய்யின் முகத்திற்கு மட்டுமே தமிழ்நாடு மக்கள் வாக்களிப்பார்கள்; வேறு யாருக்காகவும் வாக்களிக்க மாட்டார்கள். அவர் யாரை நிறுத்தி வேட்பாளர் என்று கூறுகிறாரோ, அவர்கள் கட்டாயம் வெற்றி பெறுவார்.
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வெற்றியை பெற்று தந்து, தலைவர் கையில் 11 சட்டமன்ற தொகுதியை ஒப்படைப்போம். விஜய்யின் அடுத்த மக்கள் சந்திப்பு கூட்டம் சேலத்தில் தான் நடைபெறும். பொங்கல் முடிந்தவுடன் கண்டிப்பாக பிரம்மாண்டமாக மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெறும். தமிழ்நாடே திரும்பி பார்க்கும் அளவிற்கு சேலத்தில் மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெறும்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications