விஏஓ டூ தாசில்தார்.. மதுரை, கோவை, ஈரோடு, சேலம் என அடுத்தடுத்து கைதான அரசு ஊழியர்கள்.. எப்படி?
சேலம்: கடந்த சில நாட்களில் மட்டும், மதுரை தெற்கு தாசில்தார், கோவையில் ஊராட்சி எழுத்தர், நாமக்கல் ஆசிரியர், ஈரோடு சார்பதிவாளர் என அடுத்தடுத்து கைது செய்யப்பட்டுள்ளனர். சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அருகே உள்ள தும்பல்பட்டி பகுதியை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் விவசாய நிலம் அளவீடு செய்ய ரூ.13 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. அவரை கையும் களவுமாக பிடித்து சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். அடுத்தடுத்து அரசு ஊழியர்கள் கைதாகி வருகிறார்கள்.
லஞ்ச ஒழிப்பு துறை கடந்த சில நாட்களில் மட்டும் பல்வேறு அரசு ஊழியர்களை அடுத்தடுத்து லஞ்சம் வாங்கியதாக கைது செய்துள்ளது. அண்மையில் மதுரை தெற்கு தாசில்தார் கைது செய்யப்பட்டார். மதுரை மாவட்டம் சின்ன உடைப்பு கிராமத்தை சேர்ந்த ஞ்சித் என்பவர் கிரஷர் வைப்பதற்காக விண்ணப்பித்துள்ளார்.

தெற்கு தாசில்தார்
ஆனால் மதுரை தெற்கு தாசில்தார் ராஜபாண்டி ரஷர் வைக்க அனுமதி அளிக்க ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. அவர் 70 ஆயிரம் தருவதாக கூறி பேரம் பேசினாராம். ஆனால் இறுதியாக லஞ்சம் கொடுக்க விரும்பாமல் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். தாசில்தார் ராஜபாண்டியை, கலெக்டர் ஆபீஸி வளாகத்திலேயே வைத்து போலீசார் கைது செய்தனர்.
கோவை ஊராட்சி எழுத்தர்
இதேபோல் கோவையில் ஊராட்சி எழுத்தர் ஒருவர் கைதானார். கோவை எஸ்.எஸ்.குளம் ஒன்றியம் கொண்டையம்பாளையம் ஊராட்சியை சேர்ந்தவர் விக்ரம் ராஜ். இவரது மாமியார், மனைவி ஆகியோருக்கு சொந்தமான வீட்டுமனைகள் ஊராட்சியால் அங்கீகாரம் அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அதை வரன்முறைப்படுத்துவதற்கான விண்ணப்பத்தை விக்ரம்ராஜ் ஊராட்சி செயலாளர் முத்துசாமியிடம் வழங்கினார்.
12 ஆயிரம் லஞ்சம்
உடனே முத்துசாமி, சம்பந்தப்பட்ட நிலத்துக்கு அங்கீகாரம் வழங்குவது குறித்து எஸ்.எஸ்.குளம் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு பரிந்துரை செய்யவும், வரன்முறைப்படுத்தி உத்தரவு வழங்கவும் ரூ.12 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. அவரை கோவை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
நாமக்கல் தலைமை ஆசிரியர்
அதேபோல் நாமக்கல்லில் தலைமை ஆசிரியர் ஒருவர் கைதானார். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் பள்ளி மாற்றுச்சான்றிதழ் வழங்குவதற்காக ஜோதிடரிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய புகாரில், அரசு பள்ளி தலைமை ஆசிரியரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக பிடித்து கைது செய்திருக்கிறார்கள்.
ஈரோடு சார் பதிவாளர்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள அரியப்பம்பாளையத்தை சேர்ந்த நல்லம்மாள் என்பவர் 1,916 சதுர அடி காலி இடத்தை தனது பேரன் அருணுக்கு பத்திரப்பதிவு செய்ய முடிவு செய்தார். ஆனால் பத்திரப்பதிவு செய்ய ரூ.15 ஆயிரம் லஞ்சமாக கொடுக்க வேண்டும் என சார் பதிவாளர் கேட்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் சார் பதிவாளரும், தற்காலிக ஊழியரும் கையும் களவுமாக சிக்கினார். வெறும் 3 நாளில் இந்த சம்பவங்கள் நடந்திருக்கின்றன
சேலம் பனமரத்துப்பட்டி
அதே பாணியில் சேலம் பனமரத்துப்பட்டியில் லஞ்சம் வாங்கியதாக கிராம நிர்வாக அலுவலர் இப்போது கைதாகி உள்ளார். சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அருகே உள்ள தும்பல்பட்டி பகுதியை சேர்ந்தவர் மாது என்ற விவசாயி, தனக்கு சொந்தமான விவசாய நிலத்தை அளவீடு செய்து தருமாறு தும்பல்பட்டி கிராம நிர்வாக அலுவலர் சேகர் (வயது 54) என்பவரை கேட்டாராம்.
விவசாய நிலம் அளவீடு
விவசாய நிலத்தை அளவீடு செய்து கொடுக்க விஏஓ சேகர் ரூ.13 ஆயிரம் லஞ்சம் கேட்டு உள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத மாது, இது குறித்து சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து விவசாயி மாதுவிடம் ரசாயன பவுடர் தடவிய ரூ.13 ஆயிரத்தை போலீசார் கொடுத்து கிராம நிர்வாக அலுவலரிடம் கொடுக்குமாறு கூறி அனுப்பினர். இதையடுத்து அவர் நேற்று மதியம் தும்பல்பட்டி கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்றுள்ளார்கள்.
கிராம நிர்வாக அலுவலர் கைது
பின்னர் கிராம நிர்வாக அலுவலர் சேகரை சந்தித்து லஞ்சமாக ரூ.13 ஆயிரத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார், கிராம நிர்வாக அலுவலர் சேகரை, கையும், களவுமாக பிடித்து கைது செய்தார்கள். இந்த சம்பவத்தால் தும்பல்பட்டி கிராம நிர்வாக அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications