திட்டமிட்ட நாடகம்.. மூதாட்டிக்கு கூலிங் கிளாஸ் கொடுத்த விஜய்! முந்தைய நாள் இரவிலேயே வந்த தாசில்தார்
சேலம்: சேலத்தில் மேட்டூர் அணை திறந்த பின், மூதாட்டி ஒருவருக்கு முதல்வர் விஜய் கூலிங் கிளாஸ் அணிவித்த சம்பவம் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட நாடகம் என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. முந்தைய நாள் இரவிலேயே தாசில்தார் வந்து மூதாட்டியை பார்த்து சென்றதை அவர் ஒப்புக் கொண்டுள்ளார். அதேபோல் வேட்டி, சேலை வழங்க ஏதுவாக பக்கத்தில் இருந்த விவசாயிகளும் முன்பே அழைத்து வரப்பட்டிருக்கின்றனர்.
டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக ஜூன் 12ஆம் தேதி திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணை, சுமார் 3 மாதங்களுக்கு பின் செப்டம்பர் 1ஆம் தேதி திறக்கப்பட்டது. இதற்காக சேலம் மாவட்டம் வந்த விஜய், மேட்டூர் அணையை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செய்தார். இதன்பின் மேட்டூர் அணை அருகில் இருந்த சின்னக்காவூர் கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி குடும்பத்தினரை சந்தித்தார்.

முதல்வர் விஜய்க்கு அந்த குடும்பத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது மூதாட்டி செல்லம், விஜய்யின் கையை பிடித்து கொண்டு கண்ணத்தை வருடி வாழ்த்தினார். தொடர்ந்து மூதாட்டிக்கு தாம் அணிந்திருந்த ரூ.45 ஆயிரம் மதிப்பிலான கூலிங் கிளாஸை கழற்றி அணிவித்தார். அதேபோல் அங்கிருந்தவர்களுக்கு வேட்டி, சேலையை வழங்கினார். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் டிரெண்டாகியது.
எம்ஜிஆர் பாணியில் விஜய்யும் மூதாட்டியை அரவணைத்து கூலிங் கிளாஸ் கொடுத்ததாக தவெகவினர் பேசத் தொடங்கினர். அதேபோல் ராமசாமி விவசாய தோட்டத்திற்கு முதல்வர் விஜய் சர்ப்ரைஸ் விசிட் அடித்ததாக சொல்லப்பட்டது. இன்னொரு பக்கம் விஜய் கொடுத்த கூலிங் கிளாஸ் அணிந்து அந்த மூதாட்டி ஊடகங்களுக்கு ஏராளமான நேர்காணலை அளித்து வருகிறார்.
ஒரு பேட்டியில் மூதாட்டி பேசுகையில், விஜய்யிடம் மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 பணத்தை வாங்கிதான் சாப்பிட்டு கொண்டிருக்கிறேன் என்று சொன்னேன். அவரும் சரி, சரி என்று தலையாட்டினார். எந்த பதிலும் சொல்லவில்லை. அப்போது 4 கிலோ அரிசி அட்டை தொலைந்துவிட்டது. அதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என்றேன்.. அதற்கு விஜய், சரிம்மா என்றார்.
இந்த பேட்டியில் முந்தைய நாள் இரவிலேயே தாசில்தார் வந்து மூதாட்டியை சந்தித்ததையும் ஒப்புக் கொண்டுள்ளார். இதன் மூலமாக முதல்வர் விஜய் மூதாட்டிக்கு கூலிங் கிளாஸ் கொடுத்தது, விவசாய தோட்டத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்தது எல்லாம் ஏற்கனவே அரசு அதிகாரிகளால் திட்டமிடப்பட்ட விஷயம் என்பது தெரிய வந்துள்ளது.
அதேபோல் வேட்டி, சேலை ஆகியவற்றை அரசு அதிகாரிகள் முன்பே வாங்கி வைத்திருக்கின்றனர். விஜய் வேட்டி, சேலை வழங்குவதற்கு ஏதுவாக அருகில் இருந்த பலருக்கும் முன்கூட்டிய அரசு அதிகாரிகள் தரப்பு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இதனால் விஜய்யின் இந்த சர்ப்ரைஸ் விசிட் திட்டமிடப்பட்ட நாடகம் என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.


Click it and Unblock the Notifications
