திருப்பரங்குன்றம்: இமெயில், ஸ்கிரீன் ஷாட் ஆதாரங்களுடன் மதுரை ஆட்சியர் கூடுதல் பிரமாணப் பத்திரம் தாக்கல்
டெல்லி: திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் 162 பக்கங்கள் கொண்ட கூடுதல் பிரமாணப் பத்திரத்தை மதுரை ஆட்சியர் தாக்கல் செய்துள்ளார். இதில், கூடுதல் தகவல்கள் சேர்க்கப்பட்டுள்ளது என்றும், நவம்பர் 20 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்த முடியாததற்கு மனப்பூர்வமாக மீண்டும் மன்னிப்பு கோருவதாக மதுரை மாவட்ட ஆட்சியர் தனது கூடுதல் பிரமாண பத்திரத்தில் கூறியிருப்பதாக கூறப்படுகிறது.
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்க கோரி, ராம ரவிக்குமார் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் கார்த்திகை திருநாளன்று மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற உத்தரவு பிறப்பித்தது.

நீதிமன்றம் அவமதிப்பு வழக்கு
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த நீதிமன்றம், கடந்த நவம்பர் 20 ஆம் தேதி மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. மேலும் தேவைப்பட்டால் துணை ராணுவப் படையினரை அழைத்து கொள்ளலாம் என மதுரை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டது.
ஆனால், கார்த்திகை தீபத் திருநாளான நவம்பர் 24 ஆம் தேதி, மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றப்படாமல், வழக்கமாக தீபம் ஏற்றப்படும் உச்சிப்பிள்ளையார் கோயில் தீப மண்டபத்திலேயே தீபம் ஏற்றப்பட்டது. இதற்காக திருப்பரங்குன்றம் பகுதி ரெட் சோனாக அறிவிக்கப்பட்டு 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டனர். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை வேண்டுமென்றே நிறைவேற்றாமல் அவமதித்ததாக கூறி, ராம ரவிக்குமார், கார்த்திகேயன் உள்ளிட்டோர் மதுரை மாவட்ட ஆட்சியர், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளைத் தொடர்ந்தனர்.
தீபம் ஏற்றப்பட்டது
இந்த வழக்குகள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் விப்புல் எம். பஞ்சோலி ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், திருப்பரங்குன்றம் மலையை சிஆர்பிஎஃப் காவல் படையின் பாதுகாப்போடு, ஓய்வு பெற்ற நீதிபதிகள் பார்த்திபன், வைத்தியநாதன் ஆகியோரை கோயில் நிர்வாக அதிகாரிகளாக நியமித்து மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்றம் உத்தரவையடுத்து கடந்த 28 ஆம் தேதி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றப்பட்டது. அதோடு, தலைமைச் செயலாளர், டிஜிபி, மதுரை ஆட்சியர், மதுரை காவல் ஆணையர், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் உள்ளிட்டோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. ஏற்கனவே கடந்த 24 ஆம் தேதி ஏன் தீபம் ஏற்றவில்லை என்பதை விளக்கி 17 பக்கங்கள் கொண்ட அறிக்கையை மதுரை மாவட்ட ஆட்சியர் தாக்கல் செய்திருந்தார்.
கூடுதல் பிரமாணப் பத்திரம் தாக்கல்
இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் கூடுதல் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்துள்ளார். 162 பக்கங்கள் கொண்ட அந்த பிரமாண பத்திரத்தில், எத்தனை போலீசார் பாதுகாப்புக்காக களமிறக்கப்பட்டு இருந்தார்கள். எவ்வளவு மிக முக்கியமான மீட்டிங்குகள் நடத்தப்பட்டது. தகவல் பரிமாற்றம் என்ன எல்லாம் நடந்தது போன்ற பல்வேறு விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
கூடுதலாக புகைப்பட ஆதாரங்களை சேர்த்து இருப்பதாகவும், அறங்காவலர்கள் குழுவினர் நிறைவேற்றிய தீர்மானத்தின் நகல்கள் மற்றும் மின்னஞ்சல்கள் எப்போது, எந்த நேரங்களில் எல்லாம் அனுப்பப்பட்டது, ஸ்கிரீன் ஷாட்கள் உள்ளிட்டவற்றையும் கூடுதலாக சேர்த்து இந்த பிரமாணப்பத்திரத்தில் மதுரை ஆட்சியர் தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
முதலில் தாக்க செய்த விளக்கத்திலும் மதுரை ஆட்சியர் மன்னிப்பு கோரியிருந்த நிலையில் தற்போது தாக்கல் செய்த கூடுதல் பிரமாணப்பத்திரத்திலும் மன்னிப்பு கோரியுள்ளதாக கூறப்படுகிறது. நவம்பர் 20 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்த முடியாததற்கு மனப்பூர்வமாக மீண்டும் மன்னிப்பு கோருவதாக மதுரை மாவட்ட ஆட்சியர் தனது கூடுதல் பிரமாண பத்திரத்தில் கூறியிருப்பதாக கூறப்படுகிறது.




Click it and Unblock the Notifications
