நாளை தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராக வாக்களிப்போம்.. திருமாவளவன் பேச்சு!
சென்னை: தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராக மக்களவையில் நாளை வாக்களிக்க உள்ளோம் என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற கட்சி என்கிற முறையில் விசிகவை சேர்ந்த 2 நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர்த்து வாக்களிக்க உள்ளோம் என்றும், அந்த மசோதாவை தோற்கடிக்க வேண்டும் என்ற இந்தியா கூட்டணியின் முயற்சிக்கு நாங்கள் துணையாக இருப்போம் என்றும் திருமாவளவன் கூறியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது திருமாவளவன் கூறியதாவது:-

இந்திய அரசியல் வரலாற்றில் இந்த நாள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்து இருக்கிறது. இந்திய தேசிய காங்கிரசின் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்களும், இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களும், தென்னிந்தியாவை சேர்ந்த 3 மாநில முதல்வர்களும் தமிழ்நாட்டிற்கு வருகை தந்து மு.க ஸ்டாலினை சந்தித்து உரையாடிய நிகழ்வு என்றென்றும் வரலாற்றில் பேசப்படும் நிகழ்வாக அமைந்து இருக்கிறது.
பாஜக தொகுதி மறுவரையறை என்ற பெயரில் கொண்டு வர இருக்கிற நாடாளுமன்ற தொகுதி மறுவரையறைக்கான சட்ட மசோதாவை ஆதரிப்பது அவர்களின் இந்துத்துவா செயல்திட்டத்திற்கு வலு சேர்ப்பதாக அமைந்துவிடும் என்ற கவலையை காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியை சேர்ந்த தலைவர்கள் வெளியிட்டு இருக்கிறார்கள். அந்த கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற கட்சி என்கிற முறையில் விசிகவை சேர்ந்த 2 நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர்த்து வாக்களிக்க உள்ளோம். அந்த மசோதாவை தோற்கடிக்க வேண்டும் என்ற இந்தியா கூட்டணியின் முயற்சிக்கு நாங்கள் துணையாக இருப்போம். என்று கூறினார்.


Click it and Unblock the Notifications
