Vijay Salem: சேலம் விஜய் கூட்டத்திற்கு 51 கண்டிஷன்.. பொதுமக்களுக்கு அனுமதி இல்லை! 5,000 நிர்வாகிகளுக்கு மட்டுமே
சேலம்: சேலத்தில் விஜய் பங்கேற்கும் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் வரும் 13 ஆம் தேதி நடைபெற உள்ளதாகவும் இந்த கூட்டத்தில் 5 ஆயிரம் நிர்வாகிகள் மட்டுமே பங்கேற்க அனுமதி உண்டு. பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீஸ் தரப்பில் 51 நிபந்தனைகளும் விதிக்கப்பட்டு இருப்பதாக தவெக சேலம் மாவட்ட செயலாளர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மக்கள் சந்திப்பு கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. இதற்காக சேலத்தில் பொதுக்கூட்டம் நடத்த தவெக தலைவர் விஜய் திட்டமிட்டார். சேலம் சீலநாயக்கன்பட்டி புறவழிச்சாலையில் விஜய் மக்கள் சந்திப்பு கூட்டம் நடத்துவதற்கான பணிகளை தவெக நிர்வாகிகள் மேற்கொண்டு வந்தனர்.

சேலம் மக்கள் சந்திப்பு
25 ஏக்கர் பரப்பளவில் இதற்கான பிரமாண்ட ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைகளை பூர்த்தி செய்யவில்லை எனக்கூறி சேலத்தில் விஜய் கூட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். எனினும், திட்டமிட்டபடி வரும் 13 ஆம் தேதி கூட்டத்தை நடத்துவதில் தவெக உறுதியாக இருந்தது.
இதையடுத்து, 5 ஆயிரம் பேர் மட்டுமே கலந்து கொள்வார்கள் என்று கூறி மீண்டும் அனுமதி கோரப்பட்டது. சேலம் மாவட்ட தவெக செயலாளர் பார்த்திபன், போலீசாரை சந்தித்து அனுமதி கேட்டு கடிதம் அளித்தார். இந்நிலையில் சேலத்தில் தவெக தலைவர் விஜய்யின் பரப்புரை கூட்டத்திற்கு பல்வேறு நிபந்தனையுடன் காவல்துறை அனுமதி அளித்துள்ளது.
சேலம் மாவட்ட செயலாளர் பேட்டி
இதனால், வரும் 13 ஆம் தேதி சேலத்தில் விஜய் பங்கேற்கும் கூட்டம் நடைபெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளதால் தவெகவினர் உற்சாகம் அடைந்துள்ளனர். இந்த நிலையில், விஜய் கூட்டம் மக்கள் சந்திப்பாக நடைபெறவில்லை எனவும் நிர்வாகிகள் சந்திப்பாக மட்டுமெ நடைபெறுவதாகவும் சேலம் மாவட்ட தவெக செயலாளர் பார்த்திபன் கூறியுள்ளார். இது தொடர்பாக பார்த்திபன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பொதுமக்களுக்கு அனுமதி இல்லை
சேலம் மாவட்டத்தில் தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெறுகிறது. மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணிக்குள் கூட்டம் நடைபெற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 5 ஆயிரம் நிர்வாகிகள் மட்டுமே கலந்து கொள்வார்கள். மக்கள் சந்திப்பு கூட்டத்திற்கு போதிய கால அவகாசம் இல்லாத்தால், கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது.
5 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களுக்கு அனுமதியில்லை. பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது. பொதுமக்கள் அனைவரும் வீடுகளில் தொலைக்காட்சிகளில் இருந்தபடி பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். விஜய் வரும் போது நேரில் பார்க்கலாம் என்று தொந்தரவு செய்ய வேண்டாம்.
51 நிபந்தனைகள்
சிறப்பாக நடைபெற்றால்தான் அடுத்து மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெறும். 2 இடங்கள் பார்த்து வைத்துள்ளோம். அதற்கான அனுமதியை பெற்று மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெறும். 13 ஆம் தேதி நடைபெறுவது நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் தான்.
51 நிபந்தனைகள் போலீசார் விதித்துள்ளனர். அனைத்துமே ஏற்றுக் கொள்ளகூடிய வகையில் உள்ளது. கேவிபி கார்டனில் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெறுகிறது. காலம் இல்லாததால் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டமாக நடைபெறுகிறது." இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications