தமிழகத்திற்கு ஓடி வரும் காவிரி! ஒகேனக்கல்லில் சீறி பாயும் நீர்! மேட்டூர் அணையின் நீர் மட்டம் உயர்வு!
சேலம்: கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையால் அங்குள்ள கபிணி, கேஆர்எஸ் உள்ளிட்ட அணைகள் வேகமாக நிரம்பி வருவதால் தமிழகத்திற்கு வரும் காவிரி நீரின் வரத்து உயர்ந்துள்ளது. இந்த நீர் வரத்தால் ஒகேனக்கல்லுக்கும் மேட்டூர் அணைக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் மக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கர்நாடகாவில் குடகு பகுதியில் உற்பத்தியாகும் காவிரி ஆறு அங்கிருந்து பிலிகுண்டுலு, ஒகேனக்கல் வழியாக தமிழகத்தில் நுழைந்து மேட்டூர் அணைக்கு வருகிறது. இதைத் தொடர்ந்து கரூர், திருச்சி வழியாக நீண்ட பயணம் மேற்கொண்டு டெல்டா பாசன பகுதிகளுக்கு செல்கிறது.

பிறகு அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்துவிட்டு நேராக வங்கக் கடலில் போய் கலக்கிறது. ஆனால் தமிழ்நாடு- கர்நாடகா இடையே காவிரி பிரச்சினை நீடித்து வருகிறது. இதற்கு கர்நாடகா காலம் காலமாக தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிடாமல் வஞ்சித்து வருகிறது.
ஒவ்வொரு முறையும் காவிரி நீரை கர்நாடகாவிலிருந்து தமிழகம் போராடியே பெற்று வருகிறது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவைக் கூட கர்நாடகா அரசு மதிப்பதே இல்லை. அங்கு எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் காவிரி நீரை பெறுவது என்பது குதிரைக் கொம்பாகவே இருக்கிறது. ஆனாலும் தமிழக அரசும் விடாமல் போராடி, கர்நாடகாவிடம் இருந்து அள்ளி இல்லாட்டியும் கிள்ளியாவது பெற்று விடும்.
உச்சநீதிமன்ற உத்தரவுபடி 177.25 டிஎம்சி தண்ணீர் திறந்துவிடவில்லை. கடந்த ஆண்டு பாதி அளவு நீரைத்தான் கர்நாடகா கொடுத்தது. இதனால் கடந்த ஆண்டு குறுவை சாகுபடியும் பாதிக்கப்பட்டது. அது போல் இந்த ஆண்டும் கர்நாடகா தண்ணீரை திறந்துவிடவே இல்லை. தங்களுக்கே குடிநீர் பற்றாக்குறை என கர்நாடகா தொடர்ந்து கூறியது.
இதனால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து சரிவை சந்தித்தது. இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்காக ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படவில்லை. விவசாயிகள் நலன் கருதி குறுவை தொகுப்புத் திட்டம் அமல்படுத்தப்பட்டது. கடந்த மாதம் இறுதியில் நடந்த காவிரி மேலாண்மை கூட்டத்தில் ஜூன், ஜூலை மாதத்திற்கான நிலுவை தண்ணீரை திறக்க தமிழகம் வலியுறுத்தியது. ஆனால் கர்நாடகாவோ மீண்டும் தண்ணீர் பஞ்சம் என்ற பஞ்ச பாட்டையே பாடியது.
இதனால் காவிர் ஆணையக் கூட்டத்தில் எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. அதே சமயம் கடந்த ஒரு மாதத்திற்கு மேல் கர்நாடகாவில் உள்ள காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் கேஆர்எஸ் எனப்படும் கிருஷ்ணராஜ சாகர் அணை, கபிணி உள்ளிட்ட அணைகளுக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்துள்ளது.
அந்த அணைகள் நிரம்பும் நிலையில் உள்ளன. கேஆர்எஸ் அணையின் நீர் மட்டம் 100 அடியை தாண்டியுள்ளது. கபிணியில் வினாடிக்கு 5039 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையின் மொத்த கொள்ளளவு 19.52 டிஎம்சியாக இருக்கும் நிலையில் தற்போது 17.98 டிஎம்சி தண்ணீர் நிரம்பியுள்ளது.
இதனால் கேஆர்எஸ் அணையில் இருந்து 546 கனஅடியும் கபிணியில் இருந்து 3250 கனஅடியும் திறக்கப்படுகிறது. கர்நாடகாவில் காவிரி நீரை திறந்துவிடுவதாாலும் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக தமிழகத்திற்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. தமிழக எல்லையில் உள்ள ஒகேனக்கல்லில் நேற்றுமுன் தினம் 3000 கனஅடியாக இருந்த நிலையிலஸ் இன்று 5000 கனஅடியாக நீர் வரத்து உள்ளது.
இதனால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் 40.22 அடியாகவும் நீர் இருப்பு 12.20 டிஎம்சியாகவும் உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்கு மட்டும் வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் வரத்து அதிகரிக்கும் என்பதால் அணையின் நீர் மட்டம் மேலும் உயரும் என தெரிகிறது. கர்நாடகாவில் நல்ல மழை பெய்து அணைகள் நிரம்பி வருகிறது.
தற்போது கர்நாடகா உபரி நீரைத்தான் திறந்துவிடுகிறது. எனவே தமிழகத்திற்கு கூடுதலாக 5000 கனஅடிக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications