சேலம் அருகே காதல் கல்யாணம்.. 15 நாட்களில் கழட்டிவிட்ட மனைவி.. பதிலுக்கு கணவன் பார்த்த பெரிய வேலை
சேலம்: கல்யாணமான 15 நாட்களில் காதல் திருமணம் கசந்த நிலையில், காதல் கணவரை விட்டு மனைவி பிரிந்து சென்றுவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த கணவன், மனைவியின் அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 25 வயது இளைஞர், அயோத்தியாப்பட்டணத்தில் உள்ள பேக்கரி கடையில் வேலை செய்கிறார். அதே பேக்கரியில் காரிப்பட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 23 வயது இளம்பெண்ணும் வேலை செய்து வந்தார்.

பேக்கரியில் வேலை செய்த இவர்கள் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதையடுத்து கடந்த மாதம் 17-ந் தேதி அந்த காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டு ஏற்காடு போலீசில் தஞ்சம் அடைந்து தங்களை சேர்த்து வைக்குமாறு கோரினார்கள்.
இதனிடையே அந்த பெண்ணின் தந்தை தனது மகளை காணவில்லை என்று காரிப்பட்டி போலீசில் புகார் அளித்தார். இதனால் ஏற்காடு போலீசார் அந்த பெண்ணின் பெற்றோரை அழைத்து சமரசம் பேச முயற்சித்தனர். ஆனால் பெண்ணின் பெற்றோர், மகள் காதல் திருமணம் செய்ததை அறிந்து வரமறுத்தனர். இதனால் அந்த பெண்ணை காதல் கணவருடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.
இதனிடையே ஆசை 60 நாள், மோகம் 30 நாள் என்று திருமணத்தை கூறுவார்கள்.. ஆனால் இளம் காதல் தம்பதியின் திருமண ஆசை வெறும் 15 நாளிலேயே முடிவுக்கு வந்திருக்கிறது. அந்த காதல் தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த மார்ச் 3-ந் தேதி அந்த இளம்பெண் தனது பெற்றோர் வீட்டுக்கு கிளம்பி சென்றுவிட்டார்.
அதே நேரத்தில் காதல் கணவர் பிரிந்து சென்ற மனைவியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு, உன்னை வாழ விட மாட்டேன். என்னுடன் வீடியோ காலில் நிர்வாணமாக பேசியதை 'ஸ்கீரின் ஷாட்' எடுத்து வைத்திருக்கிறேன்.. சமூக வலைதளத்தில் பரப்பி விடுவேன் என மிரட்டினாராம்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண் தனது பெற்றோருடன் நேற்று முன்தினம் காரிப்பட்டி காவல் நிலையத்திற்கு சென்றார். அங்கு தான் பிரிந்து வந்து விட்ட நிலையில் காதல் கணவர் தனது அந்தரங்க படத்தை வெளியிடுவதாக மிரட்டல் விடுப்பதாக புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், இந்த பெண்ணின் காதல் கணவர் மீது, பெண்ணை ஆபாசமாக படம் எடுத்தல், ஆபாச படத்தை வெளியிடுதல் உள்பட 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள இளைஞரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications