மொத்தமாக மாறுதே சேலம்.. ஏர்போர்டிற்கு விடிவு காலம்.. மீண்டும் தொடங்கும் விமான சேவை! எப்போது தெரியுமா
சேலம்: பெரிதும் எதிர்பார்க்கப்படும் சேலம் விமான நிலையத்தில் எப்போது முதல் மீண்டும் விமானச் சேவை தொடங்கப்படும் என்பது குறித்து முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் இப்போது விமானச் சேவை மிக வேகமாக வளர்ந்து வருகிறது. விமான கட்டணம் குறைவது, மக்களின் வாங்கும் திறன் அதிகரிப்பது உள்ளிட்ட காரணங்களால் ஒவ்வொரு ஆண்டும் விமானத்தில் பயணிப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

முதற்கட்ட நகரங்களைத் தாண்டி மற்ற நகரங்களிலும் விமானத்தில் பயணிப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கிறது. இதனால் அங்கும் விமானச் சேவையை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்கிறது. அதன்படி இரண்டாம் கட்ட நகரங்களில் விமானச் சேவையை ஊக்குவிக்கக் கொண்டு வரப்பட்ட திட்டம் தான் உதான்.
சேலம் ஏர்போர்ட்: தமிழ்நாட்டைப் பொறுத்தவரைச் சேலம் விமான நிலையத்திற்கு இத்திட்டம் மிகப் பெரியளவில் உதவியது. உதான் திட்டத்தின் கீழ் சென்னை- சேலம் இடையே கடந்த 2018 மார்ச் மாதம் முதல் விமானம் இயக்கப்பட்டது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதன் காரணமாகவே பெரும்பாலான நேரத்தில் இந்த ரூட்டில் விமானம் 85% வரை நிரம்பியே இருந்தது. கொரோனா காலத்தில் சேலத்தில் விமான சேலை நிறுத்தப்பட்டது.
அத்துடன் உதான் திட்டமும் முடிவுக்கு வந்தது. இதனால் சேலத்தில் விமானச் சேவையே இல்லாத நிலை உருவானது. சேலத்தில் விமானங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், மீண்டும் விமானங்களை இயக்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தினர். சேலம் ஏர்போர்ட்டில் விமானச் சேவை தொடங்கவுள்ளதாகக் கடந்த சில வாரங்களுக்கு முன் தகவல் வெளியானது. இருப்பினும் துல்லியமாக எப்போது என்ற தகவல் அப்போது வெளியாகவில்லை.
எப்போது தொடங்கும்: இதற்கிடையே இந்த சேலம் விமான நிலையத்தில் எப்போது முதல் மீண்டும் விமானச் சேவை தொடங்கப்படும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி வரும் அக்டோபர் 16ஆம் தேதி முதல் சேலம் விமான நிலையத்தில் விமானச் சேவைகள் மீண்டும் தொடங்கப்படும். இதற்காகப் பெங்களூரு- சேலம்- கொச்சி மற்றும் கொச்சி- சேலம்- பெங்களூரு ஆகிய ரூட்களில் இப்போது விமானங்களுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. இது சேலம் ஏர்போர்ட்டில் விமானச் சேவை தொடங்க முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
வரும் அக்டோபரில் ஏர்போர்ட்டில் விமானச் சேவை மீண்டும் தொடங்கும் என்று கடந்த வாரம் சேலம் விமான நிலைய ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. உதான் 5.0 திட்டத்தின் கீழ் சேலத்தில் விமானச் சேவை தொடங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. கொச்சி ரூட் மட்டுமின்றி, பெங்களூரு- சேலம்- ஹைதராபாத் மற்றும் ஹைதராபாத்- சேலம்- பெங்களூரு ஆகிய ரூட்களிலும் விமானங்கள் இயக்கப்பட்ட உள்ளன. இது பொதுமக்களுக்குப் பெரியளவில் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எந்த ரூட்: இதில் ஹைதராபாத்- சேலம்- பெங்களூரு ரூட்டில் இண்டிகோ விமானங்களை இயக்கவுள்ளது. அதேபோல பெங்களூரு-சேலம்-கொச்சி ரூட்டில் அலையன்ஸ் ஏர் விமானங்களை இயக்கும். இந்த விமானங்கள் 72 இருக்கைகள் கொண்டவையாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இப்போது பெங்களூரு-சேலம்-கொச்சி ரூட்களுக்கான முன்பதிவை அலையன்ஸ் ஏர் தொடங்கியுள்ளது. மிக விரைவில் கொச்சி ரூட்டிலும் விமான சேவை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சேலம் விமான நிலைய மேனேஜர் ஜி.ரமேஷ் கூறுகையில், " ஒவ்வொரு வாரமும் வெள்ளி மற்றும் புதன்கிழமை தவிர.. வாரத்தில் ஐந்து நாட்கள் இந்த விமானம் இயக்கப்படும். பெங்களூரில் இருந்து 12.40 மணிக்கு இந்த விமானம் புறப்படும். மதியம் 1.40 மணிக்குச் சேலம் விமான நிலையத்திற்கு வரும். இங்கிருந்து மதியம் 2.05 மணிக்கு விமானம் புறப்பட்டு 3.15 மணிக்குக் கொச்சிக்குச் சென்றடையும்.
டைமிங்: அதேபோல கொச்சி விமான நிலையத்தில் இருந்து மாலை 3.40 மணிக்கு புறப்படும் விமானம் மாலை 4.50 மணிக்குச் சேலம் விமான நிலையத்திற்கு வரும். இங்கிருந்து மீண்டும் மாலை 5.15 மணிக்கு விமானம் புறப்பட்டு மாலை 6.15 மணிக்குப் பெங்களூரு சென்றடையும்" என்று அவர் கூறினார்.
சேலம் ஏர்போர்ட்டில் மீண்டும் விமானச் சேவையைத் தொடங்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வந்த நிலையில், அது ஒரு வழியாக நிஜமாகப் போகிறது. மேலும், சேலம் ரூட்டிலும் விமானச் சேவையைத் தொடங்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications