தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு.. சேலத்தை நடிகர் விஜய் தேர்வு செய்வது எதற்காக தெரியுமா?
சேலம்: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டை சேலத்தில் நடத்துவது தொடர்பாக அக்கட்சித் தலைவர் நடிகர் விஜய் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். மறைந்த தலைவர்களான ஜெயலலிதா, விஜயகாந்துக்கு சேலம் மாநாடு பெரும் வெற்றி கொடுத்ததால் சேலத்திலேயே முதல் மாநாட்டை நடத்தலாம் என்பதுதான் நடிகர் விஜய், கட்சி நிர்வாகிகளுக்கு தந்துள்ள ' சென்டிமெண்ட்' அட்வைஸ் என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள்.
தமிழ்நாட்டு அரசியலுக்கு புதிய வரவாக நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கி உள்ளார். பொதுவாக அரசியல் கட்சிகள் தொடங்குவதற்கு முன்னர் பிரம்மாண்ட மாநாடு நடத்தி கட்சி பெயர், கொடி, கொள்கைகள், நிர்வாகிகள் அறிவிக்கப்படுவது வழக்கம்.

நடிகர் விஜய் கட்சி: ஆனால் இந்த வழக்கத்தை உடைத்து 'லெட்டர்' பேடில் கட்சியை தொடங்கிவிட்டதாக நடிகர் விஜய் அறிவித்தார். தமிழக வெற்றி கழகம் என அறிவிக்கப்பட்டு இது விவாதப் பொருளானதால் தமிழக வெற்றிக் கழகம் என மாற்றி இருந்தார். மேலும் லோக்சபா தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் ஆதரவு இல்லை எனவும் நடிகர் விஜய் அறிவித்தார்.
2026 தேர்தல் பணிகள்: 2026 சட்டசபை தேர்தல்தான் இலக்கு என்பது நடிகர் விஜய்யின் திட்டம். தமிழ்நாட்டில் திமுக உள்ளிட்ட கட்சிகள் 2026 சட்டசபை தேர்தலுக்கான பணிகளைத் தொடங்கிவிட்ட நிலையில் நடிகர் விஜய்யும் தமது கட்சியின் முதல் மாநாட்டை நடத்துவதற்கு தயாராகி வருகிறார்.
சேலத்தில் ஆய்வு: பொதுவாக தமிழ்நாட்டில் மதுரை அல்லது திருச்சியில் அரசியல் கட்சிகள் மாநாடு நடத்துவது வழக்கம். நடிகர் விஜய் தமது கட்சியின் முதல் மாநாட்டை சேலத்தில் நடத்துவது தொடர்பாக ஆலோசித்து வருகிறார். சேலம் நாழிக்கல்பட்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இது தொடர்பான ஆய்வுகளை நடத்தி இருந்தார்.
சேலம் சென்டிமெண்ட்: இது தொடர்பாக த.வெ.க. நிர்வாகிகளிடம் நாம் பேசிய போது, சேலம் மாநாடு என்பது கட்சியினருக்கு நம்பிக்கை தரக் கூடியதாக இருக்க வேண்டும் என நடிகர் விஜய் நினைக்கிறார். 2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் பிரசாரத்தை ஜெயலலிதா சேலத்தில்தான் தொடங்கினார். அந்த தேர்தலில் 37 தொகுதிகளில் அதிமுக வென்றது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் சேலத்தில் மாநாடு நடத்திய பின்னர்தான் எதிர்க்கட்சித் தலைவரானார். திமுகவின் கின்னஸ் சாதனை படைத்த இளைஞரணி மாநாடும் சேலத்தில்தான் நடந்தது. இதனை எல்லாம் கவனத்தில் கொண்டுதான் நடிகர் விஜய் சேலத்தில் முதல் மாநாட்டை நடத்த திட்டமிடுகிறார் என்கின்றனர்.












Click it and Unblock the Notifications