40 ஆண்டுகளில் 13.5 கோடி பேர் பலி..உயிரை பறித்த காற்று மாசு! ஆய்வில் ஷாக் தகவல்..இந்தியாவுக்கு ஆபத்து
சிங்கப்பூர்: மனிதர்கள் உருவாக்கிய காற்று மாசு கடந்த 40 ஆண்டுகளில் சுமார் 13.5 கோடி பேரின் உயிரை பறித்திருக்கிறது என்று அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள் வெளிவந்திருக்கின்றன.
இந்த உலகில் மனிதர்களுடன் கோடிக்கணக்கான உயிர்கள் வாழ்ந்து வருகின்றன. ஆனால், சமீப காலமாக மனிதர்களின் நடவடிக்கைகள் இந்த உயிர்களில் சில இனங்களை கூண்டோடு அழித்துவிட்டது. இந்த அழிவு இப்பொது மனிதர்கள் பக்கமே மீண்டும் திரும்பியிருக்கிறது. உதாரணமாக நம்முடைய நடவடிக்கையால் ஏற்பட்ட காற்று மாசு கடந்த 40 ஆண்டுகளில் 13.5 பேரின் உயிரை எடுத்திருக்கிறது.

இது குறித்து சிங்கப்பூர் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் 1980 மற்றும் 2020 க்கு இடையில் மனிதனால் உருவாக்கப்பட்ட காற்று மாசு மேற்குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மனிதர்களை பலி கொண்டிருக்கிறது என்பது தெரிய வந்திருக்கிறது.
சிங்கப்பூரின் நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் சமீபத்தில் மேற்கொண்டிருந்த ஆய்வில் இந்த உண்மைகள் வெளிவந்திருக்கின்றன. மனிதர்கள் உருவாக்கும் காற்று மாசானது, எல் நினோ உள்ளிட்ட பாதிப்புகளால் தீவிரமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. தொழிற்சாலைகள், வாகனங்களிலிருந்து வெளிவரும் புகை, காட்டுத்தீ உள்ளிட்ட பாதிப்புகளால் PM 2.5 எனப்படும் சிறிய துகள்கள் உருவாகின்றன. இது ரத்த ஓட்டத்தில் கலந்து மரணத்தை ஏற்படுத்துகிறது.
மரணம் தவிர பக்கவாதம், இதயம், நுரையீரல் நோய் மற்றும் புற்றுநோய் உருவாகவும் இந்த காற்று மாசு காரணமாக இருக்கிறது. காற்று மாசு மக்களை சராசரி வாழ்நாட்களை கூட வாழ விடாமல் கொடூரமாக கொன்றுவிடுகிறது. கடந்த 40 ஆண்டுகளில் உயிரிழந்த 13.5 கோடி பேரில், 9.8 கோடி பேர் இந்தியா மற்றும் சீனாவில் மட்டும் உயிரிழந்திருக்கிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது.
பாகிஸ்தான், வங்கதேசம், இந்தோனேஷியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் காற்று மாசு உயிரிழப்புகள் 20 லட்சம் முதல் 50 லட்சம் வரை பதிவாகியுள்ளன. இது குறித்து நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் ஆசிய சுற்றுச்சூழல் பள்ளியின் இணை பேராசிரியர் ஸ்டீவ் யிம் கூறுகையில்
"காலநிலை நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் காற்று மாசுபாட்டை மோசமாக்கும் என்பதை எங்கள் ஆய்வுகள் கண்டுபிடித்திருக்கின்றன. எல் நினோ போன்றவை காற்று மாசை மேலும் தீவிரமாக்கலாம். இது மக்களின் வாழ்வாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி அவர்களின் சராசரி ஆயுட்காலத்திற்கு முன்பாகவே அவர்களுடடைய உயிரை பறிக்கிறது" என்று கூறியுள்ளார்.
இந்தியாவில் 1990களுக்கு பிறகு இந்தியாவில் புதிய பொருளாதார கொள்கை அமல்படுத்தப்பட்டது. இதன் பின்னர் தனியார் தொழிற்சாலைகளின் வரவு அதிகரித்தது. தொழிற்சாலைகளின் வரவுக்கு பின்னர் காற்று மாசு தொடர்ந்து அதிகரிக்க தொடங்கியது. தற்போது மின்சார வாகனங்கள் ஓரளவு பயன்பாட்டுக்கு வந்திருப்பதால். காற்று மாசு ஓரளவுக்கு குறைந்திருக்கிறது. இருப்பினும் இன்னும் இந்த மாசு ஆபத்தான அளவில்தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications