சிங்கப்பூரில் இந்திய பெண்ணுக்கு லட்சக்கணக்கில் அபராதம்.. இந்தியர்களே இந்த தவறை மட்டும் செய்யாதீங்க!
சிங்கப்பூர்: இந்தியர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று. கை நிறைய சம்பளம், ஏராளமான வேலை வாய்ப்புகள் என சிங்கப்பூர் இந்தியர்களை வரவேற்கிறது. ஆனால், அங்கு போன பின்னர் அந்நாட்டுக்கு ஏற்றார் போல மாறவில்லை எனில், கஷ்டம்தான். அப்படித்தான் இந்திய பெண் ஒருவருக்கு லட்சக்கணக்கில் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவை சேர்ந்தவர் சண்முகநாதன் ஷாம்லா. ரொம்ப காலத்திற்கு முன்னதாகவே சிங்கப்பூர் சென்று இவர் செட்டில் ஆகவிட்டார். ஆனால், அங்குள்ள சட்டங்களை பின்பற்றுவதில் இவர் இன்னும் கவனமாக இருந்திருக்க வேண்டும்.

இவர் சிங்கப்பூரின் தோ பயோ பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களாக இவர் காட்டு பறவைகளுக்கு உணவளித்து வந்திருக்கிறார். காட்டு பறவை எனில், கழுகு, மயில் என நினைக்க வேண்டாம். சாதாரண புறாவுக்குதான் இவர் தானியங்களை போட்டிருக்கிறார்.
ஆம் சிங்கப்பூரை பொறுத்தவரை புறாக்கள் காட்டு பறவையாகும். அதற்கு உணவளிக்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது. புறாக்களுக்கு உணவு கொடுப்பதன் மூலம் அது, இயற்கையாக உணவு தேடுவதை விட்டுவிட்டு, ஒரே இடத்தில் அதிக அளவில் வாழ தொடங்குகின்றன. குறிப்பாக நகர்ப்புறங்களில் புறாக்கள் எண்ணிக்கை அதிகரிப்பதால், அதன் எச்சம் மூலம் சுவாச கோளாறு மற்றும் பூஞ்சை பரவும் பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. எனவேதான் புறாக்களின் எண்ணிக்கையை அந்நாட்டு அரசு கன்ட்ரோலில் வைத்திருக்கிறது.
இந்த கட்டுப்பாட்டை பின்பற்ற, புறாக்களுக்கு உணவளிப்பவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த பிரச்சனையில்தான் இந்திய பெண்மணி ஷாம்லா சிக்கியிருக்கிறார்.
இவர் மீது கடந்த 2025ம் ஆண்டே குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது. அப்போ அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இருப்பினும் கையை வைத்துக்கொண்டு சும்மா இருக்காத ஷாம்லா, மீண்டும் மீண்டும் புறாக்களுக்கு உணவளித்துள்ளார். பாரி வள்ளல் என நினைப்பு போல.. இதை பார்த்த அதிகாரிகள் உடனடியாக ஷாம்லாவை கைது செய்தனர்.
ஆனால் கைது செய்த போது, நான் திருந்திவிட்டேன் என்னை விட்டுவிடுங்கள் என்று அந்நாட்டு எம்பியிடம் கூறியிருக்கிறார். இருப்பினும் அடுத்த 3 நாட்களில் மீண்டும் புறாவுக்கு உணவளித்திருக்கிறார். இதை பார்த்த அதிகாரிகள் வீடியோ ஆதாரத்துடன் ஷாம்லாவை கைது செய்திருக்கின்றனர். இதனையடுத்து ஷாம்லாவுக்கு ரூ.2.26 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.
நான் வேலையில்லாதவர், எனக்கு வயது 71 ஆகிறது. எனவே என்னுடைய அபராதத்தை குறைக்க வேண்டும் என்று நீதிபதிகளிடம் ஷாம்லா கேட்டுக்கொண்டார். இப்படி கேட்டுக்கொண்டதால்தான் அபராதம் குறைக்கப்பட்டிருக்கிறது. இல்லையெனில் ரூ.6 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications