சிங்கப்பூருக்கும் மன்னார்குடிக்கும் என்ன தொடர்பு? எதற்காக லீ குவான் யூவுக்கு சிலை? இது தான் விஷயம்!
சிங்கப்பூர்: சிங்கப்பூரின் தந்தை என்றழைக்கப்படும் லீ குவான் யூவுக்கு மன்னார்குடியில் சிலையும் அவரது பெயரில் நூலகமும் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ள நிலையில் மன்னார்குடிக்கும், சிங்கப்பூருக்கும் என்ன தொடர்பு என்ற கேள்வி பலருக்கும் எழும்.
மன்னார்குடி சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் சிங்கப்பூருடன் தொடர்பு உண்டு என்பது தான் இதில் ஹைலைட்.
ஒரு சிறிய தீவாக இருந்த சிங்கப்பூரை மிகக் குறுகிய காலத்தில் பொருளாதார வளர்ச்சி, தொழில் முன்னேற்றம், கட்டுமானம், கப்பல்துறை, விமானப் போக்குவரத்து முதலிய பலவற்றில் உலகமே வியக்கும் வகையில் முன்னேற்றத்துக்கு வித்திட்டவர் சிங்கப்பூரின் முதல் பிரதமரான லீ குவான் யூ.

தமிழர்கள் மீது அளவுகடந்த நேசம் வைத்திருந்த லீ குவான் யூ தமிழர்களுக்கு ஏராளமான சலுகைகளையும், உரிமைகளையும் கொடுத்து பாதுகாத்தவர்.
தமிழர்களின் உழைப்பையும் அறிவாற்றலையும் கண்டு உரிய அங்கீகாரம் கொடுத்ததோடு மதிப்புடன் நடத்தியவர் லீ குவான் யூ. அதனால் தான் இன்று சிங்கப்பூரில் தமிழர்கள் பலரும் அமைச்சர்கள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள், தொழிலதிபர்கள், மருத்துவர்கள் என பல உயர்ந்த பதவிகளில் இருந்து வருகிறார்கள்.
சிங்கப்பூரின் ஆரம்பகால வளர்ச்சிக்கு உறுதுணையாக நின்ற தமிழர்களில் பெரும்பாலானோர் மன்னார்குடி சுற்றுவட்டார கிராமத்தினர் தான்.
கட்டுமான தொழிலாளர், துறைமுக பணியாளர், ஷாப்பிங் மால் விற்பனையாளர், மென் பொருள் பொறியாளர்கள், என சகலவிதமான துறைகளிலும் தமிழர்களின் பங்களிப்பு அதிகம்.

இதனால் தான் சீனர்களுக்கு நிகராக தமிழர்களுக்கு தமிழ் ஆட்சி மொழி உள்ளிட்ட பல உரிமைகளை வாரி வழங்கினார் லீ குவான் யூ.
இவர் மறைந்த போது மன்னார்குடி சுற்றுவட்டார கிராமமக்கள் இங்கிருந்தவாறே அவருக்கு இரங்கல் பேரணி நடத்தியதுடன் மண் வீட்டில் வசித்த எங்களை மாடி வீட்டில் வசிக்க வைத்த தெய்வமே என நன்றிணர்வுடன் பேனர்கள் வைத்தனர்.
சிங்கப்பூருக்கும் மன்னார்குடிக்கும் உள்ள தொடர்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது உரையில் குறிப்பிட்டுள்ள விவரம் வருமாறு;
''சிங்கப்பூரில் அண்ணாவின் உரையைக் கேட்ட லீ குவான் யூ, அண்ணாவை தனது மூத்த சகோதரர் என்று பாசத்தோடு குறிப்பிட்டார். அதுமட்டுமல்ல, தனது அலுவலகத்துக்கு அண்ணாவை அழைத்துச் சென்று விருந்து கொடுத்தார். அதனால்தான் லீ குவான் யூ இறந்தபோது சிங்கப்பூரின் நாயகன் என்று போற்றினார் கலைஞர்.
ஆகவே ஒரு மகிழ்ச்சியான செய்தியை இந்த நேரத்தில் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். லீ குவான் யூ அவர்களுக்கு தமிழ்நாட்டில் நினைவுச் சின்னம் எழுப்ப நாங்கள் முடிவு செய்து இருக்கிறோம்.

இது தமிழ்நாட்டில் மன்னார்குடியில் அமைய இருக்கிறது. சிங்கப்பூரில் வசிக்கும் தமிழர்களில் பெரும்பகுதியினர் மன்னார்குடி, பட்டுக்கோட்டை பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.
அங்குள்ள பரவாக்கோட்டை, கூப்பாச்சிக்கோட்டை, திருமக்கோட்டை, உள்ளிக்கோட்டை, மேலத்திருப்பாலக்குடி, கீழத்திருப்பாலக்குடி, ஆலங்கோட்டை நெடுவாக்கோட்டை, மேலவாசல் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் சிங்கப்பூருடன் தொடர்பு உண்டு என்பதை நான் நன்றாக அறிவேன்.
இந்தக் கிராமங்களில் இருந்து வந்தவர்கள் தான் அதிகம். எனவே, லீ குவான் யூ பெயரால் நூலகமும் சிலையும் மன்னார்குடியில் அமையும் என்பதை மகிழ்ச்சியுடன் நான் மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன்.
உங்களை உயர்த்தும் தமிழ்நாட்டை உயர்த்த நீங்கள் அனைவரும் கைக்கோக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.''












Click it and Unblock the Notifications