நடிகர் ரித்தீஷை ஞாபகம் இருக்கா.. கோடம்பாக்கத்தின் "கொடைவள்ளல்".. இப்ப மனைவிக்கு ஜெயில் தண்டனை வேற
சிவகங்கை: பிரபல நடிகர் ஜேகே ரித்தீஷ் ஞாபகம் இருக்கா.. ஒருகாலத்தில் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், தற்போது முக்கிய தீர்ப்பு ஒன்றை காரைக்குடி கோர்ட் அறிவித்துள்ளது.
முரட்டு மீசையுடன் சினிமாவில் காலடி வைத்தபோதே புகழுடன் வந்தவர் ரித்தீஷ். சிறிது நாளில் புரட்சி நாயகன், அதிரடி மன்னன் என்ற அடைமொழிகளோடு வலம் வந்தார்.
தன்னை அடையாளப்படுத்தி கொள்ள எத்தனையோ விதமான விளம்பரங்களை செய்து கொண்டாலும், கணக்குப் பார்க்காமல் அள்ளிக் கொடுப்பவர் என்ற பெயரையும் பெற்றார்.

கோடம்பாக்கம் வள்ளல்: இன்னும் சொல்லப்போனால் கோடம்பாக்கத்தின் "கொடைவள்ளல்" என்று கூட இவரை சொல்வார்கள். அதேபோல அரசியலிலும் கால் பதித்தார். திமுக, அதிமுக என இரண்டிலுமே உள்ளே நுழைந்து ஒரு கலக்கு கலக்கினார். 2009-ம் ஆண்டு திமுக ஆட்சியில் ராமநாதபுரம் எம்பியாகவும் உயர்ந்தார் ரித்தீஷ்! அதன் பிறகு திமுகவில் இருந்து மு.க.அழகிரி நீக்கப்பட்டதால், அவரது ஆதரவாளராக செயல்பட்டவர், பிறகு திமுக-வில் இருந்து விலகி 2014ம் ஆண்டு அதிமுக-வில் இணைந்தார்.
அதனால்தான் இவர் அனைவருக்கும் மறைமுகமாக பல உதவிகளை செய்தபோதுகூட, முதல்வர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரனின் பினாமியாக இருந்தபோது கொடுத்த பணத்தை வைத்துக்கொண்டுதான் இப்படியெல்லாம் தண்ணீராக செலவழிக்கிறார் என்றெல்லாம் விமர்சனம் செய்யப்பட்டார்.. ஆனால், இவரது மரணம் அப்போது மிகப்பெரும் பரபரப்பை கிளப்பிவிட்டது..
கடந்த 2016-ம் ஆண்டு ரித்தீஷூக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டார் என்ற செய்தியும் வெளியானது. அதற்கு பிறகு நடந்த மக்களவைத் தேர்தலுக்காக ராமநாதபுரம் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக ராமநாதபுரம் சென்றிருந்ததாக தெரிகிறது. சம்பவத்தன்று, அவரது வீட்டில் மதிய உணவு சாப்பிட்ட ரித்தீஷ் ஓய்வெடுத்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டது..

இதயத்துடிப்பு: இதனால் உறவினர்கள் பதறியடித்து கொண்டு, மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.. ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே ரித்தீஷ் இறந்துவிட்டதாக சொன்னார்கள். இதையடுத்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் ரித்தீஷை வீட்டுக்கு கொண்டு சென்றனர்.. ஆனால் வீட்டுக்குப் போன பிறகுதான் தெரிந்தது, அவருக்கு இதயத் துடிப்பு இருந்துள்ளது.. இதனால் மறுபடியும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்..
ரித்தீஷ்: ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். ரித்தீஷ் மாரடைப்பால் காலமான செய்தி அறிந்து சினிமா மற்றும் அரசியல் வட்டாரங்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.. இதற்கு பிறகு ரித்தீஷ் பற்றின தகவலும், செய்தியும் எங்குமே வரவில்லை. இந்நிலையில், மோசடி வழக்கு தொடர்பாக செய்தி ஒன்று வெளியாகி உள்ளது.
இவரது மனைவி பெயர் ஜோதீஸ்வரி.. 41 வயதாகிறது. காரைக்குடியில் நகைத்தொழில் செய்து வரும் நகைப் பட்டறை உரிமையாளரான திருச்செல்வம் என்பவரிடம் கடந்த 2019 ம் ஆண்டு 60 லட்சம் ரூபாய்க்கு தங்க நகைகள் வைரம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் வாங்கியுள்ளார். இதற்காக தலா 20 லட்சம் மதிப்பில் 3 காசோலைகளை திருச்செல்வத்திடம் அவர் கொடுத்துள்ளார். அந்த காசோலைகளை வங்கியில் செலுத்தியபோது அதில் பணம் இல்லாதது தெரிய வந்தது.

ஜெயில் தண்டனை: இது குறித்து திருச்செல்வம் கேட்டபோது அதற்குப் பதிலாக பணம் தருவதாக ஜோதீஸ்வரி சொன்னதாக தெரிகிறது.. ஆனால், பணம் தராமல் இழுத்தடித்திருக்கிறார். எனவே, இது தொடர்பாக காரைக்குடி விரைவு நீதிமன்றத்தில் திருச்செல்வம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதி ஜெயப்பிரதா விசாரித்துள்ளார்..
தற்போது, ஜோதீஸ்வரிக்கு 60 லட்சம் அபராதம் மற்றும் 6 மாத சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்... இது காரைக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரித்தீஷ் மனைவிக்கு 6 மாத சிறைத் தண்டனையும், ரூ.60 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது..!!












Click it and Unblock the Notifications