நள்ளிரவில் வீடு புகுந்து பயங்கரம்.. காவல்துறை என்று ஒன்று செயல்படுகிறதா? இல்லையா? அண்ணாமலை கேள்வி!
சிவகங்கை: சிவகங்கையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரை அரிவாளால் கொடூரமாக வெட்டிவிட்டு, வீட்டில் உள்ள நகை பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அதுகுறித்து அண்ணாமலை தமிழக அரசை விமர்சித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே கல்லுவழி கிராமத்தில் வசித்து வருபவர்கள் சின்னப்பன் - உபகாரமேரி தம்பதி. இவர்களது மகன் ஜேக்கப் பாரி கடந்த சில வருடங்களாக வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இதனால் ஜேக்கப்பின் மனைவி அரசி, தனது 12 வயது மகள் ஜெர்லின் மற்றும் 8 வயது மகன் ஜோபின் ஆகியோருடன் மாமனார் வீட்டில் வசித்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று நள்ளிரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் சின்னப்பனின் வீட்டிற்குள் புகுந்துள்ளனர். அங்கு தூங்கி கொண்டிருந்த இரண்டு குழந்தைகள் உட்பட 5 பேரையும் அரிவாளால் வெட்டி கொடூரமாக தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் 5 பேரும் ரத்த வெள்ளத்தில் சுயநினைவிழந்து சரிந்தனர். பின்னர், ஒரு சிறுவன் அருகில் வசிக்கும் ஒருவருக்கு செல்போன் மூலம் தகவல் அளிக்கவே, அவர்கள் விரைந்து வந்து 5 பேரையும் தூக்கிச் சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர்.
நள்ளிரவில் வீடு புகுந்து தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளையர்களின் இந்த அட்டகாசத்தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இச்சம்பவம் தொடர்பாக தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகில் உள்ள கல்லுவழி என்ற கிராமத்தில், நள்ளிரவில் வீடு புகுந்து, தூங்கிக்கொண்டிருந்த இரண்டு சிறார்கள் உள்ளிட்ட 5 பேரை கொடூரமாக வெட்டி, நகை பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. திமுக ஆட்சியில், பொதுமக்கள் உயிர்ப் பாதுகாப்பு என்பது மிகப்பெரும் கேள்விக்குரியதாகியிருக்கிறது. சட்டம் ஒழுங்கு இதை விடக் கீழ்நிலைக்குச் செல்ல முடியாது என்றிருக்கையில், தினந்தோறும் நடைபெறும் குற்றச் சம்பவங்கள், சட்டம் ஒழுங்கை இன்னும் மோசமான நிலைக்குக் கொண்டு செல்கின்றன.
சட்டம் ஒழுங்கு எனது நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் என்று கூறிய முதலமைச்சர் ஸ்டாலின், யாருக்கோ கண்டனம் தெரிவித்துக் கொண்டிருக்கிறார். திமுக அரசின் கையாலாகாத்தனத்தால், காவல்துறை என்று ஒன்று செயல்படுகிறதா என்ற கேள்வி, பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஒரு அரசின் அடிப்படைக் கடமையான, சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றத் திறனற்ற முதலமைச்சர் ஸ்டாலின், இந்த மாடல் அரசுக்கு என்ன பெயர் வைக்கப் போகிறார்?” என குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications