"குலுங்குது" சிவகங்கை.. "துரோகி" என அலறிய நபரால், பதறிய எடப்பாடி.. "முகத்தை பாத்தாலே".. சீறிய தலைவர்
சிவகங்கையில் இன்று ஒரே நாளில் எடப்பாடி + ஓபிஎஸ் இரு தரப்பினருமே குவிந்துள்ளதால் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது
சிவகங்கை: ஒரே நாளில், ஒரே இடத்தில், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் இரு தரப்பினரும் குவிந்துள்ளதால், சிவகங்கையே பரபரத்து காணப்படுகிறது.
ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி என 2 தரப்பிலுமே இன்று ஒரே நாளில் ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் நடத்துவதாக சொல்லி எஸ்பியிடம் அனுமதி கேட்டார்கள்.
ஆனால் சட்ட ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனை எதிர்த்து 2 தரப்பினருமே மதுரை ஹைகோர்ட்டுக்கு சென்றார்கள்..

பளீர் பழனிசாமி
இதனை விசாரித்த நீதிமன்றம், ஆர்ப்பாட்டத்தால் எந்த வித சட்டஓழுங்கு பிரச்சனையும் ஏற்படாது என்று மனுதாரர்கள் சிவகங்கை டிஎஸ்பியிடம் உறுதிமொழி பத்திரம் வழங்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி அளித்தது. இதையடுத்து, ஓபிஎஸ் தரப்பினர் காலை 10.30. முதல் 12.30 வரை அரண்மனை வாயிலில் ஆர்ப்பாட்டம் நடத்தவும், பழனிசாமி தரப்பு மாலை 6 மணிக்கு பொதுக்கூட்டம் நடத்தவும் காவல்துறை அனுமதி வழங்கியது. இதனையொட்டி சிவகங்கையில் இருதரப்பினரின் கொண்டாட்டங்களும் கிளம்பின..

லைவ் சேட்டிங்
ஓபிஎஸ் + எடப்பாடியை வரவேற்க இருபிரிவிலும், போஸ்டர்கள், பேனர்கள் வைத்தனர்.. மற்றொருபக்கம், எடப்பாடி பழனிசாமி வருகையை கண்டித்து ஓபிஎஸ் தரப்பில் பல இடங்களில் போஸ்டர்களும் ஒட்டப்பட்டிருந்தன.. 2 தலைவர்களும் ஒரே இடத்துக்கு வருவதால் போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.. மதுரை விமான நிலைய ஓடுதளத்தில் பேருந்தில் சென்றபோது, எடப்பாடியுடன் பயணித்த பயணி ஒருவர், தன்னுடைய செல்போன் மூலமாக திடீரென ஃபேஸ்புக்கில் லைவ் சென்றார்.. அந்த லைவ் நிகழ்ச்சியில் அவர் பேசவும் ஆரம்பித்துவிட்டார்..

அண்ணன் துரோகம்
அதில், இப்போது நம்முடன் நமது எதிர்க்கட்சித் தலைவர் அண்ணன் துரோகத்தின் அடையாளம் எடப்பாடியாருடன் பயணித்துக் கொண்டிருக்கிறேன்... அண்ணன் எடப்பாடியார், துரோகத்தின் அடையாளம், சின்னம்மாவிற்கு துரோகம் செய்தவர், 10.5 சதவீதத்தை தென்நாட்டு மக்களுக்கு எதிராக அளித்தவர் என்றார்.. இந்த நபர் இவ்வாறு பேசிக் கொண்டிருந்தபோதே, எடப்பாடி பழனிசாமியுடன் பாதுகாப்பிற்கு வந்த போலீஸார் இதை கவனித்துவிட்டு, செல்போனை பறித்தனர்.. இதனால், அந்த பஸ்ஸுக்குள்ளேயே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அந்த நபரை போலீசார் கைது செய்து விசாரித்தபோது, சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள வையாபுரிபட்டியைச் சேர்ந்த ராஜேஸ்வரன் என்பது தெரியவந்தது..

ஆக்ரோஷம்
இதுஒருபக்கம் என்றால், எடப்பாடி பழனிசாமி வந்த பஸ்ஸிலேயே இன்னொரு ஆக்ரோஷ முழக்கம் ஏற்பட்டது.. அவர் சசிகலா ஆதரவாளர் என்கிறார்கள்.. "சின்னம்மாவிற்கு துரோகத்தை செய்தவர். 10.5 சதவீத இட ஒதுக்கீடு தென்னாட்டவர்களுக்கு கொடுத்தவர்" என்றெல்லாம் ஆக்ரோஷமாக எடப்பாடிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்.. இந்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. ஏற்கனவே, ஓபிஎஸ் + டிடிவி தினகரன் + சசிகலா தரப்பினரிடம் எடப்பாடி பழனிசாமி மோதல் போக்கை கடைப்பிடித்து வரும்நிலையில், இடைத்தேர்தல் சமயத்தில் இந்த கசப்பு அதிகமாகிவிட்டது. கடைசிவரை, இவர்கள் யாரையுமே எடப்பாடி தரப்பு பிரச்சாரம் செய்ய அழைக்கவில்லை.

சீனியர் கோபம்
முறைப்படி அழைப்பு விடுக்காத நிலையில், இந்த 3 பேருமே ஈரோட்டுக்கு செல்லவும் இல்லை.. பாஜகவாவது அழைப்பு விடுக்கும் என்று காத்திருந்தவர்களுக்கு அதிர்ச்சிதான் மிஞ்சியது.. இதனால், இந்த தலைவர்களின், மொத்த ஆதரவாளர்களும், தொண்டர்களும் கொதிப்பில் உள்ளனர்.. அந்த ஆதங்கத்தைதான், இன்றைய தினம் ஒரே நாளில், ஓபிஎஸ் + சசிகலா தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமி மீதான எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். மதுரை ஏர்போர்ட்டில் நடந்த சம்பவம் குறித்து ஓபிஎஸ் ஆதரவாளரும், மூத்த தலைவருமான மருது அழகுராஜ் கருத்து கூறியுள்ளார்..

துரோகி பழனிசாமி
அதில், "எடப்பாடி பழனிசாமி முகத்தை பார்த்தாலே துரோகத்தை நினைத்து கோபம் வரும்.. தமிழ்நாடு முழுவதும் அவருக்கு எதிராக எதிர்ப்பு வரும்.. அதிமுக தொண்டர்கள் மட்டுமல்ல, பொதுமக்களும், பழனிசாமிக்கு எதிராகவே இருக்கிறார்கள்.. அவருக்கு மக்கள் மத்தியில் உள்ள எதிர்ப்பின் வெளிப்பாடுதான், இன்று விமான நிலையத்தில் வெளிப்பட்டுள்ளது.. அதிமுகவை சாதி கட்சியாக பழனிசாமி மாற்றிவிட்டார்.. எடப்பாடி பழனிசாமி செல்லும் இடமெல்லாம் எதிர்ப்பு எழும்" என்றார்..

குலுங்குது மதுரை
இந்த முறை இடைத்தேர்தல் விவகாரத்தில் தங்களை பாராமுகமாக நடத்திய பாஜக மீது ஓபிஎஸ் தரப்பு அதிருப்தியில் உள்ளது.. அண்ணாமலையை கண்டித்து தீர்மானமும் இயற்றும் அளவுக்கு சென்றுவிட்டது. தங்களை பாஜக கழட்டிவிட்டதே என்ற கோபத்தில்தான், நாங்கள் மக்களிடம் செல்லபோகிறோம், மக்களை சந்திக்க போகிறோம் என்று மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியிருந்தார். அதன்படியே இன்றைய தினம் ஓபிஎஸ் தரப்பு ஆர்ப்பாட்டத்தையும் முன்னெடுத்துள்ளது.. ஒருபக்கம் பாஜக + மறுபக்கம் எடப்பாடி பழனிசாமி என இரு தரப்புக்குமே தங்கள் பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஓபிஎஸ் டீமுக்கு ஏற்பட்டுள்ளது. அதன்வெளிப்பாடுதான், இன்றைய மதுரை ஏர்போர்ட் மற்றும் சிவகங்கையில் நடந்து வரும் நிகழ்வுகள் பார்க்கப்பட்டு வருகின்றன..!!!

காசு வெட்டி
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசியிருந்த மருது அழகுராஜ், சாபம் விடுத்து பேசியிருந்தார்.. "மதுரை ஏர்போர்ட்டில் ஆவேசமாக சீறியது அதிமுக தொண்டன் கிடையாது.. பழனிசாமி முகத்தை பார்த்த உடனேயே இதுமாதிரி கோபங்கள் வருகிறது... வயிறெரிச்சலோடு சொல்கிறோம். இங்கு வந்த கூட்டம் எல்லாம் கொல்லங்குடி காளியம்மன் கோயிலுக்கு சென்று காசை வெட்டி போட்டுவிட்டுத்தான் போவோம்... சசிகலா அவர்கள் நல்லவரோ, கெட்டவரோ எடப்பாடிக்கு முதலமைச்சர் பதவி கொடுத்தார்கள், அவரை நாய் என்றும் தினகரனுக்கு இந்த கட்சிக்கும் என்ன சம்பந்தம் என்று சொன்னார்..

நிழலும் நிஜமும்
ஓபிஎஸ் காலை சுற்றி வந்துவிட்டு இப்போது ஆட்சி போனதுடன் ஓபிஎஸை ஒழிக என சொல்கிறார்... இந்த நன்றி கெட்ட மனிதருக்கு நல்லது செய்யும் வரிசையில் தற்போது அண்ணாமலை கவுண்டரும் இணைந்துள்ளார்... ஒருவேளை இவர் நமது இனத்தை சேர்ந்தவர் அவர் நமக்கு உண்மையாக இருப்பார் என்று நினைக்கலாம்.. துரோகத்திற்கு இனம் கிடையாது. எடப்பாடியை பொறுத்தவரை துரோகத்தில் ஊறி இருக்கும் நச்சுப்பாம்பு" என்று ஆவேசமாக கூறியிருந்தார்.. வழக்கமாக, கடும் விமர்சனங்களை வைத்தாலும், கோப வார்த்தைகளை பயன்படுத்தாத மருது அழகுராஜ், இன்றைய தினம், வயிறெரிந்து சாபமே விட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications