பாஜகவின் ‘ஆபரேசன் சவுத்’.. காரைக்குடியில் மாநாடு! வருகிறார் நட்டா.. களத்தில் ‘கருப்பு’ - ராஜா எங்க?
காரைக்குடி: 2024 மக்களவை தேர்தலுக்கு தயாராகி வரும் பாஜக தென்னிந்தியாவில் அதிகளவிலான இடங்களில் வெற்றிபெற திட்டமிட்டு உள்ள நிலையில் அவர் காரைக்குடியில் நடைபெற உள்ள மாநாட்டில் கலந்துகொள்ள இருக்கிறார்.
கடந்த ஜூலை மாதம் ஐதராபாத்தில் நடைபெற்ற பாஜக செயற்குழு கூட்டத்தில் ஆபரேசன் சவுத் இந்தியா திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா அறிவித்தார்.
அன்றில் இருந்தே தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் பாஜகவை வளர்க்கும் பணிகளில் அக்கட்சி முழு வீச்சில் இறங்கியுள்ளது. மத்திய அமைச்சர்களும் பாஜக தலைவர்கள் அடிக்கடி தென்னிந்தியா வருகை தருகின்றனர்.

தென் இந்திய பயணங்கள்
வரும் 2024 நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கான முன் தயாரிப்பு பணிகளையும் இப்போதே தொடங்கி இருக்கிறது பாரதிய ஜனதா கட்சி. குறுகிய கால இடைவெளியில் பிரதமர் நரேந்திர மோடி 2 முறை தமிழ்நாடுக்கு வந்து சென்று இருக்கிறார். இதேபோல் கேரளா, தெலுங்கானாவுக்கு அமித்ஷா அண்மையில் சென்றார்.

காரைக்குடி வரும் ஜே.பி.நட்டா
இந்த நிலையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இம்மாதம் கட்சிப் பணிகளுக்காக தமிழ்நாடு வர இருக்கிறார். இம்மாதம் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு வரும் ஜே.பி.நட்டா சிவகங்கை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சி நிகழ்வுகளில் கலந்துகொள்ள உள்ளார். அப்போது காரைக்குடியின் நடக்கும் கட்சி மாநாட்டில் ஜே.பி.நட்டா கலந்துகொள்ள உள்ளார்.

அண்ணாமலை அறிவுறுத்தல்
இது குறித்த ஏற்பாடுகளில் பாஜக மாநில நிர்வாகம் தீவிரமாக இறங்கியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் கமலாலயத்தில் நடைபெற்ற மூத்த நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் ஜே.பி.நட்டாவுக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிப்பது குறித்தும், பூத் கமிட்டிகளையும் உருவாக்குவது குறித்து மாநில பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதாக கூறப்படுகிறது.

திடலில் ஆய்வு
இந்த நிலையில் காரைக்குடியில் ஜே.பி.நட்டா கலந்துகொள்ள இருக்கும் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் மற்றும் மாவட்ட கட்சித் தலைவர்கள் நேரில் சென்று பார்வையிட்டனர். காரைக்குடி என்றால் பாஜகவில் நினைவுக்கு வரும் எச்.ராஜா இந்த ஆய்வின்போது உடன் இல்லை.

எச்.ராஜாவுக்காக பிரச்சாரம்
முன்னதாக கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்காக தமிழ்நாட்டில் பிரச்சாரம் செய்ய வந்த பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா காரைக்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு எச்.ராஜாவுக்கு ஆதரவு கேட்டு உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications