தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லையா.. நிரூபிக்க தயாரா? எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் சவால்
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்திற்கு ஆய்வு செய்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று மன்னர் துரைசிங்கம் கல்லூரி வளாகத்தில் நடந்து வரும் நிகழ்ச்சியில் 40 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதேபோல் கவிஞர் முடியரசனுக்கு சிலை அமைக்க அடிக்கல் நாட்டிய மு.க.ஸ்டாலின், ரூ.1.6 கோடியில் மருது சகோதரர்களுக்கு சிலை அமைக்கவும் அடிக்கல் நாட்டினார்.
இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், சிவகங்கையில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் திமுக ஆட்சியில் கட்டிக் கொடுக்கப்பட்டது. புதிய நகராட்சி கட்டிடம், மகளிர் கல்லூர் தொடங்கப்பட்டது திமுக ஆட்சியில் தான். எல்லோருக்கும் எல்லாம் என்ற நோக்கில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

அதனால் தான் ஒவ்வொருவரின் குடும்பத்திலும் அண்ணனாக, தந்தையாக, மகனாக, உறவாக, உடன்பிறப்பாக இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கிறேன். சிவகங்கை மாவட்டத்தில் 3 ஆண்டுகளில் மட்டும் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து புள்ளி விவரங்களுடன் பேசி வருகிறேன்.
இதனை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியால் தாங்கி கொள்ள முடியவில்லை. இதனால் வாய்க்கு வந்தபடி, பொத்தாம் பொதுவாக வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று புலம்பி கொண்டிருக்கிறார். 20% அளவுக்கு கூட எரிச்சலுடன் புலம்புகிறார். வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்ற குற்றச்சாட்டுகளை எடப்பாடி பழனிசாமியால் நிரூபிக்க முடியுமா?
திண்ணையில் உட்கார்ந்து கொண்டு வெட்டிப் பேச்சு பேசுவதை போல் வாய்க்கு வந்தபடி எதிர்க்கட்சித் தலைவர் பேசலாமா? மக்கள் மத்தியில் உண்மையை எடுத்து சொல்ல வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது. 2021 சட்டமன்றத் தேர்தலின் போது திமுக சார்பாக 505 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டது. அந்த 505 வாக்குறுதிகளில், 389 வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம்.
இன்னும் 116 வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம். அரசின் 34 துறைகளில், ஒவ்வொரு துறையிலும் 2 முதல் 3 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டிய நிலை உள்ளது என்பதை ஒப்புக் கொள்கிறோம். இதனை தெரியாதது போல் எதிர்க்கட்சித் தலைவர் பேசி கொண்டிருக்கிறார். அவர் இன்னொரு கட்சியின் தலைவர் அறிக்கையை காப்பி, பேஸ்ட் செய்து பேசிக் கொண்டிருக்கிறார்.
2011 மற்றும் 2016 ஆகிய சட்டமன்றத் தேர்தலின் போது அதிமுக சார்பில் அளிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்ட நாள், அதற்கான அரசாணை, அதனால் பயனடைந்தோர் விவரம் உள்ளிட்டவற்றை பட்டியலிட்டு எடப்பாடி பழனிசாமி வெளியிடத் தயாரா? புதுப்புது கதைகளுடன் வந்து கொண்டே இருக்கிறார். குடும்ப அட்டைத்தாரர்களுக்கு செல்ஃபோன் கொடுத்தார்களா?
58 வயதிற்கு மேலானவர்களுக்கு இலவச பேருந்து பயணம் என்று கூறினார்கள். வெற்று வாக்குறுதிகளை கொடுத்து தமிழக வளர்ச்சியை பாழாக்கியவர்கள் அதிமுக. தமிழ்நாடு திவாலானது என்று சாதாரணமாக இபிஎஸ் சொல்கிறார். தமிழக அரசு செய்வதை வெட்டி செலவு என்கிறார். மகளிர் உரிமைத் தொகை, காலை உணவு திட்டத்தை வெட்டி செலவு என்கிறாரா?
எதை கொச்சைப்படுத்தி எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். நீங்கள் போடும் எல்லா கணக்கும் தப்புக் கணக்கு தான். திமுக ஆட்சிக்கு 13 அமாவாசை தான் இருப்பதாக காலண்டரை கிழிக்கிறார். நேற்று சிவகங்கை வந்ததில் இருந்து மக்கள் கொடுக்கும் வரவேற்பையும், மக்கள் முகத்தில் உள்ள மகிழ்ச்சியையும் பார்க்கும் போது தமிழ்நாட்டை திமுக தான் என்றும் ஆளும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications