கருணாநிதி இடத்தை எந்தக் கொம்பனாலும் நிரப்ப முடியாது.. முதல்வர் ஸ்டாலின் பேச்சு!
சிவகங்கை: ''கலைஞர்'' இடத்தை நான் நிரப்பிவிட்டேன் என என்றும் சொல்லமாட்டேன் என்றும் அவரது இடத்தை யாராலும், எந்தக் கொம்பனாலும் நிரப்பிட முடியாது எனவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வழக்கமாக அரசுத் திட்டங்கள் மற்றும் சாதனைகளை பற்றி மட்டுமே பேசும் அவர், சிவகங்கை மாவட்டம் காரையூரில் நடைபெற்ற அரசு விழாவில் சற்று மனம் திறந்து கருணாநிதி பற்றியும் பேசினார்.

நேரில் பயணம்
''ஒவ்வொரு மாவட்டமாக நானே நேரடியாகச் சென்று மக்களை சந்தித்து வருகிறேன். செல்லும் இடமெல்லாம், வழியெங்கும் சாலையோரங்களில் மக்கள் நின்று கொண்டு, மகிழ்ச்சியுடன் கையை அசைத்து, கரகொலி எழுப்பி, வணக்கம் செலுத்தி, ஆர்வத்தோடு அவர்களையெல்லாம் பார்க்கிறபோது, இதுதான் இந்த ஆட்சிக்கும், எனக்கும் தரப்படக்கூடிய நற்சான்று என்று நான் கருதுகிறேன்.''

மக்கள் சந்திப்பு
''சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் இருந்ததைவிட, இப்போது அதிகமான அளவு, மூன்று மடங்கு, நான்கு மடங்கு எழுச்சி இன்றைக்கு மக்களிடத்தில் ஏற்பட்டிருக்கிறது. காரணம் என்ன? மக்களுக்கு மிகமிக உண்மையாக இருப்பது, மக்களுக்கு நேர்மையான ஆட்சியை வழங்குவது தான் இதற்கு முக்கியக் காரணம்.தேர்தலுக்கு முன்னால், எப்படி மக்களைச் சந்தித்து வந்தேனோ, அதைவிட அதிகமாகவே இப்போது நான் மக்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறேன். மக்களைத் தொடர்ச்சியாகச் சந்திப்பது, ஆட்சியாளர்களின் மிக முக்கியமான இலக்கணமாக நான் கருதுகிறேன்.''

கருணாநிதி இடம்
''தலைவர் கலைஞர் அவர்கள் இருந்த இடத்தை நான் நிரப்பிவிட்டேன் என்று சொல்லவில்லை. அவரது இடத்தை யாராலும், எந்தக் கொம்பனாலும் நிரப்பிட முடியாது. ஆனால் அவரைப் போலச் செயல்பட முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில், கடந்த ஓராண்டுகாலமாக என்னுடைய செயல்பாடு அமைந்துள்ளது. சொன்னார்களே, நம்பர் 1 முதலமைச்சர் ஆக, நம்பர் 1, நம்பர் 2, அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை. தமிழ்நாடு நம்பர் 1-க்கு வர வேண்டும்.''

நம்பிக்கையை காப்பாற்றுவேன்
''தமிழ்ச் சமுதாயத்துக்கு என்னால் முடிந்தவரை உழைத்துவிட்டேன். எனக்குப் பிறகு யார் என்று கேட்டால், தம்பி ஸ்டாலின்தான்' என்று தலைவர் கலைஞர் அவர்கள் ஒரு முறை சொன்னார். அந்த நம்பிக்கையை இந்த ஓராண்டுகாலத்தில் நான் காப்பாற்றி இருக்கிறேன். இனியும் தொடர்ந்து நான் காப்பாற்றுவேன்! அதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.'' இவ்வாறு அவர் பேசியிருந்தார்.












Click it and Unblock the Notifications