சிவகங்கை ஆர்எஸ்எஸ் நிர்வாகி வீட்டில் நாட்டு வெடிகுண்டுகள் வீச்சு.. கேட்டில் பறந்த விசிக கொடி! ஷாக்
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள ஆர்எஸ்எஸ் நிர்வாகியும், லோக் அதாலத் கமிட்டி உறுப்பினருமான ராமசாமி வீட்டில் 3 நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டன.
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ஆர்எஸ்எஸ் நிர்வாகியான ராமசாமி, லோக் அதாலத் கமிட்டி உறுப்பினராக உள்ளார். இந்நிலையில் தான் அவரது வீட்டில் நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் வீட்டு முன்பக்க கண்ணாடிகளை உடைத்த மர்மநபர்கள் கேட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடியை நட்டுவிட்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள விசவனூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி. ஆர்எஸ்எஸ் நிர்வாகியான இவர் லோக் அதாலத் கமிட்டி உறுப்பினராக இருக்கிறார். தற்போது டெல்லியில் வசித்து வருகிறார்.
இவருக்கு விசவனூரிலும் வீடு உள்ளது. இந்நிலையில் தான் ராமசாமி டெல்லியில் இருந்து சொந்த ஊர் வந்திருந்தார். நேற்று ராமசாமி வீட்டில் ஓய்வெடுத்தார்.

நாட்டு வெடிகுண்டுகள் வீச்சு
இந்நிலையில் தான் நேற்று இரவு 3 நாட்டு வெடிகுண்டுகள் அவரது வீட்டில் வீசப்பட்டுள்ளன. இந்த வெடிகுண்டுகள் அதிர்ஷ்டவசமாக வெடிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மர்மநபர்கள் வீட்டு முன்பக்க கண்ணாடியை உடைத்துள்ளனர். மேலம் வீட்டின் சுவற்றில் கருப்பு மையை ஊற்றியுள்ளனர். அதோடு வீட்டு வாசலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடியை பறக்கவிட்டு சென்றுள்ளனர்.

போலீசில் புகார்
இந்நிலையில் தான் இன்று காலையில் வீட்டில் நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டதும், கண்ணாடிகள் உடைக்கப்பட்ட சம்பவமும் ராமசாமிக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக சாலை கிராமம் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணையை துவக்கினர். டிஎஸ்பி சிபி சாய் சவுந்தர்யன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.

போலீஸ் விசாரணை
மேலும் வெடிக்காத நாட்டு வெடிக்குண்டுகளை போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தில் யார் ஈடுபட்டனர்? எதற்காக ஈடுபட்டனர்? என்பது உடனடியாக தெரியவில்லை. இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் இளையான்குடி பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஆண்டு நடந்தது என்ன?
முன்னதாக கடந்த ஆண்டில் தமிழ்நாட்டில் கோவை, ஈரோடு, சேலம், மதுரை, சென்னை, கன்னியாகுமரி உள்பட பல இடங்களில் பாஜக அலுவலகம், ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளின் வீடுகளில் பெட்ரோல் குண்டு மற்றும் நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் தான் தற்போது சிவகங்கை மாவட்டத்தில் ஆர்எஸ்எஸ் நிர்வாகியும், லோக் அதாலத் உறுப்பினருமான ராமசாமி வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
