‘பி’ டீமை இறக்கி அதிமுகவை முடக்க நினைத்தால் திமுக என்ற கட்சியே இருக்காது: எடப்பாடி பழனிசாமி வார்னிங்
சிவகங்கையில் பேசிய எடப்பாடி பழனிசாமி திமுக அரசை கடுமையாக விமர்சித்தார்.
சிவகங்கை : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 'பி' டீமை வைத்துக்கொண்டு அதிமுகவை சிதைக்க நினைத்தால் திமுக என்ற கட்சியே எதிர்காலத்தில் இல்லாத நிலை உருவாகும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
நேற்று எடப்பாடி பழனிசாமி தலைமையில், சிவகங்கையில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதேசமயம் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓபிஎஸ் அணியினர் சிவகங்கையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இது பரபரப்பை ஏற்படுத்தியது.
மாலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் தந்தை கருணாநிதிக்கே சவால் விட்ட கட்சி அதிமுக எனவும் தெரிவித்தார்.
ஓ.பன்னீர்செல்வம் திமுகவின் பி டீமாக செயல்பட்டு அதிமுகவை முடக்க நினைப்பதாக ஈபிஎஸ் விமர்சித்துள்ளார்.

சிவகங்கையில் மீட்டிங்
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் சிவகங்கையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக சிவகங்கை சென்ற முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், ஆர்பி உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், ராஜேந்திர பாலாஜி, விஜயபாஸ்கர், செல்லூர் ராஜூ, பாஸ்கரன், காமராஜ், கோகுல இந்திரா மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் இந்தப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

அழிந்து போவார்கள்
இந்தப் பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, "ஒன்றரை கோடி தொண்டர்களைக் கொண்ட பிரதான எதிர்க்கட்சி அதிமுக. இந்தக் கட்சியை ஒடுக்கவோ, அழிக்கவோ நினைப்பவர்கள் அழிந்து போவார்கள். நான் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். என்னைப் போன்று இந்த மேடையில் அமர்ந்திருப்பவர்களும் சாதாரணக் குடும்பத்திலிருந்து வந்தவர்கள்தான். நாங்கள் அனைவரும் தொண்டர்களுக்காகவும் மக்களுக்காகவும் உழைத்து முன்னேறியிருக்கிறோம். திமுகவைப் போல கொள்ளையடிக்கவில்லை. மக்களின் உள்ளங்களை வென்று முன்னேறியிருக்கிறோம்.

திமுகவுக்கு பி டீம்
எங்கள் மீது திமுகவினர் எத்தனை வழக்குகளைப் போட்டாலும், அத்தனை வழக்குகளையும் சந்திப்போம். இன்று தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை ஆட்சி நடக்கிறது. இதனை மக்களிடம் சென்று சொல்லிவிடுவோம் என்கிற பயத்தில் நமது கூட்டத்தை நடத்தவிடாமல் தடுத்து வருகின்றனர். இந்த மண் வீரம் செறிந்த மண். வீரமங்கை வேலு நாச்சியார் ஆட்சி செய்த மண். இந்த மண்ணைச் சேர்ந்த வீரம் செறிந்தவர்களின் துணையுடன் விரைவில் அதிமுக ஆட்சியை அமைப்போம். திமுகவுக்கு 'பி' டீம் ஒன்று இருக்கிறது. ஜெயலலிதா பிறந்தநாள் என்று என்பதைக்கூட அறியாதவர்கள், எங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்.

திமுக என்ற கட்சியே இருக்காது
'பி' டீமை வைத்துக்கொண்டு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை முடக்கிவிட நினைத்தால் முடியாது. பி டீமை வைத்துக் கொண்டு எங்களுக்கு இடையூறு அளிக்க நினைத்தால், எதிர்காலத்தில் திமுக என்ற கட்சியே இல்லாத நிலை ஏற்படும். ஏழை, எளிய மக்களின் வாழ்க்கையை உயர்த்திய இயக்கம் அதிமுக. எப்போது, ஆட்சிக்கு வந்தாலும் அதிமுகவை முடக்குவதை மட்டுமே திமுக வேலையாகச் செய்து வருகிறது. மக்களைப் பற்றி கவலைபடாமல், வேறு எந்தக் கட்சியும் 22 மாதங்களில் இவ்வளவு அவப்பெயர் பெற்றது கிடையாது. ஆனால், இந்த திமுக ஆட்சி 22 மாதங்களில் மிகப்பெரிய அவப்பெயரை பெற்றிருக்கிறது.

கார்ப்பரேட் கம்பெனி
திமு க ஆட்சியில் எந்த ஒரு நலத்திட்டமும் இல்லை. திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி. அதில் சேர்மன் ஆக ஸ்டாலின் இருக்கிறார். இயக்குநர்களாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும், கனிமொழியும் செயல்படுகிறார்கள். எனவே தமிழ்நாட்டை ஒரு கார்ப்பரேட் கம்பெனிதான் ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. அதனால்தான் மக்களுக்கு இந்த ஆட்சியால் எந்த நன்மையும் கிடைக்கவில்லை. திமுக ஆட்சியில் ஸ்டாலின் அவர் மகனை அமைச்சராக்கியதே மிகப்பெரிய சாதனை. உதயநிதி ஸ்டாலினால் 150 படங்கள் முடங்கியிருக்கின்றன. சினிமா படங்களை எல்லாம் குறைந்த விலைக்கு கேட்டதால் 150 படங்கள் பெட்டிக்குள் தூங்குகின்றன. அரசியலிலும் சம்பாதிக்கின்றனர். சினிமாவிலும் சம்பாதிக்கின்றனர்.

மூத்த அமைச்சர்கள் இல்லையா?
கடலில் 300 அடி தூரத்தில் ரூ.81 கோடியில் பேனா சிலை வைப்பது அவசியமா? அண்ணா அறிவாலயத்திலேயோ, கருணாநிதி நினைவிடத்திலேயோ, சிறிய அளவில் பேனா சிலை வைத்துவிட்டு, எழுதும் பேனாக்களை மாணவர்களுக்கு வழங்கலாமே? தற்போது எந்தத் திட்டமாக இருந்தாலும் அமைச்சர் உதயநிதிதான் அடிக்கல் நாட்டுகிறார். ஏன் கட்சியில் மூத்த அமைச்சர்கள் யாருமே இல்லையா? அரச பரம்பரையா ஸ்டாலின்? அவருக்குப் பிறகு அவர் மகன் என தொடர வேண்டுமா? திமுக போல் குடும்ப கட்சியல்ல அதிமுக. யார் வேண்டுமானாலும் கடுமையாக உழைத்தால் அதிமுகவில் உயர்ந்த பதவியை அடையலாம்.

இதுதான் உங்க சாதனை
ஸ்டாலின் அவர்களே.. நீங்கள் தலைவராக இருந்து பார்க்கிறீர்கள். நான் தொண்டனாக இருந்து பார்க்கிறேன். தொண்டனே ஒரு கட்சியை காக்க முடியும். தொண்டன்தான் ஒரு கட்சியின் உயிர்மூச்சு. அதிமுக என்பது தொண்டர்களால் ஆன கட்சி. தமிழ்நாடு முழுவதும் கொண்டுவரப்பட்ட அம்மா கிளினிக்கில் என்ன தவறைக் கண்டுபிடித்தீர்கள். அதனை மூடிவிட்டீர்கள். ஏழை எளிய கூலித் தொழிலாளிகளின் பிள்ளைகளுக்கு லேப்டாப் வழங்கினோம். அன்று அதைக் கண்டு நாடே வியந்தது. இப்படி அதிமுக ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களை முடக்கியதுதான் திமுக அரசின் 22 மாத சாதனை." என ஆக்ரோஷமாகப் பேசினார் எடப்பாடி பழனிசாமி.












Click it and Unblock the Notifications