சிக்கலில் ‛ஜனநாயகன்'.. விஜய்க்காக பிள்ளையார்பட்டியில் புஸ்ஸி ஆனந்த் செய்த செயல்.. கையில் என்ன அது?
சென்னை: நடிகர் விஜயின் கடைசி படமான ‛ஜனநாயகன்' திரைப்படத்துக்கு ‛சென்சார்' சான்று கிடைக்காததால் அந்த திரைப்படம் ஜனவரி 9ம் தேதி ரிலீஸில் இருந்து தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் ஜனநாயகன் திரைப்படத்துக்கான பிரச்சனைகள் விலகி விரைவில் வெளியாக வேண்டி தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி சிறப்பு வழிபாடு செய்தார்.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி உள்ளார். தமிழக சட்டசபை தேர்தலில் அவரது கட்சி களமிறங்க உள்ளார். இந்நிலையில் தான் விஜய் ‛ஜனநாயகன்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் அவரது கடைசி திரைப்படமாகும். முழு நேர அரசியலுக்கு வருகை தரும் நோக்கில் அவர் திரைப்படத்தில் இருந்து விலகுகிறார்.

‛ஜனநாயகன்' திரைப்படம் இன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் ஆனால் படத்துக்கான சென்சார் சான்று கிடைக்கவில்லை. இதனால் திரைப்படம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தேதி குறிப்பிடாமல் திரைப்படம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் கேவிஎன் புரோடக்சன் அறிவித்துள்ளது.
இந்நிலையில் தான் தவெகவின் பொதுச்செயலாளராக புஸ்ஸி ஆனந்த் நேற்று சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் உள்ள விநாயகர் கோவிக்கு சென்றார். மஞ்சள் நிற வேஷ்டி மற்றும் வெளிர் மஞ்சள் நிற சட்டை அணிந்திருந்து அவர் சாமி தரிசனம் செய்தார்.
அப்போது அவர் தனது கையில் ‛ஜனநாயகன்' திரைப்படத்தின் போஸ்டரை வைத்தும் வழிபாடு செய்தார். கோவிலில் உள்ள மருத மரத்தை வழிபட்ட புஸ்ஸி ஆனந்த் அதில் ஜனநாயகன் போஸ்டரை வைத்தார். அதுமட்டுமின்றி ‛ஜனநாயகன்' திரைப்படம் பிரச்சனையின்றி வெளியாக வேண்டி கோவில் வளாகத்தில் தேங்காய் உடைத்து வேண்டி கொண்டார்.
அதேபோல் மாநிலத்தின் பிற இடங்களிலும் தவெகவினர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர். அதன்படி கிருஷ்ணகிரி மத்திய மாவட்டம் சூளகிரி ஒன்றிய தவெக இளைஞரணி சார்பில் ஜனநாயகன் திரைப்படம் சிக்கலின்றி வெளியாக வேண்டியும், நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் வென்று விஜய் முதல்வராக வேண்டியும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
இதுதொடர்பாக அங்குள்ள குண்டுகுறுக்கி கிராமத்தில் அமைந்து இருக்கும் கங்கம்மன் கோவிலில் 108 தேங்காய் உடைத்து வழிபாடு நடத்தினர். மேலும் ஆடு வெட்டி சமைத்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கினர். இதுபற்றி தவெக நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‛‛விஜய் முதல்வராக வேண்டியும், ஜனநாயகன் திரைப்படம் சில பிரச்சனைகளால் தள்ளிப்போய் உள்ளது. அந்த பிரச்சனையை நாங்கள் கடவுளிடம் முறையிட்டு சீக்கிரமாக திரைப்படம் வெளியாக வேண்டும் என்று வேண்டி உள்ளோம்'' என்றார்.












Click it and Unblock the Notifications