Ajith kumar custody death: சஸ்பெண்ட் செய்யப்பட்ட டிஎஸ்பியிடம் நீதிபதி துருவித் துருவி விசாரணை!
சிவகங்கை: திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் காவல்துறை விசாரணையில் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பி சண்முகசுந்தரத்திடம் நீதிபதி இன்று விசாரணை நடத்தியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் கோயிலில் தற்காலிக காவலாளியாக பணியாற்றி வந்த அஜித் குமார், போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

திருப்புவனம் கஸ்டடி மரணம்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக வேலை செய்து வந்தவர் அஜித்குமார் (29). சில நாட்களுக்கு முன்பு இந்தக் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த நிகிதா என்ற பெண்ணின் காரில் இருந்த நகை காணாமல் போனதாக அப்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
மேலும் அவர் கோயிலுக்குள் செல்லும் போது காரின் சாவியை காவலாளி அஜித்குமாரிடம் வழங்கியதாக தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட அஜித் குமார் காவல்துறை விசாரணையில் உயிரிழந்தார். போலீசார் கடுமையாகத் தாக்கியதில் அஜித் குமார் பலியானார்.
பிரேதப் பரிசோதனை
இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அஜித்குமார் உடலை பிரேதப் பரிசோதனை மேற்கொண்ட போது, அவரை போலீசார் கடும் சித்திரவதை செய்ததற்கான அடையாளங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, மதுரை மாவட்ட 4-வது நீதிமன்ற நீதிபதி ஜான்சுந்தர்லால் சுரேஷை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
உயிரிழந்த காவலாளி அஜித்குமார் வழக்கு குறித்து மாவட்ட நீதிபதி ஜான்சுந்தர்லால் சுரேஷ், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று, பார்வையிட்டு, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார். நீதிபதியிடம் ஏடிஎஸ்பி சுகுமாறன், திருப்புவனம் காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார் ஆகியோர் வழக்கு தொடர்பான ஆவணங்களை அளித்தனர்.
நீதிபதி விசாரணை
அஜித் குமாரின் தாயார், சகோதரர், உறவினர்கள், போலீஸார், கோயில் பணியாளர்கள், ஆட்டோ ஓட்டுநர், அறநிலையத்துறை அதிகாரி, உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தி உள்ளார். 3-வது நாளான நேற்று அஜித்குமார் மரணம் தொடர்பாக திருப்புவனம் மற்றும் மதுரை அரசு மருத்துவமனை டாக்டர்கள் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர்.
டிஎஸ்பியிடம் விசாரணை
மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் திருப்புவனத்தில் 4-வது நாளாக இன்றும் நீதிபதி விசாரணை நடத்தி வருகிறார். இன்றைய விசாரணைக்கு பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பி சண்முகசுந்தரம் நேரில் ஆஜராகியுள்ளார். மேலும், ஏடிஎஸ்பி சுகுமாறன் உள்ளிட்ட போலீஸ் உயரதிகாரிகளிடமும் விசாரணை நடத்தி வருகிறார் நீதிபதி.
மேலும், திருப்புவனம் காவல் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமாரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பணியில் இருந்த போலீஸாரிடம் அரை மணி நேரம் விசாரித்தார். தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை ஆய்வு மாளிகையில் தங்கி மாவட்ட நீதிபதி விசாரணையை தொடர்ந்து வருகிறார்.
இன்னும் 2 நாட்கள்
ஐகோர்ட் கிளையில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், அதற்குள் அனைத்து சாட்சியங்களிடமும் விசாரணை நடத்தி முடிக்கப்படும் என தெரிகிறது. அதன்பின் அறிக்கை தயார் செய்யப்பட்டு அதனை 8 ஆம் தேதி நீதிபதி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே இந்த வழக்கில், மானாமதுரை துணை காவல் கண்காணிப்பாளராக இருந்த சண்முகசுந்தரத்தை பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு காவல்துறை உத்தரவு பிறப்பித்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஸ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். அஜித் குமார் விசாரணையின் போது தாக்கியதாக 5 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications